மதுரை:
தமிழகத்தில், படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை தட்டான்குளம் பிரதான சாலை, மேலூர் சாலையில் பள்ளி அருகே அமைக்கப் பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற தமிழக அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் உத்தரவிடக் கோரி தாஹா முஹமது என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு செவ்வாயன்று பிறப்பித்த உத்தரவில், ‘‘பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் அருகேடாஸ்மாக் வைக்க அது ஒன்றும் மளிகைக் கடையோ, புத்தகக் கடையோ இல்லை. ஒட்டுமொத்த தமிழகமும் மதுவில் மூழ்கியுள்ளது. ஆனால் அது பற்றி மாநில அரசு கவலைப்படவில்லை” என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
மாநில ஆறுகளில் நீர் ஓடுகிறதோ இல்லையோ,மதுபானம் ஆறாக ஓடுகிறது. பூரண மதுவிலக்கை ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாகப் பார்க்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், குற்றங்கள் குறையும் தனிநபர் வருவாய் உயரும் குடிப்பவர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும். இது உட்பட மாநிலத்தில்பல்வேறு மேம்பாடுகள் ஏற்படும்.தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில், படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றுதமிழக அரசுக்கு அறிவுறுத்தியதோடு, நீதிமன்றத்தின் இந்த யோசனைகளை தமிழக அரசு உற்றுநோக்கிக் கவனிக்குமா என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் பிப்.28 ஆம் தேதிக்குப் பின்னர் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனத் தெரிவித்தது. நீதிபதிகள் கடை மாற்றப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.