cinema

img

தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு....

மதுரை:
தமிழ் கல்வெட்டியல் பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்துக்குள் செய்து தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணிமாறன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் கல்வெட்டுக்கள், பனை ஓலை குறிப்புகள், அகழாய்வுப் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. பழம்பெரும்  வரலாற்றிற்கு ஆதாரமாக பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கப் பெற்றதால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு 1961 ஆம் ஆண்டு தொல்லியல் துறையில், கல்வெட்டியல் துறையை ஏற்படுத்தியது. இதன் முக்கிய பணி தமிழகத்தின் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது, அகழாய்வு செய்து பழம்பெருமைக்கு ஆதாரமாகத் திகழும் பொருட்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பது, பழமைக்கு ஆதாரமான கலை, சிற்பம் போன்றவற்றை பாதுகாப்பது, அவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பதிப்பித்து வெளியிடுவது ஆகியவையே.

பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை. ஆனால் அவை இன்றுவரை பதிப்பித்து வெளியிடப்படவில்லை.  ஆகவே மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுக்களை தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை அரசியலமைப்புச் சட்டப்படி,  நவீன தொழிநுட்ப முறையில் பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த  நிலையில், வியாழனன்று நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு உத்தரவை வெளியிட்டது.சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய உத்தரவிடப்படுகிறது. மேலும், தொல்லியல்துறை தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6  மாதத்திற்குள் மாற்ற வேண்டும். தொல்லியல்துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு  உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும். சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து தர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 

;