articles

img

அனுதாபம் உருவாக்கும் தந்திரம் எடுபடுமா? - வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன்

மோடியின் அரசியல், குறிப்பாக அவரது தேர்தல், சூழ்ச்சித் திறன்கள் குறித்த நுண்ணோக்கை அகமதாபாத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் கூட்டாளியுமான யதின் நரேந்திரபாய் ஓசா தனிப்பட்ட மற்றும் அமைப்புரீதியான மட்டங்களில் அடிக்கடி வெளிப்படுத்தி வந்திருக்கிறார். 2001ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் கேசுபாய் படேலிடம் இருந்து குஜராத்தின் இடைக்கால முதலமைச்சராக மோடி பதவியேற்றுக் கொண்ட போது, அது குறித்த ​​ஓசாவின் அவதானிப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது. கேசுபாய் பட்டேல் தலைமையில் இருந்த பாரதிய ஜனதா கட்சி அரசிற்கு எதிராகப் பரவலாக இருந்து வந்த ஆட்சியெதிர்ப்பு மனநிலை, ஊழல் மற்றும் குறிப்பாக பூஜ் பகுதியில் நிலநடுக்கங்களுக்குப் பின் ஏற்பட்ட விளைவுகளை நிவர்த்தி செய்வதில் இருந்த நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றிற்கு மத்தியில் அந்த மாற்றம் அவசியமாகி இருந்தது.

அதுவரை நடந்த பல இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 2002ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவைத் தோற்கடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ‘அனைத்து வகைகளிலும் இயங்கக் கூடிய, எந்தத் தடையும் மீறுகின்ற,  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, தக்கவைத்துக் கொள்வதற்காக திட்டமிட்டு எந்தவொரு இரக்கமற்ற வழியையும் மேற்கொள்ளக் கூடிய முற்றிலும் மாறுபட்ட அரசியல்வாதியை எதிர்கொண்டிருப்பதால் கேசுபாய் பட்டேல் அல்லது வேறு எந்த பாஜக தலைவருக்காகவும் காங்கிரஸ் பயன்படுத்தி வந்திருக்கின்ற அதே அளவுகோல்களை மோடியை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்திட வேண்டாம்’ என்று சோனியா காந்தியை அப்போது ஓசா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை ஓசாவின் எச்சரிக்கையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பின்னர் முஸ்லீம்-விரோதப் படுகொலை மாநிலத்தில் நடந்தேறியது. ஆட்சிக்கு எதிரான காரணியால் தூண்டப்பட்ட அரசியலிலிருந்து முற்றிலும் வகுப்புவாத துருவமுனைப்பைச் சார்ந்ததாக மாநில அரசியலை அந்தப் படுகொலை மாற்றியமைத்தது. மீதி நடந்தவை அனைத்தும் இப்போது வரலாறாகி நிற்கின்றன.   

