தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் உறுதியான தலைவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் போராடிய தலைவர் என பன்முகம் கொண்ட தோழர் சுகுமால் சென் 1934 ஜூன் 14 அன்று பிறந்தார்.'
1952 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த இவர், அரசு ஊழியர் இயக்கத்தின் அமைப்பாளராகவும், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் 1982 முதல் 2008 வரை பணியாற்றினார். மேலும், இந்திய தொழிற்சங்க மையத்தின் துணைத் தலைவராகவும், 1982 முதல் 1994 வரை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
சிறந்த தொழிற்சங்கத் தலைவரான இவர், “இந்தியாவின் உழைக்கும் வர்க்கம்: எழுச்சி மற்றும் இயக்கத்தின் வரலாறு” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது தொழிலாளர் வர்க்க இயக்க வரலாற்றின் அதிகாரப்பூர்வ நூலாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்நூல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மே தின வரலாறு, உழைக்கும் வர்க்கத்தின் சர்வதேச இயக்க வரலாறு ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் ஈடுபட்ட இவர், வர்க்க சமரசத்துக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். 1996 முதல் 2009 வரை டிரேட் யூனியன் இண்டர்நேசனல் ஆப் பப்ளிக் அண்ட் அலைட் சர்வீசஸின் பொதுச் செயலாளராக செயல்பட்ட சுகுமால், ஊழியர்களின் இயக்கத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
உழைக்கும் மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த சுகுமால் சென், 2017 நவம்பர் 22 அன்று தனது 83ஆவது வயதில் மறைந்தார்.