“அமெரிக்கன் மேட்” (2022 பிரைம் அமேசான்- ஆங்கிலத் திரைப்படம்)
காசு, பணம் மற்றும் சுகபோக வாழ்க்கைக் காக ஏகாதிபத்திய சதி அரசியலுக்கு ஏஜன் டாகச் செயல்பட்ட ஒருவனின் உண்மைக் கதை இது. 1976–1986 காலகட்டத்தில் மத்திய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட இடதுசாரி அரசுகளை சீர்குலைத்துக் கவிழ்க்க, சதிக்குழுக்களுக்கு உதவிசெய்கிறது சி.ஐ.ஏ; நிகரகுவாவில் இடதுசாரி சாண்டினிஸ்டா அரசுக்கு எதிரான காண்ட்ராஸ் கிளர்ச்சிக் குழுவுக்கு ஆயுதங்கள் வழங்க சி.ஐ.ஏ-வால் நியமிக்கப்பட்டவன் தான் பேரி சீல்;திறமை மிக்க விமானி. இவனைத் தவிர வேறு நால்வரையும் இப்பணிக்காக சிஐஏ நியமிக்கிறது. இவர்களுக்கு தனித்தனியே விமானங்கள் தரப்படுகின்றன; புலனாய்வு அமைப்புகள், ராடார்களை ஏமாற்றி ஈக்குவடார்,நிகரகுவா கொலம்பியா, பனாமா ஆகிய நாடுகளில் பறந்து இவர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்; குறிப்பாக நிகரகுவா காண்ட்ராஸ் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குகிறார்கள். காண்ட்ராஸ்டுக்களை அமெரிக்கா வரவழைத்துப் பயிற்சியும் அளிக்கிறார்கள். பேரிசீல் அவனது பணத்தேவைகளை அவனே பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சி.ஐ.ஏ அதிகாரி மான்டி கூறியதைச் சாக்காக வைத்து, கொலம்பிய போதை மாபியாக்களான ஜோர்ஜ் மற்றும் பாப்லோ வுடன் சேர்ந்து அமெரிக்காவுக்கே போதைப்பொருள் கடத்துகிறான். பிடிபட்டபோது சி.ஐ.ஏ அதிகாரி மாண்டியே இவனை மீட்கிறான்.
அவனது ஆலோசனைப்படி மீனா ஆர்கன்சாஸ் நகரில் தனி விமானதளம் கொண்ட மாளிகைக்கு மாறுகிறான்; சமூக சேவை முகமூடியில் நகர காவல் ஷெரீப்பை வசப்படுத்துகிறான். இந்நிலையில், பேரி சீலின் மச்சான் ஜெபி இவனிடம் வந்து சேர்கிறான். பேரி சீலின் பணத்தை வாரி இறைத்துச் செலவழிக்கும் இவனை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்கிறது. பேரிக்காக, கொலம்பிய மாஃபியாக்கள் அவனை விடுவிக்கின்றனர்; அதாவது அமெரிக்க நீதித்துறையில் கொலம்பியா போதை மாஃபியாக்கள் தலையீடு செய்வது தான் இங்கே கவனிக்கப் படவேண்டியது.எனினும் உண்மையை உளறக்கூடும் என அஞ்சி ஜெபியைக் கொன்றும் விடுகின்றனர். பேரி சீலைக் கண்காணித்த அமெரிக்கப் புலனாய்வுத் துறை அவனைக் கைது செய்கிறது. இப்போது சிஐஏ இவனைக் கைகழுவுகிறது. ஆனால் மாநில கவர்னர் கிளிண்டன் தலையீட்டின் பேரில் விடுதலையாகிறான்; மேலும் இப்போது அமெரிக்க வெள்ளைமாளிகையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் படுகிறான். நிகரகுவா அரசு மூலமாகத்தான் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுகிறது என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டித் தருமாறு பேரிசீல் பணிக்கப்படுகிறான். இந்த வேலையை அவன் நிறைவேற்றி காட்டுவதுதான் படத்தின் பிற்பகுதியாகும். கா ண்ட்ராஸ் போராட்ட குழுவின் இளைஞர்களுக்கு, சிஐஏ-யிடமிருந்து பெற்ற ஏ.கே.47 துப்பாக்கிகளை பேரி சீல் வழங்குகிறான். அந்த இளைஞர்கள் துப்பாக்கிகளை ஒரு பொருட்டாகப் பார்க்காமல், பேரி சீல் மீது பாய்ந்து, அவனது கூலிங்கிளாஸ், அவனது பூட்,சட்டை போன்ற அனைத்தையும் உருவிப் பிடுங்கிச் செல்வர்.
