articles

img

சரித்திரம் படைக்கும் விவசாய வர்க்கம்....

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று கொடிய வேளாண் சட்டங்களையும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயப் பெருங்குடிகள் நடத்தி வரும் போராட்டம் டிசம்பர் 7 திங்களன்று 12 நாளை எட்டியது. 13வது நாளானடிசம்பர் 8 செவ்வாயன்று நாடு தழுவிய முழு அடைப்பு - “பாரத் பந்த்” - போராட்டம் நடைபெறுகிறது.சம்யுக்த கிஷான் மோர்ச்சா (ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) என்ற பதாகையின்கீழ், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அழைப்பினை ஏற்று, இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய விவசாயிகளுக்காக ஒட்டுமொத்த தேசமே முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச்செய்ய தயாராகியிருக்கிறது.அனைத்து எதிர்க்கட்சிகள், அனைத்து வர்க்க-வெகுஜன இயக்கங்கள் உள்பட நாட்டின் அனைத்து ஜனநாயகசக்திகளிடமிருந்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது. இது தில்லியை நோக்கிச்செல்லும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் உற்சாகத்தையும் பேரெழுச்சியையும் அளித்துள்ளது. 

1. பாரத் பந்த் போராட்டத்திற்கு ஒட்டுமொத்த பஞ்சாப், ஹரியானா மாநில மக்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். எனவே இந்த மாநிலங்கள் முற்றாக ஸ்தம்பிக்க உள்ளன. 

2.சிங்கு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டக் களத்திற்கு பிரபல குத்துச்சண்டை வீரரும், கேல் ரத்னா விருதுபெற்ற இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான விஜேந்திர சிங் நேரில் வந்து விவசாயிகளுக்கு தனது முழுமையான ஆதரவை தெரிவித்திருக்கிறார். இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. 

3.பஞ்சாப்பைச் சேர்ந்த திரைப்பட நடிகரும் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சன்னி தியோல், பாஜகவுடன் நிற்கிறேன் என்ற போதிலும் விவசாயிகளுடனும் நான் நிற்கிறேன்; விவசாயிகளின் குரலை அரசு கேட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

4.பாரத் பந்த் போராட்டத்திற்கு சிரோமணி அகாலிதளம் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கோடானுகோடி விவசாயிகளின் முன்பு மத்திய அரசு பணிந்து போவது உறுதி என்று நம்புவதாகவும், தேசத்திற்கே உணவிடும் அன்ன தாதாக்களின் குரல் நிச்சயம் வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

5.தில்லி ஜந்தர் மந்தரில், விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக வேளாண் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

6.பாரத் பந்த் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் தில்லி முழுவதும் முற்றாக ஸ்தம்பிப்பது உறுதியாகியுள்ளது.

7.மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் முழு ஆதரவை அளித்துள்ளன. இதனால் அம்மாநிலம் முற்றாக ஸ்தம்பிக்க உள்ளது. 

8.தெலுங்கானா முதலமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிரிய கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ், ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவிடம் சூடுபட்டதிலிருந்து, பாஜகவை தனது முக்கிய அரசியல் எதிரியாக முதல் முறையாக உணர ஆரம்பித்திருக்கிறார். அவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் பாரத் பந்த் தெலுங்கானாவில் வெற்றிபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்.

9.தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டிசம்பர் 9 அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசப்போவதாக கூறியுள்ளார். இவர் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது வேளாண்துறை அமைச்சராக இருந்தவர். அச்சமயம் இவர், விவசாய விளை பொருட்கள் கொள்முதலில் தனியாரை பெருமளவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று பேசியவர்தான் என இப்போது, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிப்பதாக எண்ணி, பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இதை மறுத்துள்ள சரத்பவார், மாநிலங்களவையில் மோடி அரசு வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்த போது, தமது கட்சியின் உறுப்பினர்கள் அதை எதிர்த்து வெளிநடப்பு செய்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

10.பாரத் பந்த் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் யூனியன் பேராதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. அந்த யூனியன் உட்பட நாடு முழுவதும் உள்ள 51 சரக்குப் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவரான சதிஷ் ஷெராவத், நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள்; நாங்கள் இல்லாமலா இந்தப் போராட்டம் என்று கூறியுள்ளார்.

11.குறைந்தபட்ச ஆதார விலை இனிமேல் இல்லை என்பதுதான் புதிய வேளாண் சட்டங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் நீடிப்பதால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதார விலை தொடர்ந்து நீடிக்கும் என்றும், அதை நாங்கள் எழுத்துப்பூர்வமாக அளிப்பதற்குக்கூட தயார் என்றும் அறிவித்துள்ளது. மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி மூலமாக மோடி அரசு இதைக் கூறியுள்ளது. ஆனால் சட்டங்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை.

