business

img

என்.டி.டிவி நிறுவனர் பிரணாய் ராய் இயக்குநர் பதவியிலிருந்து விலகல்!

என்.டி.டிவி நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் இயக்குநர்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான என்.டி.டிவியின் மொத்தப் பங்கில், 15.94 சதவிகிதம் பிரணாய் ராயிடமும், 16.32 சதவிகிதம் ராதிகா ராயிடமும், 29.18 சதவிகிதம் இவர்களின் ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனத்திடமும், பொதுப் பங்குகளாக  38.55 சதவிகிதம் இருந்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு வி.சி.பி.எல் நிறுவனத்திடம் இந்த 29.18% பங்குகளை அடமானமாக வைத்து ரூ.403 கோடி கடனை ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனம் வாங்கியிருந்தது. கடனை திருப்பி செலுத்தாத நிலையில், ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனத்தின் ஒப்புதல் பெறாமலே என்.டி.டிவி-யின் 29.18% பங்குகளை வி.சி.பி.எல் நிறுவனம் அதானி குழுமத்திற்கு விற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, என்.டி.டிவியிடம் இருந்து கூடுதலாக 26 சதவீதப் பங்குகளை வாங்குவதற்கு கடந்த நவம்பர் 22-ஆம் தேதி அதானி குழுமம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரும் ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவிலிருந்து விலகியுள்ளனர். இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், பிரணாய் ராய், ராதிகா ராய் ராஜினாமா செய்துள்ளதாகவும், சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா, செந்தில் சின்னையா செங்கல்வராயன் உள்ளிட்டோர் ஆர்.ஆர்.பி.ஆர் குழுவில் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் என்.டி.டிவி தெரிவித்துள்ளது.
 

;