சென்னை:
நெடுஞ்சாலைத் துறையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிரப்பக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை கண்டறிவதற்காக உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.இக்குழு அளித்த அறிக்கையில், ஆதி திராவிடர்களுக்கான 1,234 பணியிடங்கள், பழங்குடியினருக்கான 614 பணியிடங்கள் என மொத்தம் 1,848 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், குறிப்பாக நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் 166 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பின்னடைவு காலிப் பணியிடங் களை நிரப்ப தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 கண்காணிப்பு பொறியாளர்களுக்கும், 20 மண்டல பொறியாளர்களுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைகள் துறை இயக்குநர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தும், இதுவரை இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை எஸ்சி,எஸ்டி பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், அலுவலக காவலர், எழுத்தர், ஓட்டுநர் பின்னடைவு காலி பணியிடங்களை குறிப் பிட்ட காலக்கெடுவுக்குள் நிரப்பும்படி தமிழ் நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு உத்தரவிடும்படி கோரிக்கை வைக்கப் பட்டது.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்களன்று (டிச.28) விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.