court

img

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை நீடிக்கும்: உயர்நீதிமன்றம்...

சென்னை:
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஜங்லி கேம்ஸ்’ நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு திங்களன்று (டிச. 7) நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல எனவும்; திறமையை வளர்க்கும் விளையாட்டு எனவும் கடந்த 1968ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், தங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தியும் செலுத்தாமலும் விளையாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படாத நிலையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் மட்டுமே தடை விதிக்கப்பட்டது தவறானது எனவும் வாதிடப்பட்டது.உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், ரம்மி விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது என்பதால்,ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும்; மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு தொடர்பாக டிசம்பர் 21ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.