வடநாட்டு தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படு கிறார்கள் என்ற பொய்செய்தி இந்தியா முழுவதும் பரப்பப்படுகிற சூழலில் கவ னிக்கப்பட வேண்டிய படமாக மாறி இருக்கிறது புதுமுக இயக்குநர் மந்திர மூர்த்தியின் அயோத்தி. வெளிவந்த சில நாட்களிலேயே பொது மக்களின் கவனத்தை எதனால் கவர்கிறது அயோத்தி? இதன் கதை என்ன? பீடா விற்கும் பல்ராம், அவர் மனைவி ஜானகி, கல்லூரி படிக்கும் மகள் ஷிவானி, சிறுவன் சோனு என்பதான எளிய குடும்பம் ஒன்று அயோத்தியில் வாழ்கிறது. தான் கிழித்த கோடை தாண்டாமல் தான் சொல்வதே வேதம், நீதி என்பதை ஏற்று மனைவியும் மகளும் மகனும் நடப்பதே இந்து தர்மம் என்ற ஆணாதிக்க பிடிவாதம் முன்கோபம் குணம் கொண்ட நபர் பல்ராம்.
தீபாவளி அன்று மதுரை வழியாக வாடகைக்காரில் குடும்பத்தோடு இராமேஸ்வரம் செல்கிறார்.தனது பிடி வாதம் பிறரை மதிக்காத அடாவடிக் குணம் காரணமாக கார் ஓட்டுநரோடு வாக்கு வாதம் ஆகி, ஓட்டுநரின் பிடிமானம் தவறிய கார் அதிகாலையில் நடுவழியில் விபத்துள்ளாகிறது. ஜானகி விபத்தில் கடுமையான அடிபட்டு மயக்கநிலைக்கு போய்விடுகிறார். கார் ஓட்டுநர் தன் நண்பன் சசிகுமா ருக்கு தகவல் சொல்ல நண்பனுக்கு உதவ நண்பன் புகழோடு அடிபட்ட இடத்திற்கு வந்து சேர்கிறார் சசிகுமார். அடிபட்ட ஜானகியை இராமேஸ்வரம் மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு உடனடியாக மதுரை கொண்டு போனால் தான் காப்பாற்ற இயலும் எனச் சொல்ல சசிகுமார் டிரைவர் இல்லாத ஆம்புலன்சை பிடித்து தானே ஆம்புலன்சை நண்பன் புகழ், மருத்துவமனை அட்டென்டர் உடன் வர ஓட்டிக்கொண்டு மதுரை விரைகிறார்.போகும் வழியில் ஜானகி இறந்து விடுகிறார். மருத்துவமனை அட்டென்டர் மதுரை ராஜாஜி மருத்துவமனை போய் தகவல் சொல்லிவிட்டு காவல்நிலையத்திற்கும் தகவல் தர வேண்டுமென சிடுசிடுக்கிறார். இந்தி மட்டுமே பேசுகிற, மொழி புரியாத நிலையில் இராமேஸ்வரத்திலிருந்து தங்களை அயோத்திக்கு அனுப்பக் கோருகிறது பல்ராம் குடும்பம். இறந்து போன ஜானகியை காசிக்கு அனுப்ப நடைமுறை என்ன என்பதை தெரிந்து கொண்டு விமான டிக்கெட் வாங்கிக் கொண்டு பிறகு இதர நடைமுறைகளை கவனிக்கலாமென மானுடநேயம் முன் செலுத்த ஆம்புலன்சை விமானநிலையம் ஓட்ட முயல தடுக்கிற மருத்துவமனை அட்டென்டரை சசிகுமாரை அடித்து விட வழக்காகி காவலர்கள் வரவும் நிலைமை சிக்கலாகி விடுகிறது.
இறந்து போன மனைவிக்கு இந்து தர்மப்படி இறுதிக்காரியம் செய்து சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டுமென்ற காசி சாமியாரின் ஆலோசனைப்படி பிணக் கூராய்வு செய்ய மறுத்து காவல்நிலையம் மருத்துவமனை எங்கும் அடாவடி செய்கிறார் பல்ராம். இடியாப்பசிக்கலாக நிலைமை மாறி விடுகிறது. பல்ராமிடம் பணம் ஏதுமில்லை.உடலை அனுப்பவும் மூவர் காசி போகவும் விமா னத்திற்கு ஒரு லட்ச ரூபாய் தேவைப்படு கிறது. உதவ வந்தவர்களுக்கு இது பேரிடி யாக மாறி விடுகிறது. செய்த உதவி யோடு பாதியில் கிளம்பி விடுவதா? கிளம்பி னார்களா? என்ன செய்தார்கள் அந்த இருவர்? என்பதுதான் மீதிக்கதை. திரைப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பு திருப்பங்களுடனே பயணிக்கிறது. ஒரு நாளின் சிலமணி நேரங்களில் செய்து முடிக்க வேண்டிய ஆவணப்பணிகளை கள ஆய்வு செய்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி வெளி வந்திருக்கும் மந்திரமூர்த்தியின் படம் ஓகோ என பாராட்டப்படுகிறது. திரைக்கதை அத்தனை தெளி வோடும் அறம் சார்ந்த மானுடநேயம் சார்ந்த பார்வையோடும் உருவாக்கப்பட்டிருக் கிறது. வயது பால் வித்தியாசமின்றி பார்ப் போரின் மனதை தட்டி உலுக்கி விடுகிறது திரைப்படம். நடிக்கும் கலைஞர்களின் சிறப்பான நடிப்பாலும் எளிய புரிந்து கொள்ளும் இந்தி வசனங்களுக்கான தமிழ் மொழி பெயர்ப்போடும் படம் புரிந்து கொள்ளப் பட்டு தனக்கான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது அயோத்தி.
