புதுதில்லி:
ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் பற்றாக்குறை குறித்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தும் என்ற திடீர் முடிவுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றங்களே தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளது.
தில்லி, மும்பை, குஜராத், அகமதாபாத் உயர்நீதிமன்றங்கள், மருத்துவஏற்பாடுகள் பற்றாக்குறை வழக்குகளை விசாரித்து தினமும் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. மத்திய அரசு கொரோனாவை தடுக்ககையாளும் விதம் குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தன.இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அனைத்து மாநில வழக்குகளையும் விசாரிக்க முடிவு செய்து மத்திய ,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள்பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளது.உயர்நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரிக்கும்போது அந்தந்த மாநில நிர்வாகத்திடமிருந்து காலதாமதமின்றி தகவல்களைப் பெறமுடியும். மாநில சூழ்நிலையைப் பொறுத்து பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு சிகிச்சையளிப்பதில் ஏற்படும் சிரமங்களை உடனடியாகஅகற்றுவதற்கான வழிமுறைகளை யும், உத்தரவுகளையும் சிறப்பாக பிறப்பிக்க முடியும்.
தற்போது உயர்நீதிமன்றங்கள் அந்தப் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்றம் அனைத்து மாநில வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கும் முடிவை கைவிட வேண்டும். உயர் நீதிமன்றங்களே தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. தில்லி, மும்பை, கர்நாடக உயர்நீதிமன்றங்கள் இன்றும் மருத்துவப் பற்றாக்குறை வழக்குகளை விசாரித்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. உச்சநீதிமன்ற முடிவை மத்தியஅரசு வழக்கறிஞர் மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார்.
அப்போது, வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரையில் வழக்கு விசாரணை தொடரும் என்றுகூறி மும்பை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தினார்.மத்திய பா.ஜ.க அரசுக்கு சாதகமாக நடக்க முயல்வதாக உச்சநீதிமன்றத்தின் முடிவை சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.