தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 19-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதை அடுத்து தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2023-ஆம் மார்ச் 2-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் குழுவில் இடம்பெறும் வகையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு மாநிலங்களவையில் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி நிறைவேற்றியது. இம்மசோதாவை மக்களவை எம்.பி-க்கள் 100 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், விவாதமின்றி கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி மக்களவையில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்ற இரு அவையிலும் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, சட்டமாக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ கடந்த 2023 டிசம்பர் 28-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் நியமன குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சேர்க்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 18ஆம் தேதி, ஓய்வுபெறுகிறார். இந்த நிலையில், தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு வரும் 19-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.