cinema

img

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.....

சென்னை:
தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் (வயது 61) மார்ச் 14 ஞாயிறன்று சென்னை யில் திடீரென்று காலமானார். அதிர்ச்சியளிக்கும் அவரது மறைவுக்கு திரைக்கலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். மார்ச் 11 ஆம் தேதி வீட்டிற்குச் சாப்பிடச் சென்றவர் நீண்ட நேரமாகத் திரும்பாததால் உதவியாளர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்சுயநினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எஸ்.பி.ஜனநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 14 அன்று காலை 10 மணியளவில் காலமானார்.

மார்க்சிய தத்துவம் மீது பிடிப்பு கொண்டவரான  எஸ்.பி.ஜனநாதன், மாமேதை  காரல் மார்க்ஸின் நினைவு தினத்தில் மறைந்துள்ளார். எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தினர்.தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959-ம் ஆண்டு மே 7-ம் தேதி பிறந்தவர் எஸ்.பி.ஜனநாதன்.தனது அறிமுகப் படமான இயற்கை திரைப்படத் திற்காக தேசிய விருது பெற்றவர்.  ஈ, பேராண்மை,புறம்போக்கு என்கிற  பொதுவுடைமை, பூலோகம், லாபம் திரைப்படங்களை இயக்கியவர்.  இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சிபிஎம் இரங்கல்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

திரை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் (61) கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு  ஏற்பட்டதின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படடு, தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைபலனின்றி மறைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அவர் இயக்கிய இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் தடம் பதித்தவை. அவர் இடதுசாரி சிந்தனையாளர். வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் வெளிவந்துகெண்டிருந்த நேரத்தில், முற்போக்கு கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி அக்கருத்துக்களை மக்கள் மனதில் பதியவைத்தவர். அவரது படைப்புகள் அனைத்துமே சமூக மாற்றம்குறித்து பேசுபவை. அவர் எளிமையானவர் மட்டுமல்ல மிகவும் மென்மையானவரும் கூட.  செங்கொடியை திரையில் காட்டவே சினிமாவுக்கு வந்தேன் என்றுதைரியமாக முழங்கியவர். அவரது இழப்பு திரைப்படஉலகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும்  திரைப்பட நண்பர் களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

படக்குறிப்பு : சென்னையில் காலமான முற்போக்கு திரைப்பட இயக்குநர்  எஸ்.பி. ஜனநாதன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் , மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தமுஎகச தலைவர்கள்  பிரகதீஷ்வரன் , இரா.தெ.முத்து, கி. அன்பரசன் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.
 

;