cinema

img

கலைவாணரால் கொஞ்சம் பிழைத்துக் கொண்ட படம்...

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் உள்ள தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தொழில்நுட்பக் கல்வி பயின்றவர் மாணிக் லால் டாண்டன். இந்தியரான மாணிக் லால் நாடு திரும்பும்போது உடன் அழைத்துவந்தவர்தான் தமிழ் சினிமாவில் புதுமைச் சாதனைகள் பல செய்த எல்லிஸ் ஆர்.டங்கன். மாணிக் லால் டாண்டன் எல்லிஸ் ஆர்.டங்கனுடன் இணைந்து உருவாக்கிய தமிழ்ப்படம் தேவதாசி. பிரபல பிரெஞ்ச் எழுத்தாளர் அனடோல் பிரான்ஸ் எழுதிய தாய்ஸ் எனும் கதையின் தாக்கத்தினால் உருவானதுதான் இந்த தேவதாசி படக்கதையும். பிரெஞ்ச் ஒபேரா எனும் இசை நாடகமாகவும் மிகவும் பிரபலமானது அந்தக் கதை. முதலில் அது வங்கமொழியில் ஒரு நாவலாக வெளிவந்தது. அதனை எழுதிய கிதார் சர்மா, அதனை 1941-இல் சித்ரலேகா என்ற பெயரில் சினிமாவாகவும் எடுத்தார். அவரே அதனை 1960-இல் மீனாகுமாரியை நாயகியாக வைத்து மீண்டும் திரைப்படமாக்கினார். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இதுதான் தமிழில் தேவதாசியானது. அது அந்நாளில் பரபரப்பாகப் பேசப்பட்டது.  

    1948-இல் வெளிவந்து, 74 ஆண்டுகளைக் கடந்து, வரும் ஜனவரியில் 75-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கும் இந்த தேவதாசியை சுகுமார் பிக்சர்ஸ் தயாரித்தது. எல்லிஸ் ஆர். டங்கனுடன் இணைந்து மாணிக் லால் டாண்டன் இயக்கினார். பிரெஞ்ச் நாவலைத் தழுவி தமிழில் திரைக்கதையை எழுதியவர் பி.எஸ்.ராமையா. இன்றைய எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கல்லூரியாக இருக்கும் இடத்தில் இயங்கிவந்த நெப்டியூன் ஸ்டூடியோவில் படப்பிடிப்புகள் நடந்தன. இன்று நினைவில் இல்லாத லீலா மற்றும் கண்ணன் ஆகியோர் நடித்தார்கள். ஆர்.பாலசுப்ரமணியம், கே.எஸ்.அங்கமுத்து, டி.எஸ்.துரைராஜ் ஆகியோரும் இதில் நடித்தார்கள். பல காரணங்களால் படம் தயாரித்து முடிக்க மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. ரசிகர்கள் விரும்புவார்களா என்ற ஐயத்தால் இயக்குநரும் தயாரிப்பாளர்களும் காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டேயிருந்தார்கள்.   அப்படியும் முழு திருப்தி ஏற்படாமல் என்ன செய்தார்கள் தெரியுமா? அப்போதுதான் அவர்களுக்கு அந்த யோசனை தோன்றியது. ஆமாம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் இணையின் நகைச்சுவைப் பகுதியைத் தனியாக எடுத்து இந்தப் படத்துடன் இணைப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள் படக்குழுவினர். சுரங்களை அனாயசமாகப் பாடும் கர்நாடக இசைக் கலைஞராக நடித்தார் கலைவாணர். மதுரம் ஒரு பரதக் கலைஞராக நடித்தார்.  அந்த நாளில் இப்படித்தான் செய்தார்கள். ஒரு தமிழ் சினிமா போணியாகாமல் கிடந்தாலோ அல்லது தரத்தில் குறைவாகக் கருதப்பட்டாலோ உடனே கலைவாணரையும் மதுரத்தையும் அழைத்து இப்படி தனி டிராக் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்துவிடுவார்கள். அதனால், அந்தப் படத்தின் வணிக நோக்கம் உத்தரவாதமாக நிறைவேறிவிடும். நாடக உலகில் இந்த ஜோடியை இப்படியும் பயன்படுத்திக்கொள்வது வழக்கமாக இருந்தது. அதுவே சினிமாவிலும் தொடர்ந்தது. தேவதாசி படத்தில் கலைவாணர் -

