குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சட்ட உதவி செய்யும் வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கிய விவகாரத்தில் சில மூத்த வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இந்த விவகாரம் வழக்கறிஞர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. வழக்கின் விசாரணையின் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகும் அல்லது அவர்களுக்கு சட்ட ரீதியிலான அறிவுரைகளை வழங்கும் வழக்கறிஞர்களுக்கு விசாரணை அதிகாரிகள் சம்மன் அனுப்பக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே அமலாக்கத்துறை சில வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அனைத்து சம்மன்களையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
 
                                    