இந்திய சினிமாவின் மிக அழுத்தமான கலைஞர்களுள் முக்கியமானவர் திலீப் குமார். ‘சோக நாயகன்’ - என்று பெயரெடுத்திருந்தாலும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் மிளிர்ந்தவர் திலீப் குமார். மாறுபட்ட தனது நடிப்பால் இந்தி சினிமா ரசிகர்கள் மனங்களைக் கொள்ளைகொண்ட திலீப்பின் இயற்பெயர் முகமது யூசூப் கான். இன்றுவரையில் பாலிவுட்டில் ஆளுமை செலுத்திவரும் கான் குடும்பத்தின் முன்னோடி இவர்.
1944 ல் இவரது முதல் படமான ஜவார் பாட்டா வெளிவந்தது. தொடர்ந்து அந்தாஸ்,ஆன், தக், தேவதாஸ், ஆசாத், முகல் இ ஆசாம், கங்கா யமுனா, ராம் ஒளர் ஷியாம் உள்ளிட்ட 65 படங்களில் பணியாற்றிய திலீப் குமார் ஐந்து தலைமுறை காலம் பாலிவுட்டைத் தனது கலை ஈடுபாட்டால் ஆண்டார். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் - இன்றைய பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் குலாம் சர்வார் கான் - ஆயிஷா பேகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் 12 பேர். 1999 வரை தனது கலைப் பங்களிப்பைச் செய்திட்ட திலீப் குமார் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, 8 முறை ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். 2000 முதல் 2006 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
நோய்வாய்ப்பட்டு 2021 ஜூலை 7 புதனன்று மும்பையில் தனது 98 வது வயதில் காலமான திலீப் குமார், தனது தனித்துவமான முத்திரை நடிப்பால் ரசிகர்களின் நினைவுகளில் பலகாலம் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.