articles

img

‘இடிபடும்’ இந்தியா ஒளி மிகுவது எப்போது? - க.கனகராஜ்

இதையெல்லாம் தடுக்க வேண்டிய நீதித்துறை ஆளும் கட்சிக்கு பின்னால் கை கட்டும் என்றால் அவை நீதிபரிபாலனம் என்ற தகுதியை இழந்து விடும். பல நாடுகளிலும் பாசிசம் தலைதூக்கும் போது நீதிமன்றங்கள் பலியாகியிருப்பதை வரலாறு பார்த்தே வந்திருக்கிறது.

அவர்கள் இப்படித்தான் அயோத்தியில் ஆரம்பித்தார்கள். 1949ஆம் ஆண்டு ஒரு இரவில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை பாபர் மசூதியில் வைத்தார்கள். அன்றிலிருந்து பாபர் மசூதி இடிக்கப்படும் வரை அந்த இடம் ராமர் பிறந்த  இடம், அந்த மசூதியை இடித்தே ஆக வேண்டும் என்று இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடுவதை குறிப்பிட்ட இடைவெளியில் உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். கரசேவை செய்யப்போவதாகச் சொல்லி ஒருமுறை நூற்றுக்கணக்கான பேரை போலீஸ் சுட்டுக் கொன்றதாக தவறாக பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள். அப்பாவியாய் அதை நம்பிய வர்கள் ஏராளம். உள்ளூர் மொழி பத்திரிகைகள் இதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து சொல்வதற்கு அச்சப்படும் வகையில் அவர்கள் நடவடிக்கை அமைந்திருந்தது. சில ஆங்கில பத்திரிகைகள் மிகுந்த சிரமம் எடுத்து அதை வெளியுலகிற்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு உணர்ச்சியை தூண்டிவிட்டு ‘இடித்தே தீருவோம்’ என்று ஏன் சொல்கிறோம் என்ற உணர்வே இல்லாத பலரை வெறிடித்து அலைய வைத்தார்கள். உச்சநீதிமன்றத்தில் கல்யாண்சிங் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தபோது மசூதியை பாதுகாப்பேன் என்று உத்தரவாதம் அளித்துவிட்டு மசூதி உடைக்கப்படுவதை வேடிக்கை பார்த்தார். அதன் பிறகும் அவர்களின் வெறியடங்கவில்லை. 

இந்தியாவின் உச்சநீதிமன்றத்தையே அந்த இடத்தை ராமர் கோவில் கட்ட கொடுத்து விட வேண்டும் என்று தீர்ப்பு எழுத வைத்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சரியாகச் சொன்னது போல தீர்ப்பு வழங் கப்பட்டதே தவிர அந்த வழக்கில் நீதி வழங்கப்பட வில்லை. நீதி வழங்கப்படவில்லை என்பதன் பொருள் அநீதி இழைக்கப்பட்டது என்பது தான். அதன்பிறகும் ஒரு வழக்கு நடந்தது. அந்த வழக்கு இடித்தவர்கள் யார், அவர்களுக்கு தண்டனை என்ன என்பது குறித்தது. நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லி விட்டது. இடித்தது உண்மை தான், இடித்தவர்கள் யாரையும் குற்றவாளி என்று சொல்ல இயலவில்லை என்று. ஆனால், இடித்த வர்கள் எல்லாம் நாங்கள் தான் இடித்தோம் என்று மார்தட்டிக் கொண்டு அலைந்தார்கள். இந்தியாவில் நீதிமன்றங்கள் குறித்து சர்வதேச அரங்கில் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த தீர்ப்பில் கூட இந்த இடம் தவிர இதர வழிபாட்டுத் தளங்களை பொறுத்தமட்டில் 1991ஆம் ஆண்டு நாடாளுமன்றம் நிறைவேற்றிய வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் பொருந்தும் என்று தான் குறிப்பிட்டி ருந்தார்கள். அந்த சட்டத்தில் முக்கியமான அம்சம் என்னவெனில் ஜம்மு - காஷ்மீர் தவிர இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் ஒரு வழிபாட்டுத்தலம் 1947 ஆகஸ்ட் 15 அன்று எப்படி இருந்ததோ அப்படியேதான் பாதுகாக்கப்பட வேண்டும். அதன் மீது எந்த தாவாவும் எடுபடாது என்பது தான். வேறொரு மதமல்ல, ஒரு மதத் தில் உள்ள வேறொரு வழிபாட்டு முறைகள் கொண்ட வர்கள் கூட அதனை மாற்ற வேண்டுமென்று கோர முடி யாது என்று அந்த சட்டம் உறுதிபட தெரிவித்திருக்கி றது. இதைத்தான் உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் குறித்த வழக்கில் குறிப்பிட்டிருந்தது.