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் பின்னணியில் ஃப்ரண்ட்லைனிடம் பேசிய ஓசா மீண்டுமொரு முறை இப்போது அரசியல் சூழ்ச்சிகளில் குறிப்பாக தேர்தல் தந்திரங்களில் செயல்படுத்தப்படுகின்ற ‘தனித்த மோடி பிராண்ட் நடவடிக்கைத் தொகுப்புகள்’ பற்றி குறிப்பிட்டார். ‘அமைதியான ஆலோசனை என்று தொடங்கி, பொருள்கள் மீதான தூண்டுதல்கள், தண்டனைகள் என்று நகர்ந்து இறுதியாக முரண்பாட்டை உருவாக்கும் வகையில் இலக்கு வைக்கப்பட்ட குறிப்பிட்ட பிரிவினரின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சி செய்வதற்கான நான்கு முனை கொண்ட பண்டைய இந்திய உத்தியான சாம, தான, பேத, தண்டம் பற்றி அரசியல் வியூகவாதிகள் பேசி வந்திருக்கிறார்கள். ஆனால் அது பலருக்கும் பலனளிப்பதாக இருந்திருக்கவில்லை. உண்மையில் அது மற்றபிற அரசியல் சக்திகளைக் காட்டிலும் அந்தக் கட்டளையை செயல்படுத்துவதற்கான வழிகளில் ஹிந்துத்துவாவின் பல்வேறு அரசியல் தந்திரங்களைக் கொண்டு தேர்தல் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்ற சங்பரிவார் அமைப்புகளுக்கே பலனளிப்பதாக இருக்கிறது. சங்பரிவாருக்குள்ளும்கூட, மோடி பிராண்ட் நடவடிக்கைத் தொகுப்புகளுக்கான திட்டம் கூடுதல் திட்டங்களைக் கொண்டு அமைந்துள்ளது. அந்த கூடுதல் திட்டங்கள் யாவும் வெவ்வேறு வகையில் மாறுபட்ட நுணுக்கங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பல 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் வழக்கம் போல சங்பரிவாரங்களிலும், ஆட்சியிலும் உள்ள பல குரல்கள் தங்கள் பங்கையாற்றி வருகின்றன.      

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மைச் சமூகங்களின் ரத்தத்திற்காகப் போராடுகின்ற தர்ம சன்சத் போன்ற கலவரத்தைத் தூண்டுகின்ற ஹிந்துத்துவா வகுப்புவாத மாநாடுகளை ஏற்பாடு செய்தல், மதச்சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூக நிர்வாகங்களால் நடத்தப்படுகின்ற தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கக் கட்டுப்பாடுகளை விதித்தல், அத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வகுப்புவாதப் பிரச்சரங்களைக் கட்டியெழுப்புவதுடன் மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்களின் வகுப்புவாத பாகுபாடு கொண்ட வளர்ச்சித் திட்டங்களை முன்னுறுத்தி பிரச்சாரம் செய்தல்  போன்ற செயல்பாடுகள் அத்தகைய நகர்வுகளுக்குத் துணைபுரிகின்ற நடவடிக்கைகளுக்குள் அடங்குகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் கார் 2022 ஜனவரி 5 அன்று ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ஹுசைனிவாலா அருகே உள்ள மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டது

இவையனைத்தையும் தவிர, ஜனவரி மாதம் ஆறாம் நாள் பஞ்சாப் ஃபெரோஸ்பூரில் தனது கார் தொடர்பிலான பாதுகாப்பு மீறலின் அடிப்படையில் அங்கிருந்த மேம்பாலம் ஒன்றில் 15-20 நிமிடங்கள் சிக்கித் தவித்த மோடி அந்த நடவடிக்கைத் தொகுப்புகளின் கூறுகளில் ஒன்றின் மையத்தில் தன்னைத் தனியாக நிறுத்திக் கொண்டிருந்தார். அந்தக் கூடுதல் நடவடிக்கையை அனுதாபத்தைத் தூண்டுகின்ற நடவடிக்கை என்றே நான் கூறுவேன். ஆக குஜராத்தில் இருபதாண்டுகளுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தைத் தூண்டுவதாக வெறுப்புணர்ச்சி இருந்தது என்றால் 2022இல் நடைபெறுகின்ற தற்போதைய பிரச்சாரங்களில் அனுதாப உணர்வு முக்கிய அங்கமாக தூண்டப்படுகிறது.   

ஆயினும் 2002இல் நடந்த வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரத்தைப் போல இப்போது அனுதாபத்தை தூண்டும் பிரச்சாரத்துடனான தற்போதைய தொகுப்பு பயனுள்ளதாக இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு ‘உறுதியாகத் தெரியவில்லை’ என்று ஓசா பதிலளித்தார், ‘இதுபோன்று அனுதாபத்தின் அடிப்படையிலான காரணி முன்வைக்கப்பட்டிருக்கும் விதமே அவர்களிடமுள்ள விரக்தியுணர்வை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது. பாதுகாப்பு மீறல் குறித்து பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசு என்று  இரண்டு மாறுபட்ட விசாரணைகள் உருவான நிலையில் பாதுகாப்பு மீறல் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்த அந்த  பெரோஸ்பூர் மேம்பாலத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது பெருமளவிலான பொதுமக்களுக்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. ஆனாலும் பாதுகாப்பு மீறல் குறித்த உரையாடல்கள் எழுந்திருக்கும் அரசியல் சூழல்கள் குறிப்பிடத்தக்கவையாகவே இருக்கின்றன.

