court

img

அதானி குழும முறைகேடு வழக்கை செபியே விசாரிக்கும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பான வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை; இந்த வழக்கை செபியே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ‘ஹிண்டன்பர்க்  ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அளவில் கடன் பெற்றதாகவும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ.17 லட்சத்து  80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் 2-ஆம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து விசாரணை நடத்த செபிக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவுக்குள் செபி விசாரணையை நடத்தவில்லை என கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மனுதாரர்கள் தொடர்ந்தனர். மேலும் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், செபியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை; இந்த வழக்கை செபியே விசாரிக்கும் என தீர்ப்பளித்துள்ளது. 
மேலும், 24 புகார்களில் 22 புகார்கள் மீதான விசாரணையை செபி முடித்துவிட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 

;