cinema

img

விசித்ர வனிதா பழமைக்கு எதிராக படித்த வர்க்கம் உருவாக்கிய சமூகத் திரைப்படம்

அந்த நாளின் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள், நாடக - சினிமா கதாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் ஆகப்பெரும் பாலானவர்கள் படித்த வழக்கறிஞர் களாகவோ, கல்லூரிகளில் பேராசிரியர் களாகவோ, பட்டதாரிகளாகவோதான் இருந்தார்கள். அவர்களின் குடும்பங்களும் உயர் அல்லது மத்தியதர வர்க்கப் பின்ன ணியைக் கொண்டவையாகவே பெரும்பாலும் இருந்தன. அந்நாளில் மேற்கத்தியக் கல்வி முறை நம் தேசத்தின் படித்த வர்க்கத்தி டையே கல்வியோடு கூடவே மேற்குலகக் கலை - இலக்கியங்களை நன்கு அறிமுகப்ப டுத்திடவும் தவறவில்லை. அதற்குமுன் நவீனக் கல்வியின், நவீன சிந்தனைகளின் வாசனையைக்கூட அறியாதவர்களாக இருந்தார்கள் நம் இந்தியர்கள். அது தான் நம் நாடகங்களின், சினிமாவின் நிலைமை யும், அந்த நிலையில்தான் டி.ஜி.ராக வாச்சாரியார், பம்மல் சம்பந்த முதலியார், ஏ.எஸ்.ஏ.சாமி, கே.ராம்நாத், எஸ்.டி.எஸ்.யோகி, ஏ.டி.கிருஷ்ணசாமி, கே.சுப்ரமணியம் போன்ற மிகச் சிறந்த கலை ஆளுமைகள் உருவானார்கள். இவர்களெல்லோரும் ஆங்கிலக் கல்வியால் தாக்கம் பெற்றவர்கள். இவர்களுள் கே.சுப்ரமணியம் முற்போக்குத் தமிழ் சினிமாவின் முன்னோடி என்று அறியப்படுகிறார்.  பேசாப்பட காலத்திலேயே திரைக்கதை எழுத வந்தவர் கே.சுப்ரமணியம். இவரின் சமூக விமர்சனங்கள் நிறைந்த அந்தநாள் திரைப்படம்தான் விசித்ர வனிதா. பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய நாடகம் ஷீ ஸ்டூப் டு கான்கர் என்பது. அந்த நாடகத்தின்பால் தன் மனதைப் பறிகொடுத்த சுப்ரமணியம் அதனைத் தழுவி எழுதிய திரைக்கதைதான் இந்த விசித்ர வனிதா. அந்த ஆங்கில நாடகம் கோல்ட்ஸ்மித்தின் தனிப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர் அதனை  முதலில் ஒரு கட்டுரையாகத்தான் எழுதினார்.  அதற்கு தி மிஸ்டேக்ஸ் ஆஃப் எ நைட் என்று பெயரிட்டிருந்தார் ஸ்மித். அது அந்நாளில் ஆங்கில தேசத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.

ஒருவரின் தவறான அடையாளங்கள் மக்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தி விடும்,  அது தவறான புரிதலையும் ஏற்படுத்தி விடும் என்கிற செய்தியை கே.சுப்ர மணியம் இந்தத் திரைப்படம் வாயிலாகச் சொல்லியிருந்தார். கதைப்படி, ஜமீன்தாரின் மகள் ஒருத்தி ஒரு பணக்கார இளைஞனைக் காதலிக்கிறாள். அவன் தங்கியிருக்கும் அறைக்கு உணவு எடுத்துச் செல்லும்  பணி யாளின் வேடத்தில் அவள் போகிறாள். அத னால் அவன் மனதை வெல்ல முயல்கிறாள். ஆனால் அந்தப் பணக்கார இளைஞனோ அவளை ஒரு உணவுவிடுதிப் பணியாளாகக் கருதி அலட்சியமாக நடக்கிறான். பின்னொருநாள் அந்த இளைஞன் அந்த ஜமீன்தாரையும் அவரது மகளையும் சந்திக்க வருகிறபோது அவர்களின் முட்டாள்  மருமகனால் தவறாக அவன் வழிநடத்தப்படு கிறான். இப்படியாக எதையும் தவறாகப் புரிந்துகொள்ளும் தன்மைகளால் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவையாக இந்தத் திரைப்படம் சொல்லிச் செல்கிறது. அதன் மூலமாக இந்தச் சமூகத்தின் பழைய சிந்தனைகளும் பழக்க வழக்கங்களும்கூட கேள்விக்குள்ளாகின்றன.   படத்தின் நாயகனாக தில்லியைச் சேர்ந்த அழகான புதுமுகம் எஸ்.கிருஷ்ண சாமி நடித்தார். நாயகி பி.எஸ்.சரோஜா. புளிமூட்டை ராமசாமி நாயகியின் அப்பாவான ஜமீன்தார். பி.ஏ.பெரியநாயகியும் கே.எஸ்.அங்கமுத்துவும் நடித்தார்கள். நாயகனாக நடித்த எஸ்.கிருஷ்ணமூர்த்தி பின்னாளில் சித்ரா என்ற பெயரில் சினிமா இதழ் ஒன்றைத் தொடங்கினார். அப்போது முதல் அவர் சித்ரா எஸ்.கிருஷ்ணசாமி ஆனார். பிறகு எம்.ஜி.ஆரின் தொழில் பங்காளியாகவும் அவர் மாறினார்.

