court

img

வேளாண் சட்டங்களில் உள்ள சிக்கலுக்கு  தீர்வுகாண அரசு, விவசாயிகளைக் கொண்ட குழு அமைத்திடுக.... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நாடு முழுவதும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசு சார்பில் பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்துப் பேசலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்  ஆலோசனை தெரிவித்துள்ளது. 

தில்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா, வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் பாரிகர் உட்பட பாஜக ஆதரவுக் கும்பல்கள் சிலர், போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிர மணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு டிசம்பர் 16 புதனன்று காணொலி மூலம்  விசாரணை நடைபெற்றது.  மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது தலைமை நீதிபதி பாப்டே, “விவசாயிகளுடன், விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை இதுவரை பயனளிக்கவில்லைதானே” என்று கேட்டார். மேலும் விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  கடுமையான குளிரிலும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை கேட்க வேண்டும்.விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும். சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் எடுபடாது. மீண்டும் தோல்வியடையும். அதனால் மத்திய அரசின் பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். இந்த போராட்டம் விரைவில் ஒரு தேசிய பிரச்சனையாக மாறும். பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த மனுக்கள் மீது நாளைக்குள் (வியாழக்கிழமைக்குள்) பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் தில்லி, ஹரியானா மாநில  அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.