இது குறித்து சிஐஏ அதிகாரி மான்டியிடம்,பேரி சீல் விவாதிப்பான். “ராணுவத் தளவாடங்களின் மகிமை தெரியாத இந்த இளைஞர்கள், சரியான ஆட்கள் தானா?” எனக்கேட்பான். அதற்கு மான்டி,” அந்த இளைஞர்கள் ராணுவத்தளவாடங்கள் பயன்படுத்த தயாராகும் வரை அவர்களுக்கு தொடர்ந்து டெலிவரி செய்” எனக் கூறுவான். முதலில் போர்னோகிரபிக் புத்தகங்கள், மதுபானங்கள் என்று வழங்கி காண்ட்ராஸ் குழுவினரைத் தன்வசப் படுத்திய பின் துப்பாக்கிகளை வழங்குகிறான். சாதாரண இளைஞர்கள் எவ்வாறு மூளைச்சலவை செய்யப்படு கிறார்கள் என்பதை இக்காட்சி எளிதாக விவரிக்கிறது. போதைப்பொருள் கடத்தும் கொலம்பியா நாட்டு மாஃபியா ஜோர்ஜ்,சிஐஏ உளவாளியான பேரி சீலிடம், “உங்கள் நாட்டைச் சேர்ந்த டான் அடால்போ காலீரோ தான், நிகரகுவா நாட்டு ஆளும் சாண்டினிஸ்டா அரசை கவிழ்ப்பதற்கு, கா ண்ட்ராஸ்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பவன். ஆனால் கா ண்ட்ராஸ்ட்கள் உண்மை யில் அரசை எதிர்த்துப் போராட விரும்பவில்லை. இவர் களுடைய விருப்பம் எல்லாம் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதுதான். எனவே சிஐஏ-வால் நிகரகுவாவிற்கு அனுப்பப்படும் ஆயுதங்களை எங்களிடம் கொடு.எங்களுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது.இதற்காக நாங்கள் உன்னிடம் போதை பவுடரை தருகிறோம். இதனை கா ண்ட்ராஸ்ட்கள் வசம் ஒப்படை. இப்போதைப் பொருளை கா ண்ட்ராஸ்ட்கள்,கடல்மார்க்கமாக உங்கள் நாட்டு மியாமிக்கு கடத்துவார்கள்.நீயும் உனது விமானத்தில் கா ண்ட்ராஸ்ட்களிடமிருந்து போதைப் பொருளைப் பெற்று பனாமா வழியாக உன்நாட்டுக்குக் கடத்தலாம்.இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்”எனக்கூறுவான்.சொந்தநாட்டுக்கே துரோகம் செய்யும் இந்த ஏற்பாட்டுக்கு பேரிசீல் இசைகிறான். இதேவேளை, நான்சி ரீகன் “போதைப்பொருளை மறுதலியுங்கள்” என்று பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னதாக பேட்டியளிக்கிறார்.
