புதுதில்லி:
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கவும், அதுவரை முதுநிலை ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரியும் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 9 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வியாழனன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித்,எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு நடைபெற்றது.அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா ஆஜராகி வாதிடுகையில், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப முதுநிலை மருத்துவ ‘நீட்’ தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக கேரளத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு கேரளத்திலே தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும்.அதுவரை முதுநிலை மருத்துவ ‘நீட்’ தேர்வைதள்ளிவைக்க தேசிய கல்வி வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்பொழுது சூழல் மாறியுள்ளது. விமான போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை.கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பரவல்குறைய தொடங்கியுள்ளது.இதனையடுத்து,பயணம் செய்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, பேறுகாலத்தை நெருங்கிய 2 மருத்துவர்களுக்கு மட்டும் முதுநிலை மருத்துவ ‘நீட்’ தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டது. இதுபோன்ற வாய்ப்பு பிற மருத்துவர்களுக்கு வழங்க முடியாது என்றுதெரிவித்தனர். மேலும் மனுவை தள்ளுபடி செய்தனர்.