business

img

லிட்டர் 100 ரூபாயை நோக்கிச் செல்லும் பெட்ரோல் விலை.... 18 நாட்களில் மட்டும் பெட்ரோல் 2 ரூபாய் 59 காசுகளும், டீசல் 3 ரூபாய் 30 காசுகளும் விலை உயர்ந்தது...

புதுதில்லி:
பீகார் தேர்தலை ஒட்டி அக்டோபர் 1 முதல் நவம்பர் 19, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை மோடிஅரசு உயர்த்தவில்லை. இதனால்,சுமார் 48 நாட்கள் எந்த மாற்றமும்இல்லாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 84 ரூபாய் 14 காசுகளாகவும், டீசல் 78 ரூபாய் 69 காசுகளாகவும் நீடித்தது.

இதன்பின்னர், பீகாரில் தேர்தல் முடிந்து, வெற்றியும் பெற்றுவிட்ட நிலையில், நவம்பர் 20 முதல் பெட்ரோல் - டீசல் விலையை மோடி அரசு மீண்டும் உயர்த்தத் துவங்கியது. இந்நிலையில்தான், பெட்ரோல் விலை கடந்த 18 நாட்களில் மட்டும் லிட்டருக்கு 2 ரூபாய் 59 காசுகளும், டீசல் விலை 3 ரூபாய் 30 காசுகளும் உயர்ந்துள்ளது.தற்போது பெட்ரோல் ரூ. 86 ரூபாய்73 காசுகளுக்கும், டீசல் ரூ. 79 ரூபாய்93 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே காரணம் என் றும், இது மேலும் அதிகரிக்கும் என்றும்கூறப்படுகிறது.நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அதிகாரத்திற்கு வந்தபின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்களே, பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது. அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடும்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும். மாறாக கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அதன்பயன் மக்களுக்குச் சென்றடையும் வகையில், பெட்ரோல் - டீசல் விலையும் குறைக்கப்படும் என்று கூறியது.

ஆனால், சர்வதேச சந்தையில்கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் குறைக்கப்படுவதில்லை.குறிப்பாக, கொரோனா தொற்று பொதுமுடக்கக் காலமான பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், கச்சாஎண்ணெய் விலை வெகுவாக குறைந் தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழே சரிந்தது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படவில்லை.மாறாக, பெட்ரோல் - டீசலுக்கானகலால் வரி (Excise tax) மற்றும் வாட் (VAT) வரிகளை உயர்த்தி, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் சாதாரண மக்களுக்கு சென்றடையாமல் ஆட்சியாளர்கள் தடுத்து விட்டனர். கொரோனா காலத்தில் மட்டும் கலால்வரியை, மத்திய அரசு இரண்டுமுறை அதிகரித்தது. கலால் வரி பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ .17 ஆகவும் டீசலுக்கு ரூ. 16 ஆகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் விதிக்கும் வாட் வரி தனியாகும். அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகபட்சம் 30 சதவிகிதமாக உள்ளது.

இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் அதன் உண்மையான விலையைக் காட்டிலும் 255 சதவிகிதம் கூடுதல்விலைக்கும், டீசல் அதன் உண்மையான விலையைக் காட்டிலும் 248 சதவிகிதம் கூடுதல் விலைக்கும் தற்போது விற்கப்பட்டு வருகிறது.தற்போதைய நிலவரப்படி 160 லிட்டர் கொண்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 49 அமெரிக்க டாலர்கள் என்று இருக்கிறது. இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 626 ரூபாய். இதன்படி ஒரு லிட்டர் விலை 23 ரூபாய்மட்டுமே.ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் மார்க்கெட்டில் 87 ரூபாய்க்கும், டீசல் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதுவே போபால் உள்ளிட்ட சில நகரங்களில் 91 ரூபாயைத் தாண்டி இருக்கிறது.அக்டோபரில் பீப்பாய் கச்சா எண்ணெய் 35.79 டாலராக இருந்த நிலையில், நவம்பர் மாதத்திற்குள் 26 சதவிகிதம் விலை உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 45.34 டாலர் ஆனதே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.ஆனால் மத்திய அரசு எண்ணெய் வள நாடுகளிடம் செய்துகொண்ட ஒப் பந்தத்தின் படி 2020-ஆம் ஆண்டு வரை ஒரு லிட்டர் பெட்ரோலை 18 ரூபாய்க்குத்தான் இறக்குமதி செய்கிறது என்று சமூக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

எந்த வகையில் பார்த்தாலும் இந்தியாவில் பெட்ரோல் - டீசலுக்கான கூடுதல் வரிகளால், சாதாரண மக்களை ஆட்சியாளர்கள் சுரண்டுவது மறுக்கமுடியாத உண்மை என்று கூறும் அவர்கள், அடுத்த இரண்டு மாதங்களில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 56 டாலரை எட்டலாம் என்றும், அவ்வாறு எட்டும்போது, ஜனவரிக்குள் பெட்ரோல் விலை லிட்டர்100 ரூபாயை தொட்டாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர்.மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானோ இதை மறுத்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக, எண்ணெய் வளநாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’(OPEC) தற்போது முடிவு செய்துள்ளதால், வரும் காலங்களில் உற்பத்தி அதிகரித்து, கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக அவர் சமாளித்துள்ளார்.இதற்கும் பதிலளித்துள்ள பொருளாதார வல்லுநர்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகுறைய வாய்ப்பிருக்கிறது என்பது உண்மைதான்.. ஆனால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைக் கப்படுமா? அதுபற்றி அமைச்சர் சொல்வாரா? என்று பதில் கேள்வி எழுப்புகின்றனர்.