cinema

img

மதராஸ் மெயில்.... முதல் ஆக்சன் ஹீரோ நடித்த முதல் ஆக்சன் படம்...

“சேகர் ஒரு பூ மனசுக்கார இளைஞன். பிறருக்கு உதவுவதென்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த ஊர் ஜமீந்தாரின் மகள் மீனாட்சி. சேகருக்கும் மீனாட்சிக்கும் முதலில் மோதல் ஏற்பட்டு அதுவே காதலாக மலர்கிறது. ஒரு அரசு வேலைக்கு முயற்சிக்கிறான் சேகர். 

அந்த மாநிலத்தின் மந்திரியான முருகேசன் மீனாட்சியைத் திருமணம் செய்துகொள்ள எண்ணுகிறான். அதனால் சேகரின் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்தி அவனைச் சிறைக்கு அனுப்புகிறான் முருகேசன். சக கைதியின் உதவியோடு சிறையிலிருந்து தப்பும் சேகர் தன் பெயரை மதராஸ் மெயில் என்று வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தவறு செய்கிறவர்களைத் தண்டிக்கிறான். எளிய மக்களுக்கு உதவிகள் செய்கிறான். இதனால் மதராஸ் மெயில் எனும் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகிறது. தீயவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் தோன்றும் மதராஸ் மெயில், நல்லவர்களுக்கு விருப்பமான பெயராகப் பரவுகிறது. இதனிடையே மீனாட்சியை யாரோ கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள். மீனாட்சியின் தந்தையான ஜமீந்தார் தன் மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். அவளை சேகர் என்கிற மதராஸ் மெயில் கண்டுபிடித்து மீட்கிறான். 

மீனாட்சியைக் கடத்தியது மந்திரி முருகேசன்தான் என்பது தெரியவருகிறது. முருகேசனைச் சிறைக்கு அனுப்பும் ஜமீந்தார் சேகருக்குத் தன் மகள் மீனாட்சியைத் திருமணம் செய்துவைக்கிறார்.” - இதுதான் ‘மதராஸ் மெயில்’ - திரைப்படத்தின் கதை. தமிழில் வெளிவந்த முதல் ஆக் ஷன் திரைப்படம் இதுதான். 1936 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த மதராஸ் மெயில் படத்தின் கதையை எழுதி, இந்தப் படத்தின் கதாநாயகன் சேகராக நடித்தவர் பேட்லிங்   (Battling) மணி. இவர்தான் தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ. பேசாப் பட யுகத்தில் ரசிகர்களின் மனங்கவர்ந்த இரண்டு பிரபல ஸ்டண்ட் கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஸ்டண்ட் ராஜூ. மற்றொருவர்தான் இந்த பேட்லிங் மணி. 

சினிமா பேசத்தொடங்கி, முதன்முதலாக சண்டைக் காட்சிகள் நிறைந்த இப்படியொரு படத்தை உருவாக்க எண்ணியபோதே படக்குழுவினரின் மனம் தேர்ந்தெடுத்த நாயகன் இந்த பேட்லிங் மணிதான். சண்டைக் காட்சிகளில் அவரது சுறுசுறுப்பான நடிப்பால் இந்த மதராஸ் மெயில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதற்குப் பின்னர் ‘மிஸ் சுந்தரி’ (1937), ‘தாய்நாடு’ போன்ற படங்களில் நடித்தார். ‘தாய்நாடு’ இந்தியா விடுதலை பெற்ற நாளான ஆகஸ்ட் 15, 1947 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் 1938 ல் பேட்லிங் மணி ஒரேயொரு படத்தை இயக்கினார். அதுதான் அரிஜன சிங்கம் அல்லது மதராஸ் சிஐடி. இப்படி ஒரே திரைப்படத்திற்கு இரண்டு பெயர்கள் வைப்பது அந்த நாளில் வழக்கமாக இருந்தது. பேட்லிங் மணி நடித்த கடைசி படம் மருதநாட்டு இளவரசி (1951).    

இந்த மதராஸ் மெயில் திரைப்படத்திற்கு வசனத்தையும் பாடல்களையும் எழுதியது பி.ஆர்.ராஜகோபால ஐயர். இசையமைப்பு எஸ்.என். ரங்கநாதன். ஒளிப்பதிவு ரஜினிகாந்த் போண்டியா. படத்தொகுப்பு இந்துகுமார் பட். பேட்லிங் மணிக்கு இணையாக - மீனாட்சியாக டி.என்.மீனாட்சி நடித்தார். இவர்களுடன் எஸ்.ஆர்.கே.ஐயங்கார், எஸ்.எஸ்.கோக்கோ, சீனிவாச ஐயங்கார், கே.ஆர்.செல்லம் போன்றோரும் நடித்திருந்தார்கள். மோகன் பிக்சர்ஸ் சார்பில் ராம்னிக்கால் மோகன்லால் தயாரித்த இந்தப் படத்தை இயக்கியது சி.என்.திரிவேதி.

இந்தப் படம் வெளிவருவதற்கு முன்புவரையில் நாடகங்களில் பார்த்துவந்த புராண - இதிகாசக் கதைகளையே சினிமாவாகவும் பார்த்துச் சலிப்படைந்திருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த மதராஸ் மெயில் முற்றிலும் ஒரு புதிய உற்சாக அனுபவத்தைத் தந்தது. இன்றுவரையில் வெளிவந்துகொண்டிருக்கும் நாயகன் - நாயகி இடையிலான காதல், அவர்களுக்கு இடையிலான வில்லனின் குறுக்கீடு எனும் ஒற்றை வரிக் கதையாடலினைத் தமிழ் திரைப்படத்தில் தொடங்கிவைத்தது தமிழின் முதல் ஆக்ஷன் படமான இந்த மதராஸ் மெயில்தான்.

;