நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றும் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருக்கும் காதல் காவியங்கள் அனேகம். ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜூலியட், தமிழ்க்காவியமான சோழதேசத்து அம்பிகாபதி - அமராவதி இவற்றையொத்த பாரசீகக் காதலின் துன்பியல் காப்பியம் லைலா - மஜ்னூன். அதுதான் உலகம் முழுவதும் பயணித்துக்கொண்டே இருந்தது. மொழிகள் பலவற்றிலும் பதிவாகி, கண்ணீர் மல்கக் கொண்டாடப்பட்டது. இன்றும்கூட அதனை உலகம் மறந்தபாடில்லை. 1192 லேய்லா ஓ மஜ்னூன் எனும் காவியத்தை எழுதினார் பாரசீகக் கவிஞர் நிஜாமி கான்ஜவி. அவரது முழுப் பெயர் என்ன தெரியுமா? ஜமால் அத் தின் அபு முகம்மது இலியாஸ் இபின் யூசுஃப் இபின் சக்கி. இன்றைய அஜர்பைஜான் குடியரசில் பிறந்த அவருக்கு அங்கேயொரு அருங்காட்சியகத்தையும் அவர் பெயரில் அமைத்திருக்கிறார்கள். அவர் எழுதிய அந்த நட்சத்திரக் காதலர்களின் கதை உலகமெலாம் விரும்பி ஓதப்படும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்தியாவிலும் முதலில் உருது மொழியிலும் பின்னர் இந்தியிலும் எழுத்துரு பெற்ற லைலா - மஜ்னு கதை பலராலும் தொடர்ந்து எழுதப்பட்டது. அதிவிரைவிலேயே நாடக மேடைகளையும், பேசாப்படத் திரைகளையும் அலங்கரிக்கத் தொடங்கியது அந்தக் காதல் காவியம். பல மொழிகளுக்கும் இந்தக் கதை போனது. பேசாப்பட காலத்தில் முதலில் ஜே.ஜே. மதன் இதனை 1922இல் ஒரு திரைப்படமாக வெளியிட்டார். அது மீண்டும் 1927இல் மணிலால் ஜோஷியால் மறுபடியும் ஒரு திரைப்படமானது. 1931இல் இந்திய சினிமா பேசத்தொடங்கியபோது அதே ஆண்டு கஞ்சிபாய் ரத்தோட் இதனை இந்திமொழியில் திரைப்படமாக்கினார். ஈஸ்ட் இந்தியா பிக்சர்ஸ் நிறுவனம் இந்தக் கதையை 1936இல் பாரசீக மொழியில் தயாரித்தது. அப்போது பாரசீக மொழியில் சில படங்கள் இந்தியாவில் உருவாயின. 1940இல் லைலா - மஜ்னுவை தரம்வீர் சிங் பஞ்சாபி மொழியில் தயாரித்து வெளியிட்டார்.
1945இல் மறுபடியும் இந்திமொழியில் ஸ்வரன் லதாவும் அகமதுவும் நடிக்க மிகப்பெரிய வெற்றிச் சித்திரமாக ஒரு கலக்கு கலக்கியது. இந்தப் படத்தில்தான் பிரபல இந்திப் பாடகர் முகமது ராஃபி அறிமுகமானார். இதன் நாயகர்கள் லதாவும் அகமதுவும் திருமணம் செய்துகொண்டு, தேசப் பிரிவினைக்குப்பின் பாகிஸ்தானில் குடியேறினார்கள் என்பது இன்னொரு சுவையான செய்தி. 1949இல் பி.பானுமதியும் அவரது கணவர் இயக்குநர் பி.எஸ்.ராமகிருஷ்ணாவும் லைலா - மஜ்னுவைத் தெலுங்கில் திரைப்படமாக்கினார்கள். அது பிறகு தமிழிலும் டப் செய்யப்பட்டது. 1953, 1976 ஆண்டுகளில் மீண்டும் இந்தியிலும் வங்கமொழியிலும் லைலா - மஜ்னு திரைப்படங்களாக உலா வந்தனர். மறுபடியும் 1982இல் இதே கதை ஒரு இந்திப்படமானது. இப்படியொரு அழிந்த காதலர்களின் அழியாத புகழ்க் கதை வரலாறு நெடுகிலும் மீண்டும் மீண்டும் புனர்ஜென்மம் எடுத்துக்கொண்டே இருந்தது. இப்படி இன்னொரு அமரத்துவக் காதல் கதைக்கு இதுபோல வாய்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். பிரபல தயாரிப்பாளர், கலை இயக்குநர் எஃப்.நாகூர். இவர் ஒரு ஸ்டூடியோ உரிமையாளரும்கூட. இவர் அந்நாளைய பிரபல பாடக நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் - ராஜம்மா நடிப்பில் லைலா மஜ்னுவை உருவாக்கினார். இவர்களோடு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சகஸ்ரநாமம், பாலசுப்ரமணியன், டி.ஏ.மதுரம் போன்றவர்களும் நடித்தார்கள்.
தமிழில் வெளிவந்த இந்தப் படத்திற்கு இசையமைத்தார் எஸ்.வி.வெங்கடராமன். லட்சுமணதாஸ் மற்றும் கம்பதாசன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தார்கள். படத்தில் மொத்தம் 16 பாடல்கள். அவற்றில் 10 பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருந்தார். பாலாஜி பிக்சர்ஸ் இதனைத் தயாரித்தது. நியூடோன் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. பி.எஸ்.செல்வராஜ் காமிராவை இயக்கினார். ஒளிப்பதிவுப் பொறுப்பினை பிரபல வங்க சினிமாவின் ஜித்தன் பானர்ஜி மேற்கொண்டார். எல்லாவற்றையும்விட இந்த படம் குறித்து நம்மைப் புருவமுயர்த்தி வியக்க வைக்கும் இன்னும் இரண்டு முத்தாய்ப்பான செய்திகள் என்ன தெரியுமா? இந்தப் படத்தின் வசனங்களை அந்நாளின் பிரபல இலக்கியவாதி வல்லிக்கண்ணன் எழுதியிருந்தார். இந்தப் படத்திற்கான முதலீட்டைச் செய்தவர் தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். இத்தனை இருந்தும் படம் வெற்றிக்கனியைப் பறிக்கத் தவறியதுதான் இந்தத் துன்பியல் கதைக்கு ஏற்பட்ட இன்னொரு சோகம்.