அகமதாபாத்:
மாட்டுப் பாலுக்குப் பதிலாக சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும் என்று பீட்டா நிறுவனம் (PETA) முன்வைத்துள்ள பரிந்துரைக்கு ‘அமுல் இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி கண்டனம் தெரிவித்துள்ளார்.நாங்கள், சோயா பால் உற் பத்திக்கு மாறிவிடும் பட்சத்தில், அமுல்நிறுவனத்தையே நம்பியிருக்கும் 10 கோடி பால் உற்பத்தியாளர்களுக்கு பீட்டா நிறுவனம் வேலை தரத் தயாரா?என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஆவின் (Aavin) நிறுவனத்தைப் போல, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கூட்டுறவு பால் நிறுவனம்தான் அமுல் (AMUL) ஆகும். நாட்டிலேயே மிகப்பெரிய பால் கொள்முதல்- பால் பொருட்கள்தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த விலங்கு உரிமை அமைப்பானபீட்டா (People for the Ethical Treatment of Animals - PETA), அமுல்நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், வளர்ந்து வரும் ‘சைவ உணவு’ மற்றும் பால் சந்தையை, அமுல் நிறுவனமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாட்டுப் பாலுக்குப் பதிலாக தாவரம் (சோயா) மூலமான பால்உற்பத்திக்கு மாற வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்குத்தான் அமுல் நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.எஸ். சோதி தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சோயா பால் உற்பத்தியில் ஈடுபடச் சொல்லும் விலங்குகள் நலஉரிமை அமைப்பு (பீட்டா)- இதன்மூலம் வேலைவாய்ப்பை இழக்கும்10 கோடி பால் உற்பத்தியாளர் களுக்கு- இவர்களில் 70 சதவிகிதம் நிலமற்றவர்கள் என்ற நிலையில்- அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குமா? அவர்களின் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை செலுத்துமா? என்று கேட்டுள்ளார்.மேலும், பீட்டா சொல்வது படி சோயா பால் உற்பத்தியில் ஈடுபடும் பட்சத்தில், 10 கோடி விவசாயிகளில், எத்தனை பேர்களால் விலை உயர்ந்தஆய்வுகள் கொண்ட தொழிற்சாலைகளில் தயாராகும் உணவைத் தயாரிக்க முடியும்? என்று கேட்டுள்ள சோதி,அவ்வாறு தயாரிக்கப்படும் சோயா பாலின் விலை மிகவும் அதிகம் என்பதால், அந்த பாலை வாங்கி அருந்துவது நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாது என்று தெரிவித்துள்ளார்.75 ஆண்டுகளில் அமுல் உருவாக்கியுள்ள அனைத்து வளங்களையும், விவசாயிகளின் முதலீட்டையும் பணக்கார வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, மரபணு மாற்றப் பட்ட சோயாவை அதிக விலைக்கு சந்தைப்படுத்த வேண்டும் என்பதே பீட்டாவின் குறிக்கோளாக தெரிகிறது என்றும் சோதி சாடியுள்ளார்.