articles

img

அரசாங்கம் இந்தப் பதினோரு பேருக்காக ஏன் இந்த அளவிற்குத் துடிக்கிறது?

ஜோதி பன்வானி
ரெடிஃப் இணைய இதழ்
2024 ஜனவரி 09

பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தினர் பதினான்கு பேரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற பதினோரு பேரின் விடுதலைக்கு எதிராகப் போராடியவர்களில் சுபாஷினி அலி, ரூப் ரேகா வர்மா, ரேவதி லால் என்ற மூன்று பெண்களும் அடங்குவர். உச்ச நீதிமன்றத்தால் கடந்த திங்களன்று அந்தப் பதினோரு பேருக்கு வழங்கப்பட்டிருந்த நிவாரணம் ரத்து செய்யப்பட்ட பிறகு அவர்களிடம் ஜோதி புன்வானி உரையாடினார். 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான சுபாஷினி அலி கடந்த பல ஆண்டுகளாக பெண்களுக்கான போராட்டங்கள் தொடர்பாக மிகவும் அறியப்பட்டவராக இருந்து வருகிறார். கான்பூரின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவருமான அவர்  இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூட்டு பொதுநல மனுவில் முதல் மனுதாரரார் ஆவார். 

இந்தத் தீர்ப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

ஏற்கனவே வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பை நிலைநிறுத்துவது கண்ணியம் உள்ள எந்தவொரு நீதிமன்றத்துக்கும் கடினமான காரியமாகவே இருக்கும் என்றே  நாங்கள் கருதினோம். ஆனாலும் இன்றைய நிலைமையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே நாங்கள் இருந்து வந்தோம்.   
நீதிபதி .எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் மிகப் பொருத்தமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். நீதிபதி ஜோசப் ஓய்வு பெற்ற பிறகு நீதிபதி நாகரத்னா அந்த வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த அரசாங்கத்தின் தவறுகள் அனைத்தையும் வெளிக் கொண்டு வந்துள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் சுதந்திரத்திற்கான உரிமையை அவர்கள் இழைத்த தவறுகளுக்கு நிபந்தனையாக்கிய  அவருடைய தீர்ப்பு இறுதியில் மீண்டும் அவர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று உத்தரவிட்டது. இதைக் காட்டிலும் சிறப்பான தீர்ப்பை எவராலும் எதிர்பார்த்திருக்க முடியாது. 

நீங்கள் எதற்காக  இந்த மனுவைத் தாக்கல் செய்தீர்கள்? பில்கிஸ் பானோவை உங்களுக்குத் தெரியுமா?

நிச்சயமாக. அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அனைத்திந்திய மாதர் சங்கம்தான் முதலில் அவரைச் சந்தித்தது. 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோத்ரா அகதிகள் முகாமிற்கு அழைத்து வரப்பட்ட மறுநாளில் நான் அவரைச் சந்தித்தேன். அவர் அப்போது ஒல்லியாக, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.  
அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் அவரை லக்னோவில்  சந்தித்தேன். 
வேறு எதுவும் செய்ய முடியாததாலேயே நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றோம். அந்த விடுதலை  மிகவும் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகமாக இருந்தது.  
விடுதலை செய்யப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்ட பிறகு பில்கிஸ் பானோவின் நேர்காணலைப் படித்தது எனது நினைவிலிருக்கிறது. 'இதுதான் நீதியின் முடிவா?' என்று அந்த நேர்காணலில் அவர் கேள்வியெழுப்பியிருந்தர். அதற்குப் பிறகு யாராலும் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க முடியாது.  

உங்கள் வழக்கறிஞர்கள் யார்?

கபில் சிபல் தொடங்கி வைத்தார். அதற்குப் பின்னர் அபர்ணா பட், நிஜாம் பாஷா, விருந்தா குரோவர், இந்து (இந்திரா) ஜெய்சிங் இருந்தனர். பில்கிஸின் வழக்கறிஞர் சுபா குப்தாவும் இருந்தார்.

அப்போது நம்பிக்கை இழந்து விட்டீர்களா?

எங்களுக்கு அப்போது அது எப்போது முடிவடையும் என்பது தெரியவில்லை. யாரோ ஒருவருக்கு வாரண்ட் வழங்கப்படவில்லை, இன்னும் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை என்று கூறுவதையே அப்போது நீதிமன்றத்தில் அரசாங்கம் செய்து கொண்டிருந்தது. ஒருபுறம் உச்ச நீதிமன்றம் ஆவணங்களைக் கேட்பது அதிர்ச்சியாக இருந்தது. மறுபுறம் அவற்றை உங்களுக்குத் தர வேண்டுமா என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது.    

இந்த தீர்ப்பு பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.

