articles

img

நவம்பர் - 26 தேசம் தழுவிய வேலைநிறுத்தம் - மறியல் வெல்லட்டும்.....

முதலாளித்துவ கொள்கைகளால் ஏற்பட்ட சீரழிவுகளை எதிர்த்து இந்தியா உட்பட உலகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக வெடிக்கின்றன. நமது நாட்டிலும் பிஎம்எஸ் நீங்கலாக இதர 11 மத்திய தொழிற்சங்கங்களும், 40க்கும் மேற்பட்ட தொழில்வாரி சம்மேளனங்களும் அக்டோபர் -2ல் காணொலி வாயிலாக நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் மோடி அரசின் நாசகர கொள்கைகளுக்கு எதிராக 2020 நவம்பர் 26ல் தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தம் செய்வது என பிரகடனப்படுத்தின. இது 20-ஆவது முறையாக, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் வேலை நிறுத்தமாகும்.

வாயைத் திறந்தால் வளர்ச்சி விகிதம் கூடுகிறது என கிளிப்பிள்ளைப்போல் பேசுகிறார் மோடி. ஏழைமக்களின் மகிழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத இந்த வளர்ச்சியால் பேரானந்தம் படுவோர் பெருமுதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தான். சில மாதங்களுக்கு முன்னர்ரூ.20 லட்சம் கோடி, பொருளாதாரத்தை உயிர்ப்பிப்பதற்காக நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் மூலம் அறிவிக்கப்பட்டது. அதுஒரு மாயத்தோற்றமே என்பது பின்னர் நிரூபணமானது. 

பொருளாதாரம் சரிவு
பிரதமரின் தொடர்ச்சியான அறிவிப்புகள் கடுமையானவாழ்க்கை நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அடித்தட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை. உணவுப் பொருட்களை விளைவிக்கும் விவசாயக் குடிமக்கள், ஆலைத் தொழிலாளர்கள், வேலைக்காக புலம் பெயர்ந்து வாழ்ந்த, ஊரடங்கால் சொந்த இடங்களுக்கு திரும்பி, வாழ்வாதாரமற்று வாழும் மக்கள் எனஎந்த பகுதியினருக்கும் பலன் கிடைத்ததாகத் தெரியவில்லை.கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதாரம் சரிந்துவரும்போது மக்களின் வாங்கும் சக்தியும், நுகர்வும் கூடவே வீழ்ச்சியடைகிறது. 2019-2020ல் 57சதவீதம் ஆக இருந்த நுகர்வின் பங்கு 2020 மார்ச்சில் 2.7சதவீதம் என அதல பாதாளத்திற்குச் சென்றது. கடந்த 10 ஆண்டு காலத்தில் இதுவே மிக மோசமான வீழ்ச்சியாகும்.வேலையிழப்பு, வருமானம் குறைவு ஆகியவற்றின் கூட்டு விளைவாக மக்களின் வீட்டுச் செலவினங்கள் தவிர்க்க இயலாமல் குறைக்கப்பட்டன. இது பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியது.

முதலாளிகளுக்குச் சலுகை
பெரு நிறுவனங்களுக்கு அதிக வரிக்குறைப்புச் சலுகைகள், கடன் தள்ளுபடி, ஊக்கத் திட்டங்கள், அத்துடன்பொதுச்சொத்துக்கள் மற்றும் இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது, சுரண்டலுக்கு துணைநிற்பது போன்றவைதான் பொருளாதார வளர்ச்சிக்காக அரசு எடுத்த முடிவுகள். இத்தகைய முடிவுகள் பெரு நிறுவனங்கள்தங்கள் லாபத்தை உயர்த்திக் கொள்ளப் பயன்படுமே தவிரஎந்த வேலை வாய்ப்பையும் உருவாக்காது, மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்திசெய்யும் பொது முதலீடுகளை செய்ய அரசு மறுப்பது மோசமான செயலாகும். 

