பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் ‘வணங்கான்’. அதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி யுள்ளது. கடந்த ஆண்டு சூர்யாவை வைத்து இயக்குநர் பாலா தொடங்கிய படம் ‘வணங்கான்’. முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்துமுடிந்தது. அந்த நிலையில் திடீரென படம் கைவிடப்பட்டது. பின்பு இதில் இருந்து சூர்யா விலகினார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை. பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அருண் விஜய் உடல் முழுவதும் சகதியுடன் வலது கையில் பெரியார் சிலையையும், இடது கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருப்பதுபோல காட்சி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.