மதுரம் ஜோடியின் நகைச்சுவையை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். தேவதாசி படத்தின் கதை இப்படி இருந்தது. வறுமைப்பட்ட பெண்ணொருத்தி தெருவில் பிச்சையெடுக்கிறாள். அவளைக் கண்ட புத்திக்கூர்மையுள்ள தேவதாசிப் பெண் அவளைத் தன்னோடு அழைத்துச் செல்கிறாள். அவளுக்கு தேவகுஞ்சரி என்று பெயரிடுகிறாள். பரதக் கலையையும் இன்னபிற நடனக் கலைகளையும் அவளுக்குக் கற்றுத்தருகிறாள். பணக்காரர்கள் பலரும் அவளது அழகால் கவரப்பட்டு அவளை அடைய நினைக்கிறார்கள். ஆனால் அவளது அந்த வளர்ப்புத் தாயோ அவளுக்காக அரசனின் வரவை எதிர்நோக்கியிருக்கிறாள்.

ஆனால், தேவகுஞ்சரி தனது நண்பனின்மீது காதல் கொள்கிறாள். அது நிலைமையைச் சிக்கலாக்குகிறது. அரசன் அவளைக் கடத்திக் கொண்டுபோகிறான். தன்னை ஏற்கும்படி வற்புறுத்துகிறான். அந்த நிலையில் அவளது காதலன் அவளை மீட்கிறான். விரைவிலேயே அரசன் துறவறம் மேற்கொண்டுவிட, காதலனின் கரம் பிடிக்கிறாள் தேவகுஞ்சரி.  காதலனின் நெஞ்சத்தில் நிறைந்தபோதிலும் அரசன் உள்ளத்திலிருந்தும் அவளைப் பற்றிய நினைவுகள் நீங்க மறுக்கின்றன. அரசனால் அவளை மறக்க முடியாமல் தவிக்கிறான். ஆன்மீக குரு அரசனின் மனதை மாற்ற முயன்றும் நடக்கவில்லை. இதனால் தேவகுஞ்சரி தன்னையே கடவுளுக்கு அர்ப்பணிக்கிறாள். அதனைத் தொடர்ந்து எவர் கண்ணிலும் சிந்தையிலும் தோன்றாதவகையில் மறைந்தும் போய்விடுகிறாள்.

தன்னைத் தானே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிடுவதால் அவள் தேவதாசியாகிறாள் என்கிறது இதன் கதை. பாபநாசம் ராஜகோபால ஐயருடன் உடுமலை நாராயண கவியும் இந்தப் படத்தின் பாடல்களை எழுதியிருந்தார்கள்.  அமெரிக்காவில் சினிமா நுட்பங்களைக் கற்றறிந்த இயக்குநர்கள் இருந்தும், பிரபலமான பிரெஞ்சுக் கதையைத் தழுவி இது உருவாக்கப்பட்டிருந்தாலும், கதையம்சத்தில் புதுமை இல்லாததால் அளவாகவே ஓடி, அளவாகவே வசூலைக் கண்டது இந்த தேவதாசி திரைப்படம். கலைவாணரால் கொஞ்சமேனும் பிழைத்துக்கொண்டது படம். கலைவாணர் - மதுரம் நகைச்சுவை ஜோடியின் பங்களிப்பு மட்டும் ரசிகர்கள் மனங்களில் நின்று, பேசுபொருளானது.

;