12.விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை எங்களது ஆட்சியில்தான் அதிகரித்துள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியிருந்தார். அவரது கூற்றுப் பொய் என்பதை உடனடியாக வெளியாகியிருக்கும் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இடதுசாரிகளின் ஆதரவோடு முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோதுதான் குறைந்தபட்ச ஆதார விலை, இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் கணிசமாக உயர்த்தப்பட்டு, பத்தாண்டு காலம் நடைமுறையில் இருந்தது என்பது தெரிய வந்துள்ளது.

13.நெல்லுக்கு 2006-07ஆம் ஆண்டில் வெறும் ரூ.580 ஆக இருந்த குறைந்தபட்ச ஆதார விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு 2013-14ல் 126சதவீதம் உயர்ந்து ரூ.1310ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சி வந்த பிறகு எவ்வித உயர்வும் இல்லை; ஆறு ஆண்டு ஆட்சியில் வெறும் 43 சதவீதம் மட்டுமே உயர்ந்து, தற்போது 2020-21ல் ரூ.1868ஆக உள்ளது. இதைத்தான் அமைச்சர் தோமர் உயர்வு என்கிறார்.

14.கோதுமையிலும் இதே கதைதான். ஐமுகூ ஆட்சியில் ரூ.750லிருந்து 87சதவீதம் அதிகரிக்கப்பட்டு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1400ஆக உயர்ந்தது. மோடியின் ஆறாண்டுகால ஆட்சியில் வெறும் 41சதவீதம் மட்டுமே உயர்ந்து தற்போது ரூ.1975ஆக உள்ளது.

15.கடலைப்பருப்பு குறைந்தபட்ச ஆதார விலை ஐமுகூ ஆட்சியில் 115 சதவீதமும், மோடி ஆட்சியில் வெறும் 65 சதவீதமும் உயர்ந்துள்ளன; துவரம்பருப்புக்கு ஐமுகூ ஆட்சியில் 205 சதவீதம் உயர்ந்தது. மோடி ஆட்சியில் 40 சதவீதம் மட்டுமே உயர்வு; மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஐமுகூ அரசு 143 சதவீதம் உயர்த்தி வழங்கியது. மோடி அரசு வெறும் 43 சதவீதமே உயர்த்தியது. சிவப்பு பருப்புக்கு ஐமுகூ அரசு 90சதவீதம் ஆதாரவிலையை உயர்த்தி அளித்தது. மோடி அரசு 73சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளது.

16.பீகாரில் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் ஆயிரம் ஆயிரமாய் போராட்டக்களத்தில் நிற்கிறார்கள். தேஜஸ்வி உள்ளிட்ட தலைவர்களை கைது செய்வோம் என்று நிதிஷ் குமார் அரசு மிரட்டியுள்ளது. முடிந்தால் கைது செய்து பார் என்று தேஜஸ்வியும் எதிர்க்கட்சித் தலைவர்களும் சவால்விடுத்துள்ளனர். 

17.விவசாயிகளின் போராட்டம் மேலும் மேலும் வலுவடைந்து வரும் நிலையில், ஹரியானா பாஜக அரசுக்கு உள்ளிருந்தே கடும் நிர்ப்பந்தங்கள் எழுந்துள்ளன.  ஹரியானா பாஜக அரசின் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின்(ஜேஜேபி) தலைவர்களில் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான அமர்ஜித் தண்டா, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளார். ஏற்கெனவே இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் கவுதம் விவசாயிகள் போராட்டத்தில் தானாகவே போய் கலந்து கொண்டுவிட்டார்.

18.ஹரியானா மாநிலத்தின் ஏராளமான கிராமங்களில் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் கூடி பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஜேஜேபி ஆகியவற்றின் தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடாவிட்டால் அவர்களை கிராமங்களுக்குள் நுழைய விடுவதில்லை என்று தீர்மானம் போட்டுள்ளன. ஹரியானாவில் உள்ள ஊர்ப்பஞ்சாயத்துக்களின் தலைமை அமைப்பான சர்வ தாதன் காப் - எனும் அமைப்பின் தலைவர் தல்பீர் சியோகந்த், “விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராகப் பேசும் ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா, ஹிசார் தொகுதி எம்.பி., பிர்ஜேந்திர சிங் மற்றும் ஹரியானா விவசாயத்துறை அமைச்சர் ஜெயப்பிரகாஷ் தலால் மற்றும் நடிகை கங்கனா ரணாவத் ஆகியோரை குறிப்பாக எந்தக் கிராமத்திற்குள்ளும் நுழையவிடக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறோம்” என அறிவித்துள்ளார்.

