பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், குஜராத் அரசிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
குஜராத்தில் 2002-இல் நடந்த கலவரத்தின்போது, கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இவ்வழக்கின் குற்றவாளிகளுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 14 ஆண்டுகள் சிறை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகளை, கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது.
இதை அடுத்து பில்கிஸ் பானு, குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிம்னறத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில், "பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது எப்படி? குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது; அப்படி இருந்தும் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர், எப்படி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்கள். இதே விதியின்கீழ் வேறு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்துள்ளதா? குறிப்பிட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை?” என குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
மேலும், தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலைக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.