தேவை பொதுத்துறை
மக்கள் சேவையில் பொதுத்துறை பெரும்பங்கு வகிக்கிறது என்கிற உண்மையை ஆட்சியாளர்கள் எளிதில்மறந்து விடுகிறார்கள். இதர உற்பத்திகளுக்கு உதவக்கூடியதொழில் துறையின் உந்து சக்தியான பொருளாதாரத்தை சமன்படுத்தக்கூடிய, வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய, இடஒதுக்கீடு-சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய, வாழ்வதற்கான ஊதியம் வழங்கக்கூடிய அமைப்புபொதுத்துறை என்பதை மறந்துவிடமுடியாது. பொருளாதாரத்தின் நாடி-நரம்பாக உள்ள தேசத்தின் சொத்தை விற்பது விதை நெல்லை விற்பதற்குச் சமம். 2008ல் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியாஅதிலிருந்து தப்பித்தது. அதற்கு காரணம் பொதுத்துறைகள் தான். மோடி அரசின் தனியார்மய நடவடிக்கை தேசத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். 

பொதுத்துறை தனியார்மயம்
ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி மற்றும் பல்வேறு பொதுத்துறைநிறுவனங்களை பணம்எடுக்கும் இயந்திரமாக அரசுபயன்படுத்துகிறது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் மூலமாகவும், 100சதவீத வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிப்பதன் மூலமாகவும் தனியாருக்கு கொடுக்கிறது. ரயில்வே வழித் தடங்கள், ரயில் நிலையங்கள், ரயில் உற்பத்தி நிறுவனங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், லாபம் தரும் அரசுத்துறைகள், நிலக்கரிசுரங்கங்கள், வளம்கொழிக்கும் பெட்ரோலிய நிறுவனங்கள், 41 ராணுவ தளவாட ஆலைகள், தொலைபேசி, ஏர்இந்தியா, சாலை போக்குவரத்து உள்ளிட்டவைகளை தனியார் மயமாக்குகிறார்கள். இதனை கொரோனா நிலவும் மோசமான சூழலில் அமலாக்கத் துடிக்கிறார்கள் இதற்கு எதிரான கிளர்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தொழிலாளர் சட்டங்கள் திருத்தம்
எதிர்க் கட்சிகள் இல்லாத நிலையில் தொழிலாளர்க்கு விரோதமாக மூன்று தொழிலாளர் சட்டதொகுப்புகள் நாடாளுமன்றத்தில் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 

+ தொழிலுறவு சட்ட தொகுப்பு (Industrial Realtion Code) - இதில் தொழிற்சங்கங்கள் சட்டம் 1926, தொழிற்தகராறு சட்டம் -1947, நிலையாணை சட்டம் 1946 ஆகியவற்றை உள்ளடக்கியது.

+ சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பு (Social Security Code) - இதில் தொழிலாளர் இழப்பீடு சட்டம், வருங்கால வைப்பு நிதி, மகப்பேறு நலச்சட்டம், பணிக்கொடை, சினிமாதொழிலாளர்கள் நலநிதி சட்டம், கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நலவரி சட்டம், அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.

+ தொழில்-பாதுகாப்பு-சுகாதாரம் மற்றும் வேலை சூழல் சட்ட தொகுப்பு (Occupational Safety Health and Working Conditions Code) - இதில் தொழிற்சாலை சட்டம்,சுரங்கங்கள் சட்டம், துறைமுக தொழிலாளர் சட்டம், கட்டிடம்மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சட்டம், தோட்டத் தொழிலாளர் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், புலம்பெயர் தொழிலாளர் சட்டம், உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம், மோட்டார் டிரான்ஸ்போர்ட் தொழிலாளர் சட்டம், விற்பனை பிரதிநிதிகள் சட்டம், பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர் சட்டம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. 

மேற்கண்ட இந்த தொழிலாளர் சட்ட தொகுப்புகள் தொழிலாளர்களை அடிமை நிலையில் வைத்திருக்கும் விதமாக உள்ளது. 

+ சங்கங்களை அமைப்பதை கடினம் ஆக்குகிறது. 