மோடி தேர்தல் தொடர்பான தனது முதல் பயணங்களில் ஒன்றாக பஞ்சாபிற்குச் சென்றிருந்தார். மோடி கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் பேரணி மிகப்பெரிய தோல்வியாக இருந்தது என்பதையே அனைத்து தகவல்களும் சுட்டிக் காட்டுகின்றன. அந்த இடத்தில் கூடுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் பேர்கூட அங்கே திரண்டிருக்கவில்லை. மோடியால் 2021 நவம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் மிகவும் சங்கடமான முறையில் திரும்பப் பெறப்பட்ட விதம் அரசு மற்றும் சங்பரிவார் அணிகளிடம் உத்தரப்பிரதேசம், ஹரியானாவில் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறாக அவர்கள் உருவாக்குகின்ற அனுதாபம் பாஜகவை முன்னோக்கி எடுத்துச் செல்லாது என்றே நான் கருதுகிறேன்.      

உத்தரப்பிரதேசத்திற்கான போர்

தேசிய தலைநகர் மற்றும் தேர்தலுக்கு உட்பட்ட உத்தரப்பிரதேசம், பஞ்சாபில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இந்த கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், உத்தரப்பிரதேசத்தில் நடக்கப் போகின்ற போர் பாஜகவிற்கும், சங்பரிவாரில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகவே இருக்கிறது. குஜராத்தில் 2000களின் முற்பகுதியில் மோடி உருவாக்கிய மாடலை நெருக்கமாகப் பின்பற்றியே முதல்வர் ஆதித்யநாத் தலைமையின் கீழ் இறுதி ஹிந்துத்துவா ஆய்வகமாக உத்தரப்பிரதேச மாநிலம் முன்னிறுத்தப்பட்டது. வகுப்புவாத துருவமுனைப்பு தந்திரத்திற்கான தொடக்கமாக குஜராத் மாநிலம் இருந்த போதிலும், ஹிந்தி மையப்பகுதியில் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் புவியியல் நிலை, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் என்று பல காரணிகளால் அந்த மாநிலத்தில் அந்த திட்டத்திற்கான முன்னேற்றம் இன்னும் முக்கியமானதாக இருப்பதாக சங்பரிவார் உள்வட்டாரத்தினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பிரதிபலித்த சாதி, வகுப்புவாத சமன்பாடுகள் ஹிந்துத்துவா சமூக-அரசியல் அடையாளம் மாநிலத்தில் வலுப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டின. பாஜக, சங்பரிவாரத்தின் பிற அமைப்புகளின் தலைவர்கள் அந்தப் போக்கு 2022ஆம் ஆண்டில் மேலும் வலுப்படும் என்று மிகுந்த உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் இருந்து வந்தனர். 2020-21ஆம் ஆண்டில் தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் கோவிட்-19இன் பேரழிவுகரமான தாக்கம், அதை முறையாகக் கையாள்வதில் ஆதித்யநாத் அரசாங்கம் கண்ட தோல்வி, அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆண்டு முழுவதும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் போன்றவை ஹிந்துத்துவா சக்திகளின் ஆற்றலும், வீச்சும் குறைந்து வருவதை சங்பரிவார் தலைமைக்கும், பாஜகவிற்கும் தெளிவுபடுத்திக் காட்டி இருக்கின்றன.

