புதுதில்லி:
நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பங் கள் அனுப்பும் பணி கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கியது. மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்கள் எண்ணிக்கை 155 இருந்து 198ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனுப்புவது, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது, விண்ணப்ப கட்டணம் செலுத்துவது என அனைத்துப் பணிகளும் ஆகஸ்ட் 14ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. தற்போது மையங்கள் தயார் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. இதனிடையே சிபிஎஸ்இ தொடர்பான தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டன. இதனால் நீட் தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என்பதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திங்களன்று விசாரணை செய்தஉச்சநீதிமன்றம், “நீட் தேர்வை 16 லட்சம் மாண வர்கள் எழுதுகின்றனர். ஆனால் ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை ஒத்திவைக்க முடியாது. திட்டமிட்டபடி நீட் தேர்வு கட்டாயம் நடந்தே தீரும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.