புதுதில்லி:
5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரதமர்மோடி பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகம், அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில், சில மாநிலங்களில் மே மாதமும், சில மாநிலங்களில் ஜூன் மாதமும்மாநில அரசின் பதவி காலம் முடிவடைகிறது. ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது. எனவே, 5 மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் முடியும் நிலையில் தான் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். எனவே, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். பிரதமர் நாட்டு மக்களுக்கு பொதுவானவர் என்பதால், 5 மாநில தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.