கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது மூன்று நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை உத்தரவு
கொடிக்கம்பங்களை அகற்றுவதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில், “மறு உத்தரவு வரும் வரை கொடிக்கம்பங்களை அகற்றக் கூடாது” என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொடிக்கம்பம் அகற்றுவது தொடர்பான சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மேல்முறையீட்டு மனுவில், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு அதிக நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் அமர்வின் முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வாதிகள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். குறிப்பாக இந்த தீர்ப்பு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான Article 19க்கு எதிரானது என்றும் இயற்கை நியதிக்கு புறம்பானது என்றும் வாதிட்டனர். வாதிகள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே தனி நீதிபதி ஜூலை 24 ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என கொடுத்த தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றும் இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளனர். மேலும், தலைமைச் செயலாளர் ஜூலை 10 தேதியிட்ட குறிப்பாணையில் தனி நீதிபதியின் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஜூலை 18 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் மீதமுள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். தற்போது மூன்று நீதிபதிகள் அமர்வு அந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் தலைமைச் செயலாளர் ஜூலை 25 ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்கள் அகற்றுவது குறித்த கருத்துகளை அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களிடமும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் இரண்டு ஆங்கில மற்றும் இரண்டு தமிழ் தினசரி செய்தி நாளிதழ்களில் விளம்பரம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதேசமயம், இந்த வழக்கில் தன்னை வாதியாக சேர்க்க விரும்பும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைவரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் தங்களுடைய இடையீட்டு மனுக்களை சமர்ப்பிக்குமாறும், அதனை உடனடியாக எண்ணிட்டு செய்து அதனை இவ்வழக்கோடு இணைத்து பட்டியலிடுமாறு உயர்நீதிமன்ற பதிவாளரையும் அறிவுறுத்தியுள்ளனர். மேற்கூறிய வழிகாட்டுதல்களை வழங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு அதுவரை பொது இடங்களில் உள்ள எந்த கொடிக்கம்பங்களையும் அகற்றக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளனர்.