court

7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு....

சென்னை:
7.5‌ விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தனியார் பள்ளி மாணவர்கள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்கும் விதமாக 7.5 விழுக்காடு  உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக எம்.பி.பி.எஸ் படிப்பிலும், பி.டி.எஸ் படிப்பிலும் 405 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கவுள்ளது.முதற்கட்டமாக கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய மருத்துவ கலந்தாய்வின் போது, 18 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.இந்த ஒதுக்கீடு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பலன் பெற்றுள்ளதாகவும், மருத்துவர்களின் தரம் பாதிக்கப்படும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.