court

img

எஸ். முரளிதர் நியமனத்தையே இன்னும் ஏற்காத மோடி அரசு

புதுதில்லி, நவ. 25 - சென்னை உயர் நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி டி. ராஜா உட்பட 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்து, கொலீஜியம்  பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளும் ‘கொலீஜியம்’ அமைப்பின் கூட்டம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் வியாழனன்று கூடியது. இந்த கூட்ட முடிவிலேயே, 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. இதன்படி சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி டி.ராஜா ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி வி.எம். வேலுமணி கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கும், ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி டி. நாகார்ஜுன் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி டி. ரமேஷ் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கும், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி லலிதா கன்னேகந்தி கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கும், மற்றொரு தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஷேக்  ரெட்டி பாட்னா உயர் நீதிமன்றத்திற்கும் இடமாற்றப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சென்னை உயர் நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி டி. ராஜாவை, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள பரேஷ் உபாத்யாய் சென்னை உயர் நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார்.  இவை ஒருபுறமிருக்க, ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்து, உச்ச நீதிமன்ற  கொலீஜியம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதியே பரிந்துரை செய்தும், அதில் முடிவு எடுக்காமல் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இதனால் சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தலைமை நீதிபதி இல்லாத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

;