court

img

உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே இயங்குவதை உறுதிசெய்க...

சென்னை:
தமிழ்நாட்டில்  உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயகணேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது..அப்போது, சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் செயல்படுவதாகக் கூறும் இடத்தை கனிமவளத்துறை கூடுதல் இயக்குநர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளதாகவும், அவருடைய அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில் , சமீபகாலங்களில் அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகள் செயல்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதை மாநில அரசு விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். செங்கல் சூளைகளுக்கு உரிமம் வழங்க வேண்டிய வழிமுறைகளை நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.இந்த வழக்கில் கனிமவளத்துறை கூடுதல் இயக்குநர் ஆய்வை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.