புதுதில்லி:
மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க 12 பேர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்து அளிப்பது தொடர்பாக 12 பேர் குழுவை நியமிக்கிறோம். மேற்கு வங்க பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்மருத்துவர் பாபாதோஷ் பிஸ் வாஸ், டெல்லிசர் கங்காராம் மருத்துவமனை தலைவர் தேவேந்தர் சிங் ராணா, பெங்களூரு நாராயணா ஹெல்த்கேர் தலைவர் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, தமிழகத்தின் வேலூரில் செயல்படும் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ககன்தீப்,வேலூர் மருத்துவ கல்லூரி இயக்குநர் பீட்டர், குருகிராம் மேதாந்தா மருத்துவமனை தலைவர் நரேஷ், போர்டிஸ் மருத்துவமனை இயக்குநர் ராகுல் பண்டிட், டெல்லி சர் கங்காராம் மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் சவுமித்ரா ராவத், டெல்லி ஐஎல்பிஎஸ் மூத்த பேராசிரியர் சிவகுமார், மும்பை பிரிச் கேண்டி, இந்துஜா மருத்துவமனை இதயநோய் மருத்துவர் ஜாரிர் எப் உத்வாடியா மற்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர், கேபினட் செயலாளர் ஆகியோர் குழுவில் இடம்பெறுகின்றனர்.அனைத்து மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை நிபுணர் குழு ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக ஆக்சிஜன் பகிர்ந்து அளிக்கப்படும். தற்போதைய ஆக்சிஜன் இருப்பு, விநியோகம், எதிர்கால தேவை குறித்து நிபுணர் குழு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
ஆக்சிஜன் தேவை, விநியோகம் தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் துணைக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளை 12 பேர் குழு பரிசீலிக்கும். ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு முறையாக சென்று சேர்ந்ததா என்பதை நிபுணர் குழு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.