“கங்குபாய் கத்தியவாடி”
(2022)-(ஹிந்தி)-(நெட்பிளிக்ஸ்)
“பொது நன்மைக்காகப் பாடு படுவதன் மூலம் தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான், வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது” என்றார் மார்க்ஸ். ஐம்பதுகளில் மும்பை காமத்திபுராவில், பாலியல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பும், வாரிசுகளுக்கு கல்விச்சமூகப் பாதுகாப்பும், பெற்றுக்கொடுத்த,கங்கா ஜெகஜீவன்தாஸ் கத்தியவாடி என்ற கங்குபாயின் நிஜ வாழ்வின் திரைக்கதை வடிவமே, “கங்குபாய் கத்திய வாடி”. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கத்திய வாரில், செல்வ செழிப்பான மதிப்புமிகு குடும்பத்தில், ஒரு பாரிஸ்டரின் மகளாகப் பிறந்தவள் கங்கா ஜெக ஜீவன்தாஸ் கத்தியவாடி. காதலன் என்று ஒரு கயவனின் வார்த்தையை நம்பி, அவனுடன் மும்பைக்கு வருகிறாள் கங்கா. அத்தை ஷீலா என்பவளிடம் அவளை விற்றுவிட்டுப் போய்விடு கிறான் அக்கயவன். விடுபடமுடியாத சூழலில் பாலியல் தொழிலாளியா கிறாள். கால ஓட்டத்தில் இதர பாலியல் தொழிலாளிகளை யும் ஒன்று திரட்டுகிறாள்; வார விடுப்பு கோருகிறாள். தரகி அத்தையான ஷீலாவின் மறுப்பை மீறி வெளியேறி சினிமா பார்த்து, ஊர்சுற்றிவிட்டு வருவது முதல் வெற்றி ஆகிறது. இதற்கு எதிர்வினையாக ஷீலா ஒரு அடியாளை ஏவி கங்காவை தாக்கி, அவளது முக்கிய உறுப்புக்களை சிதைத்து, பாலியல் தொழில் செய்யவியலா வண்ணம் செய்து விடுவாள். கங்கா, தாதா ரகீம்பாயைச் சந்தித்து பாதுகாப்புக் கோருகிறாள். மனிதாபிமான மிக்க ரகீம்பாயின் ஆதரவுடன் அரசியலில் இறங்குகிறாள். காமத்திபுரா தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறாள். பாலியல் தொழிலாளர்க்கு சட்டப்பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் தரவேண்டும்; அவர்கள் குழந்தைகளுக்குக் கல்வி வசதி செய்து தர வேண்டும் என்று கங்குபாய் நடத்திய தொடர் போராட்டமே மீதிக் கதை. புதிதாக தொழிலுக்கு வரும் பெண்களை மூக்குத்தி குத்துவது வழக்கம்.
இது பாலியல் தொழிலுக்கான அடை யாளம். இதன்பின்பு பாலியல் தொழில் தான் செய்ய வேண்டும்; இல்லையேல் அங்கேயே பிச்சை எடுக்க வேண்டும். எந்நிலையிலும் சொந்த ஊருக்கு போக முடியாது. இது எழுதப்படாத விதி. ஆனால் புதிதாக வந்தப் இளம்பெண் ஒருத்தி மேற்கண்ட இரண்டுக்கும் சம்மதிக்க மாட்டாள். பஞ்சாயம் கங்குபாயிடம் வருகிறது. அவளை தனது சொந்தக்கதையினை சொல்லி சமாதானப்படுத்த கங்குபாய் முயற்சிக்கிறாள். முயற்சி பலிக்கவில்லை. இறுதியில் இரண்டு சாக்லேட்டை கொடுக்கிறாள்.ஒன்று நல்லது; மற்றொன்று விஷம் கலந்தது; அந்தப் பெண் விஷம் கலந்த சாக்லேட்டையே தெரிவு செய்கிறாள். உடனே கங்குபாய் அப்பெண்ணை அவளது வீட்டுக்கு அனுப்ப முடிவெடுக்கிறாள். அப்பெண்ணுக்கு பேசப் பட்டத் தொகையையும் கங்குபாயே பொறுப்பேற்று கொடுத்து அவளை விடுதலை செய்வதன் மூலம் அங்குள்ள பாரம்பரிய நடைமுறையை முறிவுக்கு கொணர்ந்து சீர்திருத்தத்தை ஆரம்பிப்பதாகவே படம் துவங்கும். ரசியாபாய் என்ற இளைஞன் கங்குபாயின் துணிகளை தைப்பவன். அவனது இளமை துள்ளலில் உந்தப்பட்ட கங்குபாய் அவனை மனதார காதலிப்பாள்.