அகமதாபாத்:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப், இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 24-ஆம் தேதி இந்தியா வருகிறார். அமெரிக்க ஆயுத வியாபாரிகள் உட்பட அந்நாட்டு பெருமுதலாளிகளுக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவேற்றித்தரவே டிரம்ப் இந்த பயணத்தைமேற்கொள்கிறார்.
14 ஆயிரத்து 239 கோடி ரூபாய் மதிப்பில் ‘நாசாம்ஸ்’ வான் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் 18 ஆயிரத்து 510 கோடி ரூபாய் மதிப்பிலான ‘சீஹாக்’ ரக கடற்படை ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்பது தொடர்பான ஒப்பந்தங்கள் டிரம்ப் பயணத்தில் கையெழுத்தாக உள்ளன.இந்நிலையில், டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆனதற்குப் பிறகு, இப்போதுதான் முதன்முறையாக இந்தியாவருகிறார் என்பதால், அவருக்கு தடபுடலான வரவேற்பை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மின்னல் வேகத்தில் நரேந்திரமோடி அரசு துவங்கி விட்டது.டிரம்ப்பையும் அவரது மனைவி மெலனியாவையும் மகிழ்விக்கும் விதத்தில்வெளியுறவு அமைச்சக டுவிட்டர் பக்கத் தில் வீடியோ பதிவுகளை வெளியிட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, அதன் படி பல்வேறு தரப்பினரும், டிரம்பை வரவேற்று, தற்போது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். டிரம்பை வரவேற்கையில், அவரவர் பயன்படுத்தும் மொழியை குறிப்பிட வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியப் பயணத்தின்போது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ரூ. 700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை, பிரதமர் மோடியுடன் சேர்ந்து டிரம்ப் திறந்து வைக்கிறார். இதற்காக டிரம்ப் அகமதாபாத் வரும்போது, சர்தார்வல்லபாய் படேல் விமான நிலையத்தில் துவங்கி படேல் மைதானம் வரையில் ‘ரோட் ஷோ’ நடைபெறும் என்றும், அகமதாபாத் பள்ளி - கல்லூரி மாணவர்கள்மற்றும் ஆசிரியர்கள் பார்வையாளர் களாக பங்கேற்று, டிரம்ப்பை வரவேற்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள 16 கமிட்டிகள் உருவாக்கப் பட்டு, ஒவ்வொரு கமிட்டிக்கும் ஒரு மாவட்ட ஆட்சியர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவை ஒருபுறமிருக்க, டிரம்ப் வருகையை காரணம் காட்டி, அகமதாபாத்தில் இருக்கும் சேரிகளை (குடிசைகள்) மறைத்து, குஜராத் பாஜக அரசு சுவர் எழுப்பும் வேலையில் இறங்கியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காந்தி நகர் - அகமதாபாத் சாலையில் இருக்கும் தேவ் சரண் அல்லது சரணியாவாஸ் என்று அழைக்கப்படும் பகுதியானது, சேரிகள் (குடிசைகள்) நிறைந்ததாகும். சுமார் 500-க்கும் மேற்பட்ட குடிசைகள் இருக்கின்றன. 2500-க்கும் மேற்பட்டஏழை - எளிய மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அகமதாபாத் வரும் டிரம்ப், இந்தசாலையின் வழியாகத்தான்- குறிப்பாக, இந்திரா பாலத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்வரை, சுமார் 600 மீட்டர் தூரத்திற்குப் பயணம் செய்ய வேண்டும்.
அப்போது, இங்கிருக்கும் குடிசைகளும், குடிசைவாழ் மக்களும் டிரம்ப்பின்பார்வையில் தென்பட்டு விடலாம் என்பதாலேயே, குஜராத் பாஜக அரசு திட்டமிட்டு தடுப்புச் சுவர்களை எழுப்பத் துவங்கியுள்ளது. 6 முதல் 8 அடி உயரத்திற்கு இந்தச் சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் சபர்மதி ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் முழுமையாக வளர்ந்த பேரிச்சை மரங்களை நட்டுமறைக்கவும் முடிவுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.சேரி குடியிருப்பை மறைக்கவே,இந்த பகுதிகளில் சுவர் எழுப்பப்படுவதாகவும், இந்த கட்டுமானம் முடிந்தபிறகு இங்கே மரங்கள் வைக்கப்படும்என்றும் பெயர்கூற விரும்பாத அகமதாபாத் மாநகராட்சி அதிகாரி ஒருவரும் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.சொந்த மக்களையும், நாட்டையும் அவமானப்படுத்தும் மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே- அவரது மனைவிஅக்கி அபே ஆகியோர் வந்தபோதும் இதேபோல வேலைகள் நடந்ததாக கூறப்படுகிறது.