articles

img

யார் பொறுப்பு? (பொதுப்போக்குவரத்து)

இந்தியாவில் போதிய பொதுப்போக்குவரத்து இல்லாத நிலையில், இரு சக்கர வாகனங்களின்எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இரு சக்கர வாகனங்களின் விபத்துகளும் அதிகரித்திருக்கிறது. 2019ம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது 37 சதவிகிதம் பேர் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவிலான சாலை விபத்துகளில் இந்தியாவின் பங்கு 11 சதவிதமாக இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம்  பெரும் பகுதி இந்திய சாலைகள்  மிக மோசமாக நிலையில் இருப்பதே ஆகும்.1990 கால கட்டத்துடன்  தற்போது  உள்ள சாலைகளை ஒப்பிட்டால் சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் முன்னேறியுள்ளன. ஆனால் ஆபத்தானவையாகவும்  மாறியுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், அதன் அதிக எரிபொருள் திறனுக்கேற்பவும் சாலைகளின் கட்டமைப்பு மற்றும் தரம் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகளில் சராசரியாக 71.6% விபத்துக்கு அதிவேகமே காரணம் என மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது. ஆனால் வாகனங்களின் வேகத்திற்கு ஏற்ப  சாலைக் கட்டமைப்பில் எந்த  மாற்றமும் செய்யவில்லை.  சாலையின் தன்மைக்கேற்ப வேகத்தை நிர்ணயித்து  ஒழுங்குபடுத்தும் ஏற்பாடும் இல்லை.  மாறாக தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் போட்டு  அதிகளவில் பணத்தை பறிக்கும் ஏற்பாடு மட்டும் சிறப்பாக நடக்கிறது.

இந்தியாவில் 1951 முதல் 2018 வரை  தார் சாலை அல்லது கான்கிரீட் சாலை வெறும் 4.18 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் வாகனப் பெருக்கத்திற்கும் சாலையின் வளர்ச்சிக்கும் இடையே மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் நீடிக்கிறது. கடந்தாண்டு மட்டும் 3 மற்றும் 4 சக்கரவாகனங்கள் தவிர்த்து இரு சக்கர  வாகனங்கள் மட்டும்  2 கோடியே 12 லட்சம்  விற்பனையாகியுள்ளன. வாகன பெருக்கத்திற்கேற்ப சாலைகட்டமைப்பை மேம்படுத்தா விட்டால்  விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரிக்கவே செய்யும். விபத்துகளை குறைக்கவும், வாகன பெருக்கத்தால் ஏற்படும் காற்று மாசை கட்டுப்படுத்தவும் பொதுப்போக்குவரத்தை அதிகரிப்பதுதான் ஒரே வழி. தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்டமாநகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் மற்றும்மெட்ரோ ரயில் சேவை மூலம் பொதுப் போக்குவரத்து ஓரளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் ஒப்பீட்டளவில் இந்தியாவின் பெரும்பகுதிக்கு முறையான பொதுப் போக்குவரத்து ஏற்பாடுகள் இல்லை என்பதே வேதனையான உண்மை.  மோடி அரசு புல்லட் ரயில்என கூச்சலிட்டு, போக்குவரத்தில் இருக்கும்உண்மையான பிரச்சனைகளை திசைதிருப்புவதை நிறுத்தி, பொதுப்போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவும், அது பொதுத்துறையின் கீழ் இயக்குவதையும் உறுதி செய்ய வேண்டும். அதுதான் பொருளாதாரம் மட்டுமின்றி எதிர்கால இந்தியாவின் உண்மையான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

;