உலகின் சர்வ வல்லமைமிக்க ஒரு அரசு போதைப் பொருள் கடத்தலைத் தடுக்காமல் எதிர்ப்புப் பிரச்சாரத்தோடு தன் கடமையை முடித்துக்கொள்வது கவனிக்கத் தக்கது. போதைப்பொருள் கடத்தலில் பேரிக்குப் பணம் குவிகிறது; கொல்லைப்புறம் குதிரைலாயத்திலும் கூடக் குவித்துவைக்க இடமில்லை; வங்கியில் இவனுக்கென்று ஒரு தனி அறையே ஒதுக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் செய்து,ஒரு சமூகத்தையே சீர்குலைத்த குற்றவாளி பேரிசீலுக்கு, நீதிமன்றம் வெறும் 1000 மணி நேரத்திற்கு சமூக சேவை ஆற்றவேண்டும் எனத் தண்டனை அளிப்பது, அமெரிக்க நீதித்துறையின் தன்மையை வெட்டவெளிச்சமாக்குகிறது. இறுதியில் பேரிசீல் தனக்கு இடப்பட்ட பணியை கச்சிதமாய் செய்து முடிக்கிறான். நிகரகுவா ராணுவத் துணைத்தலைவரும், போதைப்பொருள் மாபியா பாப்லோவும் இவனும் இணைந்துள்ள புகைப்படம் மூலமாக அமெரிக்காவுக்குள் போதைப்பொருளை நிகர குவாதான் கடத்துகிறது என்பதற்கு ஆதாரம் என வெள்ளைமாளிகை அறிவிக்கிறது; ஆனால் இந்தப்புகைப் படத்தை எடுத்துக்கொடுத்த பேரி சீலின் புகைப்படத் தையும் சேர்த்தே வெளியிடுகிறது. இதனால் கடத்தல் மாபியாக்களால்,சமுக சேவையாற்றி விட்டு இரவுதிரும்பும் பேரி,கொல்லப் படுகிறான். சிஐஏ-ல் பணியாற்றுவதை தேசப்பற்று என மான்டி,பேரிசீலிடம் கூறுகிறான்.ஆனால் வெள்ளை மாளிகையில் பணியாற்றியது தேசத்துரோகமாகிறது.தேசப்பற்று, தேசத்துரோகம் என்பதற்கெல்லாம் சதிகார அரசின் அகராதியில் அர்த்தங்களே வேறு. மிதமிஞ்சிய செல்வமும் சுகபோக வாழ்வும் பரிதாப அழிவில்தான் முடிந்துபோகும் என்பது தனிமனிதனுக்கு மட்டுமான கருத்துரை அல்ல; ஏகாதிபத்திய அரசுகளின் இறுதிமுடிவும் இதுவே என்ற மார்க்ஸின் கருத்தை இப்படம் நினைவூட்டுகிறது.
சி.ஐ.ஏவின் இழிவான தந்திரங்கள், மனிதத்தன்மை யற்ற கொடிய செயல்கள், துரோகங்கள் ஆகியவற்றை உரித்துக்காட்டும் இத்திரைப்படம் அமெரிக்க ஏகாதி பத்திய வெறி; இட்லரின் பாசிச வெறிக்கு, எந்த வகை யிலும் குறைந்ததல்ல என்பதை உணரவைப்பதில் வெற்றி கண்டுள்ளது. 1970–‘80 காலகட்டம் நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட் டுள்ளது. பேரி சீலாக நடித்துள்ள டாம்குரூஸ் அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளைமாளிகை தன் முதுகில் குத்தியது மல்லாமல், தன்னைப் பலியாடாகவும் ஆக்கியதை எண்ணி மன இறுக்கம் கொண்டுள்ளதை முகத்தில் காட்டுவது அருமை. விமானம் தாழ்வாக பறப்பது;ஐந்து விமானங்களையும் கடலோர சிறப்பு விமானப்படை துரத்தும்போது, அவர்க ளிடமிருந்து தப்பிக்கும் காட்சியும்;பேரி தப்பிக்க தனது விமானத்தை அவசர கதியில் தெருவில் இறக்குகின்ற காட்சியும்; மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. எழுபது, எண்பதுகள் காலத்திய பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. இப்படத்தின் இயக்குநரான டவுக்லிமன் ஒன்பதாண்டு கால உண்மை அரசியல் சம்பவங்களை எவ்வித புனைவுகளுமின்றி,விறுவிறுப்புக் குன்றாமல் விவரித்துள்ளார்.