தண்டனை காலம் முடிந்தும் 4.5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்ட கைதிக்கு, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்தியப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டில் பாலியல் குற்றத்திற்காக சோஹன் சிங் எனபவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், தண்டனை காலம் 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆனால், தண்டனை காலம் தாண்டியும், 4.5 ஆண்டுகளுக்கு பிறகு சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, தண்டனைக் காலம் முடிவுற்றும் கூடுதல் காலம் சிறையில் இருந்த சோஹன் சிங்குக்கு மத்தியப் பிரதேச மாநில அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.