தொற்றுநோயால் ஏற்பட்ட வீழ்ச்சி

‘ஒருபுறம் கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட சமூக, பொருளாதார நெருக்கடிகள், மறுபுறத்தில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களின் பாதகமான தாக்கம் போன்றவை மதம் மற்றும் வகுப்புவாத அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற ஹிந்துத்துவா பார்வைக்கு முற்றிலும் மாறாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சமூகத்தின் பெரும் பகுதியினரை வாழ்வாதாரம் குறித்த கவலைகள் தொடர்பான அளவுருக்களாக தங்களுடைய வாழ்க்கையைப் பார்க்கத் தூண்டி விட்டன. தொற்றுநோயின் முதல் அலையின் போதே அத்தகைய சமூகப் போக்கு காணப்பட்டது என்றாலும், தொற்று நோயின் இரண்டாவது அலை, 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அது மென்மேலும் தெளிவாகத் தெரிந்தது’ என்று இப்போதுள்ள நிலைமை குறித்து அரசியல் பார்வையாளர் ஷீத்தல் பி.சிங் கூறுகிறார். அந்தச் சூழல் நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் சமூக, சாதி சமன்பாடுகளை மோசமாக்குவதற்கான புதிய முயற்சிகள் தேவைப்படுகின்றன என்ற உணர்தலை பாஜக, சங்பரிவார் அமைப்புகளிடம் அதிகரித்து வைத்திருப்பதாக ஷீத்தல் சிங் சுட்டிக் காட்டுகிறார்.    

‘ஆனாலும் 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 2013ஆம் ஆண்டு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அமித் ஷா திறம்படச் செய்ததைப் போல வகுப்புவாதக் கலவரங்களை வெளிப்படையாக உருவாக்குவதற்கான சூழல் இப்போது மாநிலத்தில் இல்லை. மாநிலத்தில் நடைபெற்றுள்ள விவசாயிகள் இயக்கத்தின் - அவர்களுடைய போராட்டத்தின் - மையப்பகுதிகளில் ஒன்றாக குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசம் இருந்தது. பாஜக, சங்பரிவாரங்களின் மதவெறி மற்றும் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த இயக்கம் மக்களை மீண்டும் மீண்டும் எச்சரித்து வந்தது. மீண்டும் மீண்டும் 2013-14 சூழலை அது தேசத்திற்கு நினைவூட்டிக் காட்டியது. மேலும் சிறுபான்மை முஸ்லீம் சமூகம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் மக்கள் மட்டத்தில் சங்பரிவார் அமைப்பினரின் ஆத்திரமூட்டல்களுக்குள் தாங்கள் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனத்துடன் இருந்தது. இத்தகைய சூழலில் உத்தரப்பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளைக் கொண்டுள்ள உத்தரகாண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வகுப்புவாதச் சூழலை மோசமாக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த புதிய நுணுக்கமான விளையாட்டிற்குத் தெளிவான எடுத்துக்காட்டாகவே இப்போது நடத்தப்பட்ட தர்ம சன்சத்கள் இருந்தன’ என்று ஷீத்தல் சிங் கூறுகிறார்.      

முஸ்லீம் சிறுபான்மையினரை மாஃபியாக்கள், குண்டர்கள் என்று சொல்லி அவர்களை ஒடுக்க வேண்டும் என்ற அழைப்பை தர்ம சன்சத்கள் மற்றும் ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விடுத்த பிறகும் அவர்களுடைய இலக்கிற்கு ஏற்ற அளவிலான வகுப்புவாத துருவமுனைப்பு எட்டப்படவில்லை என்பதை சங்பரிவார் உள்வட்டாரத்தினர் ஒப்புக் கொள்கிறார்கள். மாநிலத்தில் 2014 மக்களவைத் தேர்தல் மற்றும் 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு மிகவும் சாதகமான சூழல் இருந்ததாகக் கருதுகின்ற அவர்கள் தற்போதுள்ள சூழல் அதைப் போன்று இருக்கவில்லை என்கின்றனர். அத்தகைய சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் தொடரப்பட்டு வருகின்றன என்றே அந்த உள்வட்டாரத்தினர் கூறி வருகின்றனர். அத்தகைய முயற்சியின் ஒரு பகுதியாகவே பிரதமரின் காருக்கான பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது என்பது குறித்த பிரச்சாரம், மோடியின் உடல்நலம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை மையமாகக் கொண்ட பிரச்சாரங்களை முன்னெடுக்கும் வகையில் கூடுதல் ஹிந்துத்துவா அடையாளத்துடன் அவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