இது எப்படி ஊக்கமளிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 
பல்வேறு நீதிமன்றங்களில் எட்டு ஆண்டு காலம் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு தண்டனை பெற்றவர்கள் ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்பட்டு ஹீரோக்களைப் போல நடத்தப்படுகிறார்கள். மீண்டும் அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கிறது -  உண்மையில் அவர்கள் இன்னும் சிறைக்குத் திரும்பிச் செல்லவில்லை.  
இதுபோன்ற சூழலில் எத்தனை பெண்களால் நீதியைப் பெற முடியும் என்று நினைக்க முடியும்? மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் எங்களிடம் இருந்தனர். எத்தனை பேரால் அத்தகைய வழக்கறிஞர்களை அணுக முடியும்?   
பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை எதிர்த்துப் போராடுவது உண்மையில் மிகவும் கடினமான காரியமாகும். ஆளுங்கட்சியுடன் தொடர்புடையவர்களை எதிர்த்துப் போராட வேண்டிய மிகச் சாதாரணமான பெண்ணுக்கு எதிராக இருக்கும் அரசாங்கம், அதிகாரத்துவம், காவல்துறை என்று அனைவரும் குற்றவாளிகளுக்கே பக்கபலமாக இருப்பார்கள் என்பதை இந்த வழக்கு காட்டியுள்ளது. 
2002ஆம் ஆண்டு குஜராத் வழக்குகளில் பில்கிஸ் பானோவின் வழக்கு மட்டுமே தண்டனை பெற்றுத் தரக் கூடிய வகையில் வலுவான வழக்காக இருந்தது. அவரது ஆடைகள் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு நேர்ந்தது மிகப் பயங்கரமானது. அனைவரது  நினைவிலும் இன்னும் அது இருந்து வருகிறது. 
அப்போது அவருக்காகப் போராடிய குழுவினரைப் போல அவரது கணவரும் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். பில்கிஸ் மிகவும் தைரியமானவர். அவரைப் போலவே அவருடைய வழக்கறிஞரும் இருந்தார். 
ஆனால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இவையனைத்தும் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்காது. 

நீங்கள் மூவரும் இந்த மனுவில் எப்படி ஒன்றிணைந்தீர்கள்?

நான் அப்போது தில்லியில் இருந்தேன். மனுவில் நான்தான் முதலில் கையெழுத்திட்டேன். வழக்கறிஞர்கள் மற்ற இருவரையும் தொடர்பு கொண்டனர். அவர்கள் (இணை மனுதாரர்களாக இருப்பதற்கு) இல்லை என்று மறுக்க மாட்டார்கள் என்று அந்த வழக்கறிஞர்களிடம் சொன்னேன்

ஒருவகையில் இந்தத் தீர்ப்பு நாட்டிலேயே மிகவும் அதிகாரம் மிக்க நபர்கள் மீது குற்றம் சாட்டுகிறது. பின்விளைவுகள் குறித்தப்அச்சம் எதுவும் இருக்கிறதா?

கடந்த பல ஆண்டுகளில் நீதிமன்றத்திடம் இருந்து இந்த அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ள முதல் அடியாக இது இருக்கிறது. 370ஆவது சட்டப் பிரிவு, குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற வழக்குகளில் எதுவும் நடக்கவில்லை. தேர்தல் பத்திரங்களைப் பொருத்தவரை நாம் இன்னும் காத்திருக்கிறோம். ஆகவே ஆம் - அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது.  

இந்திய அரசு, குஜராத் அரசுக்காக அரசு வழக்கறிஞர்கள், மிகவும் பிரபலமான வழக்கறிஞர்கள் என்று வழக்கறிஞர்கள் பட்டாளமே உச்ச நீதிமன்றத்திற்கு கோப்புகள் அனைத்தையும் கொண்டு வந்து இந்த வழக்கு நடந்த விதத்தைப் பார்த்தால், அது அச்சுறுத்துவதாகவே இருந்தது. 

https://im.rediff.com/news/2022/aug/18bilkis1.jpg?w=670&h=900

2022 ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் கோத்ரா சப்-ஜெயிலிலிருந்து வெளி வந்த போது 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பிற்குப் பிந்தைய கலவரத்தில் பாலியல் பலாத்காரம், கொலைக் குற்றம் புரிந்ததற்காக பில்கிஸ் பானோ வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்த நான் கேட்க விரும்பும் மிகப் பெரிய கேள்வி இது –இதை மக்களிடம் கேட்க விரும்புகிறேன்: பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலைக்காகத் தண்டனை பெற்ற இந்த பதினோரு பேருக்காக அரசாங்கம் ஏன் இந்த அளவிற்குத் துடிக்கிறது? இந்த அரசாங்கத்திற்கு அவர்களால் என்ன பிரயோஜனம்? அவர்களுக்குத் தரப்படும் ஆதரவின் மூலம் இந்த அரசாங்கம் என்ன சொல்ல வருகிறது?


https://www.rediff.com/news/interview/subhashini-ali-why-did-the-government-go-out-on-a-limb-for-these-11-men/20240109.htm


தமிழில்: தா.சந்திரகுரு
நன்றி: ரெடிஃப் இணைய இதழ்

;