சென்னை:
போராட்டத்தில் ஈடுபட்டதால் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் மீதுகாவல்துறையினரால் போடப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து 10.09.2018 அன்று சென்னை அண்ணாசாலை அருகே உள்ள தாராப்பூர் டவர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், சிபிஐ (எம்-எல்) லிபரேசன் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார் மற்றும் சிபிஐ மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இடதுசாரி கட்சிகளின் போராட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது மக்களுக்கு இடையூறுசெய்ததாக கூறி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இந்திய தண்டனை சட்ட பிரிவு 143,188, 353 r/w 41 of Tamilnadu City Police Act-ன் கீழ் வழக்கு தொடுத்தார்.இதனை எதிர்த்து மேற்கண்ட நான்கு தலைவர்களும் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு(CRL.O.P.No.8225/2021) நீதிபதி சதீஸ்குமார் முன்பு ஜூன் 1 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது “இந்த வழக்கு நிலைக்கதக்கதல்ல என்றும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை” என்றும் கூறி இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வழக்கில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜரானார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.