பாபர் மசூதி இருந்த இடத்தை இடித்தவர்களுக்கே கொடுத்த பிறகு பாபர் மசூதி துவக்கம் தான். காசி யும், மதுராவும் பாக்கி இருக்கிறது என்று வெறிக்கூச்சல் எழுப்பினார்கள். அப்போதே அவர்கள் 300க்கும் மேற் பட்ட, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்த மசூதிகளை யெல்லாம் ஏற்கனவே இவை ஆலயங்கள் இருந்த இடம் என்று பட்டியலிட்டு அவையெல்லாம் இடிக்கப் படும் என்ற பிரச்சாரத்தை துவக்கி விட்டார்கள். இப்போது காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அருகில் உள்ள கியான்வாபி மசூதியை குறி வைத்து தங்கள் இடிப்பு பயணத்தை துவக்கியிருக்கிறார்கள். வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் மிகத் தெளிவாக ஆகஸ்ட் 15, 1947க்கு பிறகு எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று சொன்ன பிறகும், உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை அந்தச் சட்டத்தை புறந்தள்ளிவிட்டு இந்த வழக்கை எடுத்து விசாரிக்கிறார்கள். இந்திய நீதி மன்றங்களில் சொத்து குறித்தான வழக்குகள், அதைத் தொடுத்தவர்கள் வெறுத்துப்போகும் அளவிற்கு கால தாமதத்துடன் நடப்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த வழக்குகள் மட்டும் மின்னல் வேகத்தில் விசாரிக் கப்படுகின்றன. அதையும் தாண்டிய வேகத்தில் தீர்ப்புச் சொல்லப்படுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தில் 370ஆவது பிரிவு ரத்து,  மாநில உருவாக்கம் குறித்த 3வதுபிரிவு குறித்த வழக்கு என்று ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் இருண்ட அறையில் உயிரோடு இருக்கின்றனவா என்று  தெரியாத அளவுக்கு கோமாவில் இருக்கும் நிலையில் தான் இந்த வழக்குகள் இவ்வளவு விரைவாக விசாரித்து தீர்ப்புச் சொல்லப்படுகின்றன. 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் பூமியைத் தோண்டி மனித மனங்களுக்கிடை யில் வெறுப்பு அகழியை வெட்டி விடாதீர்கள் என்கிற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. ஆனால், நீதிமன் றங்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. இந்த வழக்கு விசாரணை, தீர்ப்பு இவை யனைத்தும் இந்திய சமூகத்திற்குள் மிக ஆழமான பிளவுகளை உருவாக்கும் என்று தெரிந்தே இந்த வழக்குகளை நீதிமன்றங்கள் கையாளுகின்றன. நிர்வாகங்கள் முடிவெடுக்கின்றன. ஆட்சியிலி ருப்பவர்கள் ஆதரித்துப் பேசுகிறார்கள்.

ஆட்சியாளர்களுக்கு இயைந்த நீதித்துறையாக மாற்றப்படுவது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. இதுவரையிலும் உச்சநீதிமன்ற கொலிஜி யம் பரிந்துரைக்கிற பெயர்கள் எப்படி மாற்றப்படு கின்றன. ஒன்றிய அரசு தனக்கு விருப்பமான பெயர் களை மட்டும் எப்படி தேர்ந்தெடுக்கிறது. தவிர்க்கவே முடியாமல் உச்சநீதிமன்ற கொலிஜியம் இன்றும் அதே பெயர்களை மீண்டும் பரிந்துரைத்தால் சம்பந் தப்பட்டவர்கள் பணி மூப்பை பின்னுக்குத் தள்ளி குறைந்த காலங்களில் அவர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாவோ, பொறுப்பு நீதிபதிகளா கவோ பதவி வகிக்க முடியும் என்ற நிலைமையை உரு வாக்குகிறார்கள். சிலர் தங்களது தகுதிக்கு இழுக்கு நேர்ந்ததாகக் கருதி தங்களின் இசைவை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கு ஒத்து ஊதாத பலர் பழிவாங்கப்படுகிறார்கள்.  பில்கிஷ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது தண்டனை வழங்கியதற்காக தமிழகத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மாண்பமை தஹில் ரமானி வட கிழக்கு மாநிலத்திற்கு மாற்றப்பட்டார் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக இருந்த சஞ்சிவ் பானர்ஜி தமிழக அரசை சிரமத் திற்குள்ளாக்க ஒத்துழைக்கவில்லை என்பதற்காக மேகாலயாவிற்கு மாற்றப்பட்டார் என்றும் உயர் நீதிமன்ற விவகாரங்களோடு தொடர்புடையவர்கள் கருத்து வைத்திருப்பதை அறிய முடிகிறது.