+ வேலை நிறுத்த உரிமையை ஏறக்குறைய பறித்துவிடுகிறது.

+  தெருவோர வியாபாரிகள், வீட்டுவேலை செய்வோர், பீடி தொழிலாளர்கள், வீடுசார் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ உள்ளிட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போன்ற தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

+ நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் போன்றவை கேள்விக்குறியாகும்ஏற்கெனவே, நம்முடைய தொழிற்சங்க முன்னோடிகள் பல்வேறு தியாகங்கள் புரிந்து உரிமையை பெற்றுத் தந்தனர். இந்த உரிமை பறிபோக தொழிலாளி வர்க்கம் ஒருகாலம் சம்மதிக்காது என்பதை அரசுக்கு உணர்த்த வேண்டிய நேரம் இது.

விலைவாசி உயர்வு
அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் என அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் கடுமையானசரிவு ஏற்பட்டும் கூட விலைகள் குறையவில்லை. பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை இந்த அரசு பலமுறை உயர்த்தியுள்ளது. அந்தச் சுமை அப்படியே மக்கள்தலையில் விழுந்திருக்கிறது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் மிகக் கடுமையான உயர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 

வேலையிழப்பு
ஊரடங்கு காலத்தில் தேசம் முழுவதும் 8 கோடிக்கும்மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். வேலையின்மையோ கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாக உள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் திட்டங்களான மேக்இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா,டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா போன்றவை வெற்று அறிவிப்புகளே தவிர வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. மறுபுறம் இந்த அரசு அமல்படுத்திய பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகளால் சிறு-குறுந் தொழில்கள் சின்னாபின்னமாகி லட்சக்கணக்கானோர் வேலை இழப்புக்கு ஆளாக நேரிட்டது. எனவே, Y வருமான வரிகட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500வீதம் நிவாரண தொகை வழங்கவேண்டும்.

* ஒரு நபருக்கு மாதம் ஒருமுறை 10கிலோ அரிசி/கோதுமை வழங்கவேண்டும்.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை ஆண்டுக்கு 200 நாள் வேலையாக உயர்த்தி நகர்ப் பகுதிக்கும் விரிவாக்கம் செய்திடு. அங்கு வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியை அதிகரித்திடு.

விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்டத்தொகுப்புகளையும் திரும்பப் பெறு.

வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதை நிறுத்தவேண்டும், ரயில்வே, பாதுகாப்புதுறை, துறைமுகங்கள் போன்ற அரசுதுறை நிறுவனங்களை கார்ப்பரேட்டாக மாற்றுவதை கைவிடவேண்டும்.

அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் உரியவயது மூப்படையும் முன்பாகவே, கட்டாய ஓய்வு தருவதற்கான கொடூரமான, அரசு நிர்வாக சுற்றறிக்கையை திரும்பப் பெறு.

* அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும். புதிய ஓய்வூதியர் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டப்படிஓய்வூதியம் வழங்கவேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர்-26 அன்று  வேலை நிறுத்தம் - மறியல் நடைபெறவுள்ளது.

இந்திய நாட்டின் கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்கள், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளும், நிறுவனப்படுத்தப்பட்ட ஆலைகளும், சிறு-குறுந் தொழிலாளர்களும், கட்டுமானம்,ஆட்டோ, சாலைபோக்குவரத்து, வீட்டுவேலை தொழிலாளர், சுமைப்பணிதொழிலாளர்கள், விசைத்தறி, கைத்தறி, பீடி போன்ற கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களும், வணிகர்களும், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மோடி அரசுக்கு நாள் குறிக்கத் தயாராகிவிட்டார்கள்.அந்த வகையில் நவம்பர்-26 நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்திலும் மறியல் போராட்டத்திலும் லட்சக்கணக்கான உழைப்பாளிகள் களம் அமைத்து போராட  சிஐடியு அறைகூவி அழைக்கிறது.

கட்டுரையாளர் : வி.குமார்,மாநில உதவி பொதுச்செயலாளர், சிஐடியு

;