பொதுஇடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முன்னதாக, மதுரை அமர்வு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், கடந்த ஜனவரியில், பொதுஇடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி, கொடிக்கம்பங்களை அகற்றும் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதற்கு எதிராக, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இன்று நடைபெற்ற விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமை பெற்றுள்ள நிலையில், அவற்றை பொதுவெளியில் காட்சிப்படுத்த தடைவிதிப்பது, அந்த நோக்கத்தையே சீர்குலைக்கும்”எனக் கருத்து தெரிவித்ததுடன், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.