பாதுகாப்பு மீறல் நடந்த மறுநாளில் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக மந்திரங்களை ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் முப்பது நிமிட சந்திப்பை மோடி நடத்தினார். சரியாக அங்கே என்ன நடந்தது என்பதை தான் அறிய விரும்புவதாகவும், அது வெறுமனே பாதுகாப்பு குறைபாடு அல்லது மீறலாக இருக்கவில்லை என்றும் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் அந்த சம்பவம் குறித்து தனது கவலையை வெளியிட்டார்.

அதே நேரத்தில் பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக போபாலின் குஃபா (குகை) கோவிலில் பிரார்த்தனை செய்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதினார். பிரதமரின் பாதுகாப்பிற்காக மஹாகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர் கோவில்களிலும், மாநிலத்தில் உள்ள மற்ற முக்கிய கோவில்களிலும் மந்திரங்கள் ஓதப்பட்டன. பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்த திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் ‘இன்று மெஹர் காளிபாரி கோவிலுக்குச் சென்று, அன்னை காளிக்கு பிரார்த்தனை செய்து, சிவலிங்க அபிஷேகம் செய்தேன். பாரத மாதாவின் தவப்புதல்வனான நமது அன்புக்குரிய பிரதமர் திரு நரேந்திரமோடிஜிக்கு நீண்ட ஆயுளை வழங்கி  அன்னை காளியும் போலேநாத்தும் ஆசீர்வதிக்கட்டும்’ என்று ட்வீட் செய்திருந்தார். அவ்வாறு மந்திரத்தை ஓதியவர்களில், தங்களுடைய பிரார்த்தனைகள் குறித்து ட்வீட் செய்தவர்களில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றோரும் அடங்கியிருந்தனர். 

போபாலில் உள்ள கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட ஆயுளுக்காக மத்தியப் பிரதேச முதல்வர்  சிவராஜ் சிங் சௌகான் ஜனவரி 6 அன்று மதச் சடங்குகளை நடத்தினார்

மத்திய உள்துறை அமைச்சகமும், பஞ்சாப் அரசும் பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணை நடத்த தனித்தனி குழுக்களை அமைத்துள்ள நிலையிலும் பாதுகாப்பு மீறல் குறித்த விவாதம் வேகமாகத் தொடர்கிறது. உள்துறை அமைச்சகம் அமைச்சரவை செயலகத்தில் பாதுகாப்புச் செயலராக உள்ள சுதிர் குமார் சக்சேனா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் இந்திய உளவுத்துறையின் (ஐபி) இணை இயக்குநர் பல்பீர் சிங், சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவர் எஸ்.சுரேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்று பலமுறை கூறியிருக்கிறார். அந்த சம்பவம் குறித்து மாநில அரசு விசாரித்து வருவதாகவும், அதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மாநில அரசின் இரு உறுப்பினர் கொண்ட விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி மெஹ்தாப் சிங் கில், உள்துறைச் செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.      

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறுகின்ற தேர்தல் பிரசாரத்தின் மூலம் இந்த விவகாரம் குறித்து பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே அரசியல் காழ்ப்புணர்வு தொடரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.  

https://frontline.thehindu.com/profile/author/Venkitesh-Ramakrishnan-23154/

நன்றி: ஃப்ரண்ட்லைன்

தமிழில்: தா.சந்திரகுரு

;