court

img

‘மத்திய விஸ்டா’ திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாம்.... பணிகள் தொடர்ந்து நடக்க அனுமதித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு....

புதுதில்லி:
மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், “மத்திய விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தக் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடக்கலாம்’’ என்று மனுவைத் தள்ளுபடி செய்து திங்களன்று தீர்ப்பளித்துள்ளது.

தில்லியில் கொரோனா 2 ஆவது அலை உச்சகட்டத்தை எட்டியபோது, தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தில்லியில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டது. அதை மேற்கோள்காட்டி மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தவும் உத்தரவிடக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் திங்களன்று தில்லிஉயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பாட்டீல், ஜோதி சிங் தலைமையிலான அமர்வு வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்துள்ளது.‘‘மத்திய விஸ்டா திட்டம் தொடர்ந்து நடப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதியளித்துள்ளது. ஆனால், இந்த மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுநல நோக்கோடு அல்ல.கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கலாம். ஒட்டுமொத்த மத்தியவிஸ்டா திட்டமும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. நாடாளுமன்றம் முழுமையாக இங்கு நடக்க வேண்டும்.

இந்தக் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன்தான் செயல்படுகிறார்கள். பணியாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால், இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரரின் மனுவில் உண்மைத்தன்மை இல்லாததால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம்’’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

;