இயக்குநர் சமுத்திரக்கனி தற்போது முழுநேர நடிப்புக் கலைஞராகவே ஆகிவிட்டார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துவருகிற அவர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் தான் நடித்துவரும் படத்தின் பாத்திரம் பற்றிப் பெருமையோடு பேசியிருக்கிறார். ‘‘அது ஒரு அற்புதமான கதைக்களம். ஒரு நல்ல கதாபாத்திரம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தப் படைப்புக்குள் நாமும் இருக்கிறோம் என்பதே பெருமையாக உள்ளது’’ என்று சொல்லியிருக்கிறார்.
ஹாலிவுட் இளையராஜா...
தற்போது மீடியாவில் டிரெண்டாகி வரும் ஒரு வீடியோ இளையராஜா பற்றியது. இந்தமுறை சர்ச்சை ஏதுமில்லை. மாறாக ஹாலிவுட் வெப் தொடர் ஒன்றிற்கு டைட்டில் இசையை அவர் வழங்கியுள்ள இனிப்புச் சேதிதான் அது. அந்த வீடியோ இப்படிப் போகிறது. நான்கு சிறுவர்கள் விளையாடச் செல்கிறார்கள். அப்போது அவர்கள் ஒரு இனிமையான இசையைக் கேட்கிறார்கள். அந்த இசை வரும் திசை நோக்கி ஆர்வத்தோடு ஓடுகிறார்கள். அங்கே கடற்கரை யோரம் தன்னை மறந்த நிலையில் தனது குழுவினரோடு அந்த இசையைப் பொழியவிட்டுக் கொண்டிருக்கிறார் இளையராஜா. சிறுவர்கள் வியப்போடு அதனைப் பார்க்கிறார்கள்.
இப்படியொரு வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தலைமுறை பல கடந்தும் இன்றும் உயிர்ப்போடு இசைத்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் இளையராஜா இன்றைய தலைமுறைக்கும் வியப்பைத் தருகிறார். நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்டிரேஞ்சர் திங்க்ஸ் எனும் ஹாலிவுட் வெப் தொடர் தமிழில் மே 27 இல் வெளியாகின. அதன் தமிழ் மற்றும் தெலுங்கு எபிசோடுகளுக்கான டைட்டிலுக்குத்தான் இளையராஜா இசையமைத்துள்ளார்.