ஒன்றிய அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் திட்டமிட்டே இதர அமைப்புகளைப் போலவே நீதித் துறையையும் சீர்குலைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம், அம லாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, ரிசர்வ் வங்கி,  யு.பி.எஸ்.சி. என்று ஒவ்வொன்றையும் அவர்கள் திட்ட மிட்டு இடிக்கிறார்கள். இந்த இடிப்புகள் எல்லாவற்றை யும் விட நீதி அமைப்பை இடிப்பதில் தான் இப்போது குறியாக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்கள் கடந்த காலத்தை புதைத்துவிட்டு எதிர்காலத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். இறந்த காலம் எப்படி யாக இருந்தாலும் எதிர்காலத்தை ஏற்றம் கொண்டதாக மாற்றுவதற்கான முயற்சியில் தங்கள் அனைத்து சக்தியையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாஜக தனது ஆட்சியில்  நிகழ்காலத்தை இருண்ட காலமாக மாற்றி எதிர்காலம் சூனியம் என்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இதை மறைப்பதற்காக கடந்த காலம் பொற்காலம், அதை தோண்டி எடுக்கி றோம் என ஒவ்வொரு நாளும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். எதுவரை தோண்டினால் எது கிடக்கும்  என்று எதுவும் நிச்சயமில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு தோண்டினால் கோயில்கள் கிடைக்கலாம். அதற்கும் கீழே தோண்டினால் சமணப்பள்ளிகள், புத்தப் பள்ளி கள் இருக்கலாம், அதற்கும் கீழே போனால் மதங்க ளும், வழிபாடுகளும் இல்லாத உலகம் இருக்கலாம்.

எனவே, எதுவும் இல்லாத நிலையில் உருவாக்கப் பட்டது ஏதோ ஒரு மதம் என சொல்ல முடியும். அதற்கு பின்பு தான் அத்தனையும் வந்திருக்கிறது. எதற்கு முந்தையது, எது என்ற ஆராய்ச்சியில் இறங்கி னால் அதற்கும் முந்தையது எது என்ற கேள்விக்கும் விடையளிக்க வேண்டியிருக்கும். ஆனால், அந்த விடை இந்தியா அல்லது உலகம் இன்று எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வைச் சொல்லாது. மாறாக, இதுபோன்ற முயற்சிகள் சமூகத்தை பிளவு படுத்தி உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பி ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு சாவதையும், ஒட்டவே முடியாமல் பிளவுபட்டுக் கிடப்பதை உறுதிப்படுத்த செய்யவுமே உதவும். பனிப்போர் காலத்தில் மூன்றாவது உலக யுத்தம் வந்தால் என்ன கருவிகள் பயன்படுத்தப்படும் என்று தெரியாது. ஆனால், நான்காவது உலக யுத்தம் என்று  ஒன்று வந்தால் அப்போது கற்கள் தான் ஆயுதங்க ளாக பயன்படுத்தப்படும் என்று உறுதியாக சொல்ல முடியும் என்கிற முழக்கம் உலகம் முழுவதும் ஒலித்தது. மூன்றாம் உலகப் போர், நான்காம் உலகப் போர் எதுவும் தேவையில்லாமல் இருந்த இடத்தில் தன் சொந்த நாட்டு மக்களையே மதத்தின் பெயரால் மோதவிடுவார்கள் என்றால் அடுத்த மோத லுக்கான ஆயுதங்களாக கற்கள் கூட இருக்காது. ஏனென்றால் மனித குலம் தழைக்க வாய்ப்பற்று போகும்.

இதையெல்லாம் தடுக்க வேண்டிய நீதித்துறை ஆளும் கட்சிக்கு பின்னால் கை கட்டும் என்றால் அவை நீதிபரிபாலனம் என்ற தகுதியை இழந்து விடும். பல நாடுகளிலும் பாசிசம் தலைதூக்கும் போது நீதி மன்றங்கள் பலியாகியிருப்பதை வரலாறு பார்த்தே வந்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் உழுபனுக்கே நிலம் சொந்தம் என்று முழக்கம் எழுப்பி, உரிமைகளை நிலை நாட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் தற்கால நீதிமன்றங்களில் சில இடித்தவனுக்கே இடம் சொந்தம் என்று சொல்வதன் மூலம் காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி கை பிடித்து அழைத்துச் செல்கின்றன. இந்தியா ஒளி மிகுந்த எதிர்காலத்தை நோக்கியா? இருண்ட காலத்தைத் தேடியா? என்பதை முடிவு செய்யும் முக்கிய மான தருணத்தில் நிற்கிறது. 

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு உறுப்பினர்

;