இறந்துபோன ஜானகி சடலத்தை, பல்ராம் குடும்பத்தை குறிப்பிட்ட நேரத் திற்குள் விமானத்திற்கு அனுப்பி வைக்கும் இறுதிகணத்தில் உடைபடுகிற உச்சகட்ட க்ளைமாக்ஸ் காட்சிதான் மனிதநேயத்தின் பெருமிதம்; மானிடத்தின் பெருமிதம். இதை உணரும் கணத்தில் எவர் ஒருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழியாமல் இருக்க முடியாது. மகளின் உதாசீனப்பார்வையால் புறக் கணிக்கப்படுகிற, விமானநிலையச் சூழலி லும் தகப்பன் மகள் பாசப்பிணைப்பை உணர்ந்து மனம் மாறிய பல்ராம் சசிகுமாரி டம் உன் பெயர் என்ன என கேட்பார்.சசி குமார் சொல்லும் அந்த ஒற்றைப் பெயர்தான் இயக்குநரை தயாரிப்பாளர் ட்ரைடன் ஆர்ட்ஸ் ரவீந்திரன், கதாசிரியர் எஸ்.ராம கிருஷ்ணன் என மொத்த படக்குழுவையும் போற்றுகிற இடமாகவும் அந்த ஒற்றைப் பெயரின் பெருக்கெடுத்த பேரன்பும்தான் படம் பெரிய வெற்றியைப் பெற்றி ருக்கிறது. படத்தின் கதை குறித்த சர்ச்சையும் ஊடகங்களில் பெரிதாக வலம் வருகிறது. இந்தியச் சூழலில் இப்படியான அரசியல் தன்மையில் வந்திருக்கும் அயோத்தி திரைப்படத்தை அனைவரும் பாராட்ட வேண்டும், படத்தை பார்க்க வேண்டும். சிறுசிறு பாத்திரமானாலும் விமான நிலைய அதிகாரி சேத்தன், பிணப்பெட்டி தயாரிக்கும் போஸ்வெங்கட், மருத்துவ மனை டீன் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். இந்தி மட்டுமே அறிந்த கலைஞர்கள் யஷ்பால் சர்மா( பல்ராம்), அஞ்சு அஸ்ரானி (ஜானகி), பிரித்தி அஸ்ரானி(ஷிவானி), அஸ்வத்( சோனு) இயல்பான நடிப்பால் படத்தின் உண்மைத்தன்மைக்கு கூடுதல் பலம் அளித்திருக்கிறார்கள். உதவும் நண்பன் வேடம் தமிழில் சசி குமாருக்கு கை வந்த கலை. இந்த படத்தில் கச்சிதமாக நடித்து வெற்றி பெற்று புதிய ஓட்டத்திற்கு தயாராகும் சசி குமாருக்கு நல்வாழ்த்துகள்.
புதிய முதல்முயற்சியான திரைப் படத்திற்கு உணர்வுநெருக்கடி மிகுந்த அயோத்தி எனும் அரசியல் மத அடை யாளம் கொண்ட பெயரை படத்தின் தலைப் பாக்கி மானுடநேயம் பக்கம் நிற்கும் இயக்கு நர் மந்திரமூர்த்திக்கு நல்வாழ்த்துகள். மாதேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யவும் சன் லோகேஷ் படக்கோர்வை க்கும் உணர்ச்சிமிகுந்த இடங்களுக்கு பின்னணி இசை கொண்டு சிறப்பாக்கிய இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்த னிற்கும் நம் பாராட்டுகள். இந்த திரைப்படத்தில் வருவது போலவே வடமாநில குடும்பம் ஒன்று இராமேஸ்வரத்திற்கு வந்த போது விபத்தில் குழந்தைகளின் தாய் இறந்து விட, பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜோதிக்குமாரும் சுரேஷ்பாபுவும் அந்த குடும்பத்திற்கு அனைத்து உதவியும் செய்து பீகாருக்கு அனுப்பியுள்ளனர். வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவரான ஜா.மாத வராஜ் 2011 ஆம் ஆண்டு அதை அப்படியே உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளார். தொழிற்சங்கம் எத்தகைய மனிதாபிமானி களை உருவாக்குகிறது என்பதற்கு அந்த சம்பவம் ஒரு சான்று. மூலக்கதை குறித்த சர்ச்சை எழுந்துள்ள போதும் அனைவரும் பார்க்க, பாராட்ட வேண்டிய படம் இது.
-இரா.தெ.முத்து