court

img

கொல்கத்தா வழக்கு: செப்டம்பர் 17க்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவு!

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொலை வழக்கில், வரும் செப்டம்பர் 17-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொலை வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு மற்றும் சிபிஐ தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில், விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், வரும் செப்டம்பர் 17-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த அறிக்கையில், பாலியல் வன்கொலை செய்யப்பட்ட மருத்துவரின் இறப்புச் சான்றிதழ் மதியம் 1:47 மணிக்கு வழங்கப்பட்டதாகவும், அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என காவல் நிலையத்தில் மதியம் 2:55 மணிக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, போராடும் மருத்துவர்கள், நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. பணிக்குத் திரும்பாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்பும் மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று மேற்கு வங்க அரசு உறுதியளித்துள்ளது.
பெண் மருத்துவரின் புகைப்படத்தை உடனடியாக சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனைகளில் CCTVகளை பொருத்துவது, பெண்களுக்கு தனியாக கழிவறைகளை ஏற்படுத்தித் தருவது போன்ற நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.