court

img

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மாணவியின் தந்தை கைது..... ஜாமீன் மனு நிராகரிப்பு-சிறையில் அடைக்க உத்தரவு....

சென்னை:
போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்த மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நவம்பர் 18ஆம் தேதி முதல் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்‌ஷாவின் சான்றிதழ்களை சரி பார்த்தனர். அப்போது, அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமேஎடுத்துள்ளார் என்பதும் போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தார் என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரக கூடுதல் இயக்குநர் செல்வராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பெரியமேடு காவல்துறையினர் மாணவி தீக்‌ஷா மற்றும் மாணவியின் தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தீக்‌ஷாவின் தந்தை பாலச்சந்திரன் போலி மதிப்பெண் சான்றிதழ் பெற உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு அவரை 2 முறை அழைத்தும் ஆஜராகவில்லை என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தலைமறைவாக இருந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், மாணவியின் தந்தை பாலச்சந்திரன் பெங்களூருவில் உள்ளஅவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் , பாலச்சந்திரனைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் போலி சான்றிதழ் எப்படி பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி, எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.இதையடுத்து அவரை ஜனவரி 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அப்போது ஜாமீன்கேட்டு பாலச்சந்திரன் மனு கொடுத்துள்ளார். அவரது மனுவை நிராகரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.