19.விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் களமிறங்கியுள்ளனர். தேசிய குத்துச்சண்டை முன்னாள் பயிற்சியாளர் குர்பக்ஸ் சிங் சாந்து தனது பத்மஸ்ரீ விருதையும், குத்துச்சண்டை வீரர் கர்தார் சிங், கூடைப்பந்து வீராங்கனை சஜ்ஜன் சிங் சீமா, ஹாக்கி வீரர் ராஜ்பீர் கவுர் ஆகியோர் தங்களது அர்ஜூனா விருதையும் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

20.பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைநகரான சண்டிகர் மாநகரம் போராட்டக்களமாக மாறியுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தரப்பு நடுத்தர வர்க்க ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தொடர் பேரணியும் நடத்தினர்.

21.பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட அனைத்து வடமாநி லங்களிலும் கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் அனைத்து தொழிற்சங்கங்கள், அனைத்து விவசாய சங்கங்கள், அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட கட்சி பேதமில்லாமல் - பாஜக ஆர்எஸ்எஸ் பரிவாரங்களைத் தவிர அனைவரும் அன்றாடப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

22.பஞ்சாப் மற்றும் ஹரியானா பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு ஆதரவாக தினசரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பார் கவுன்சில் தலைவர் கரன்ஜித் சிங், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாமல் நீதிமன்றங்களுக்குள் நுழையமாட்டோம் என அறிவித்துள்ளார்.

23.பஞ்சாப்பில் அதிதீவிர சீக்கிய மத அமைப்பான தல் கல்சா, டிசம்பர் 8 பாரத் பந்த் போராட்டத்தை இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு முழுஅடைப்பாக மாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. பாஜக மத்திய அரசை ஒரு கை பார்த்துவிடுவோம் என்று கூறியுள்ளது.

24.இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பெரும் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். லண்டன் மாநகரில் ஞாயிறன்று நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் திணறித்தான் போனார்கள். மத்திய லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கூடி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

25.பிரிட்டனின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரிட்டன் வாழ் சீக்கியருமான தன்மஞ்ஜீத்சிங் தேஷி தலைமையில் 36 பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலாளர் டொமினிக் ராப்-க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நீடித்தால் பிரிட்டனில் உள்ள பஞ்சாபியர்கள் தினசரி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதை இந்திய அரசுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

26.பிரிட்டனில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பல நகரங்களில் அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பு பெரும் எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்டியானாபோலிஸ் நகரில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. கனடாவிலும் பல நகரங்களில் இந்தியர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

27.இந்திய விவசாயிகளின் போராட்டத்தை சர்வதேச சமூகம் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது என்று கனடா பிரதமர் ட்ரூடோ கூறியிருந்தார். உலகின் பல பகுதிகளில் இந்தியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், எரிச்சலடைந்த மோடி அரசு ட்ரூடோ மீது பாய்ந்தது. திங்களன்று வேறு பல விசயங்கள் தொடர்பாக கனடா வெளியுறவு அமைச்சருடன் காணொலி வாயிலாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுநடத்துவதாக இருந்தார். அந்த பேச்சுவார்த்தையை, மோடி அறிவுறுத்தலின்பேரில் ஜெய்சங்கர் புறக்கணித்துள்ளார்.

28.சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் கோடிக்கணக்கில் குவிந்திருக்கும் விவசாயிகளுக்கு உணவு, பால் உள்ளிட்ட பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கிட்டத்தட்ட எல்லா கிராமங்களிலிருந்தும் உணவுப் பொருட்கள், இனிப்பு வகைகள் வந்த வண்ணம் உள்ளன. அதை ஒழுங்குபடுத்தி விநியோகிக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

29.வெளிநாடுகளில் வசிக்கும் பஞ்சாபியர்கள் வெவ்வேறு விதமான உதவிகளையும் பொருட்களையும் அனுப்பத் துவங்கியுள்ளனர். கலிபோர்னியாவிலிருந்து 25 குவிண்டால் பாதாம் பருப்பு, ஜலந்தர் நகருக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து டிராக்டர்கள் மூலமாக சிங்கு மற்றும் திக்ரி எல்லைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் பாதாம் பருப்பை ஜலந்தர் அருகே பரக்பூர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் - இப்போது கலிபோர்னியாவில் பாதாம் பருப்பு வியாபாரம் செய்துவருபவர்கள் - தங்களது மாநிலத்து விவசாயிகளுக்காக அனுப்பியிருக்கிறார்கள்.

30.உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சமாஜ்வாதி கட்சித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ், திங்களன்று லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார்.

===தொகுப்பு: எஸ்.பி.ராஜேந்திரன்===

;