அவனும் உள்ளம் உருக நேசிப்பான். ஒருகட்டத்தில் தனது சக பாலியல் தொழிலாளியின் மகளுக்கு மணமகன் கிடைக் காததை அறிந்து, தனது காதலை தியாகம் செய்து, ரசியாபாயை அவளுக்குத் திருமணம் முடித்துவைப்பாள். தனது கன்னிப்பேச்சுகான தயாரிப்பில், கங்குபாய் “சகோதர-சகோதரிகளே” எனும்போது, நமது தொழிலில் சகோதரர்களே கிடையாது என்று பிற பாலியல் தொழிலாளர் கள் சிரிப்பார்கள். இது ஒரு கசப்பு நகைச்சுவை. தனது சகத்தோழி கம்ளி எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில், அவளருகே கங்குபாய் படுத்துக்கொண்டு அவளைப்பார்த்தவாறே அழுவாள். இக்காட்சியில் கம்ளி மூக்குத்தியுடனும், கங்குபாய் மூக்குத்தியற்ற முகத்துடனும் அழுகின்ற காட்சி ஒரு குறியீடு. தோழி கம்ளி எலும்புருக்கி நோயால் இறக்க, கங்கு பாய், இறுதிச்சடங்கு செய்யும் தனது சகாக்களிடம், இறந்த தோழியின் இருகால்களையும் இறுக்கிக் கட்டச் சொல்வாள்.
ஏனெனில் பாலியல் தொழிலாளி பிணத்தைக் கூட சில ஆண்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற கங்குவின் வார்த்தை நம்மை உலுக்கும். “இங்கு ஒவ்வொரு இரவும் புதிய கணவன்களுடன் முதலிரவு”. “வாடிக்கையாளர்கள் விரும்புவது உட லையே; முகத்தையல்ல; எனவே முகத்தை அழகுபடுத்த நேரத்தை விரயமாக்க வேண்டாம்” என்று தரகி ஷீலா மிரட்டுகின்றதாக வரும் வசனங்கள் துடிக்க வைக்கக் கூடியதாகும். ஆசாத் மைதானத்தில் பெண் உரிமைக்கான கூட்டத்தில் கங்குபாய் தன்னெழுச்சியாக பேசுவாள். “ஒருவன் தனது அறிவை விற்கிறான்; நாங்கள் எங்கள் உடம்பை விற்கிறோம்; இதிலென்ன தவறு? நீங்கள் ஏன் எங்களை மதிக்க மறுக்கிறீர்கள்? நாங்கள் கண்ணியமானவர்கள்; எங்களை நாடிவந்தவர்களின் ஜாதியையோ, மதத்தையோ நாங்கள் யாரிடமும் சொல்வதில்லை. ஏழையோ, பணக்காரனோ, கருப்பனோ நாங்கள் வேறுபாடு காட்டுவதில்லை. ஆனால், நீங்கள் ஏன் எங்களை வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்? சமூகத்திலிருந்து பிரித்து வைக்கிறீர்கள்? கொஞ்சம் யோசியுங்கள்; காமத்திபுரம் இல்லை யெனில், இந்த நகரம் ஒரு காடாக மாறும்; பெணகள் கற்பழிக்கப்படுவார்கள்; குடும்பம் என்ற அமைப்பு அழியும்; இந்திய கலாச்சாரம் குப்பைத் தொட்டிக்குப் போகும். நாங்கள் உங்கள் கண்ணியத்தை மட்டுமல்ல;இந்த சமூகத்தின் கண்ணியத்தையும் காக்கிறோம்.ஒரு டாக்டரும்… ஆசிரியரும் தங்கள் தொழில் குறித்துப் பெருமைப்படுவது போல ஒரு பாலியல் தொழிலாளி ஏன் பெருமை கொள்ளக் கூடாது?பதில் சொல்லுங்கள்; எங்கள் குழந்தைகள் கல்விகற்க உரிமை உள்ளதா? அவர்களும் இந்தியாவின் எதிர்காலத் தலைமுறை இல்லையா?” என்ற கங்குவின் கேள்வியை கூட்டம் ஆதரித்துக் குரல் கொடுக்கிற, இக்காட்சியானது உணர்வுபூர்வமானது.
பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்கக் கோரி நேருவை கங்குபாய் சந்தித்து உணர்ச்சிபூர்வமாகவும், தர்க்க நியாயங்களுடனும் விவாதிப்பாள். உலகம் தோன்றிய காலம் தொட்டே பாலியல் தொழில் உள்ளதாகவும்;பாலியல் தொழிலுக்காக பெண் விற்கப்படும் போது விற்பவர்,வாங்குபவர் உள்ளனர்.ஆனால் பாதிப்பு விற்பனையான பெண்ணுக்கே. தங்கள் வலியை கடவுளே உணர்ந்ததில்லை என்றும்,எல்லா இடங்களிலும் குற்றவாளிகளாக அவமானப் படுத்தப்படுத்தப்படுவதாகவும் கூறுவாள். முடிவாக ஏவாளின் மகளாக; ராதாவின் மகளாக; ஜீலேகாவின் மகளாக உதவிக் கேட்டு அழுகின்ற போது, நேரு இதனை விவாதிக்க கமிட்டி அமைப்பதாக உறுதி அளிப்பதும், கங்குபாய், பாலியல் தொழிலுக்கு சட்ட அந்தஸ்து மீண்டும் கோர, அதற்கு இசைவாக தனது ரோஜாவை தருகின்ற காட்சியின் பின்னணியில் ஒலிக்கின்ற வயலின் இசைக் கோர்வை அற்புதம். “பாஜிராவ் மஸ்தானி”, “பத்மாவத்” ஆகிய படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலிதான் இப்படத்தின் இயக்குநர். படத்தை இறுதிவரை விறுவிறுப்புக் குறையாமல் கொண்டு சென்றுள்ளார். கங்குபாயாக நடித்துள்ள அலியாபட் உணர்ச்சிமிகு பாத்திரப்படைப்புக்கு உயிர் கொடுத்துள்ளார். இவர் “டியர் ஜிந்தகி” என்ற ஹிந்தி படத்தின் மூலம் நன்கறியப்பட்டவர். படத்தின் வெற்றிக்கு, சஞ்சித் பல்ஹாராவின் பின்னணி இசை மாபெரும் பங்காற்றியுள்ளது.
ரயில் செல்கின்ற காட்சியைத்தவிர, படம் முழுமையும் மும்பையின் 1950களின் காலகட்டத்தைக் குறிக்கும் செயற்கையான தெருக்களையும், நகரை உருவாக்கியும், உள் அரங்கத்திலே படமாக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு படத்தின் பின்புலங்கள் செட்டிங்ஸ் என்பது தெரியாவண்ணம் படமாக்குவதே சிறந்த ஆர்ட் டைரக்க்ஷனாகும். ஆனால், இப்படத்தில் பின்புல செட் அமைப்புகள் வாயை இளித்துக் கொண்டு தெரிவது இப்படத்தின் மைனஸாகும். இது பார்வை யாளர்களுக்கு ஒரு அயர்ச்சியை உண்டாக்குகிறது. சுதந்திர பாலியல் உறவு கொண்டிருந்த ஆதி மனித சமூகம் குடும்ப உறவு சமூகமாக நெறிப்படுத்தப்பட்டது; தனிமனித உளவியலும், அதன் பாலியல் விழைச்சும் நெறிமுறைகளுக்குள் எளிதில் அடங்காதவை. ஆகவே, அந்த ஆதிசமூக உணர்வின் வெளிப்பாடே பரத்தமை. எனவே இது இயற்கையானது. பாலியல் தொழி லாளர்களும் சமூகத்தின் பகுதியே என்ற கருத்தையே கங்குபாய் பறைசாற்றுகிறாள்.