ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக் கிறார்கள். இன்றைய நவீன வாழ்க்கையின் காதல் பற்றிச் சொல்கிறதாம் இந்தப் படம். கைப்பேசி எனும் செல்ஃபோன் பயன்பாட்டைப் பற்றியும் விமர்சனப்பூர்வமாக இந்தப் படம் பேசுகிறதாம். நம் உண்மையான முகத்துக்கும் செல்போனில் நாம் காட்டும் முகத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை, நிஜ வாழ்க்கைக்கும் செல்போனில் நாம் முன்வைக்கும் ஃபேக் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டைப் பதிவு செய்கிறதாம். இளம் காதலர்கள் தங்கள் கைப்பேசிகளை பரஸ்பரம் மாற்றிக்கொண்டால் ஏற்படுகிற குழப்பங்கள் - விபரீதங்கள் பற்றி இந்தப் படம் பேசுகிறதாம். ஒருவரைப் பாதிக்கிற விசயம் எப்படி அவரின் குடும்பத்துக்கே பாதிப்பை உண்டாக்கும் என்பதையும் சொல்கிறதாம். சந்தேகம் என்கிற நோய் எப்படியான விளைவுகளைத் தரும் என்றும் படம் பேசுகிறதாம். இத்தனை நீதிபோதனைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் இது குடும்பத்தோடும், குழந்தைகளோடும் கண்டுகளிக்கத்தக்க படம்தான் என்கிறார் இதன் இயக்குநர் பிரதீப். இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்த பிரபல நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் பெரிதும் பாராட்டியிருக்கின்றார்கள். நல்ல லாபத்திற்கு விற்பனையும் ஆகியிருக்கிறதாம்.