காந்தியத்தின்மீது பற்றுக் கொண்டிருந்த கே.சுப்ரமணியத்தின் இந்த விசித்ர வனிதாவில் விடுதலைப் போரின் செய்திகளைச் சுமந்த பாடல்கள் இடம்பெற்றன. 1947இல் இந்திய  விடுதலைக்குப்பின் இந்தப் படம் வெளிவந்தது. பிஏ.பெரியநாயகி பாடிய பெரும்பாலான பாடல்களுக்கு மலையாளத் திரைத்துறையில் பிரபலமான பிரதர் லட்சு மணன் இசையமைத்திருந்தார். மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது.  படத்தின் சில பகுதிகளை மதுரையை அடுத்த திருநகரில் அமைந்திருந்த சித்ரகலா  மூவிடோன் ஸ்டூடியோவில் படமாக்கி யிருந்தார்கள். இந்த சித்ரகலா ஸ்டூடியோ வில்தான் சிங்கள மொழியின் முதல் பேசும்படம் உருவானது. அதனை உருவாக்கி யவர் ஒரு தமிழர். இது அதிகம் பேசப்படாத அரிய செய்தியாகும்.

அப்போது சிங்கள மொழியின் பெரும்பாலான படங்கள் இந்த  சித்ரகலாவில்தான் எடுக்கப்பட்டன. சென்னை யைவிட மதுரை கொழும்பு நகருக்கு மிக அருகில் இருப்பதாகக் கருதிய சுந்தரம் மதுர நாயகம் என்ற எஸ்.எம்.நாயகம் என்ற தமிழர்தான் கடவுனு பொரொந்துவ எனும் சிங்களத்தின் முதல் பேசும் படத்தை இந்த ஸ்டூடியோவில் எடுத்தார்.  சிறிது காலமே செயல்பட்ட இந்தப் படப்பிடிப்பு நிலையத்தை மேம்படுத்த எஸ்.எம். நாயகம் ஆர்வம் காட்டினார். இங்கே எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இந்த விசித்ர  வனிதாதான். இங்கு பணியாற்றிய முதல் இயக்குநர் கே.சுப்ரமணியம். விசித்ர வனிதா வின் மற்ற பகுதிகளை சென்னை நெப்டியூன் ஸ்டூடியோவில் எடுத்தார்கள். அதுதான் பல  மாற்றங்களைப் பெற்று, எம்ஜிஆரின் சத்யா  ஸ்டூடியோவாகவும், அதன் பின்னர் தற்போது  எம்ஜிஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகவும் ஆகியுள்ளது.  அந்த நாளில் சமூகத்தில் நிலவிய பல்வேறு பழமைச் சிந்தனைகளையும் பழக்க வழக்கங்களையும் நகைச்சுவையோடு பகடி  செய்த இந்த விசித்ர வனிதா திரைப்படம் புளிமூட்டை ராமசாமி மற்றும் சரோஜாவின் நல்ல நடிப்புக்காகவும் வெற்றிகரமாக ஓடி வசூலை ஈட்டியது. இதனை உருவாக்கிய கே.சுப்ரமணியம் படம் வெளிவந்த காலத்தி லேயே அவரின் படைப்புகளுக்காக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பழமைக்கு எதிராக படித்தவர்க்கம் உருவாக்கிய ஒரு சினிமாவாகவே இது கருதப்படுகிறது.