2004 காலகட்டத்தில் இடதுசாரி களால் உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்டத் தின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் தான் இன்றைய கிராமப்புற இந்தியாவை உயிரோடு வைத்திருக்கிறது என்பதை மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரது மூன்று நாள் ஆய்வுக் கூட்டங்கள் உறுதி செய்தன. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்பைப்பட்டி, அட்டப்பட்டி, பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, வஞ்சிநகரம், கருங்காலக்குடி, 18 சுக்காம்பட்டி, பாண்டாங்குடி, சொக்கலிங்கபுரம், கொட்டாம்பட்டி, மண்ணப்பச்சேரி, குன்னாரம்பட்டி, சேக்கிபட்டி, பட்டூர், கேசம்பட்டி, கச்சிராயன்பட்டி, மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், பள்ள பட்டி, சூரப்பட்டி, பொட்டப்பட்டி, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, வலைச்சேரி பட்டி, கம்பூர், அய்யாபட்டி ஆகிய 27 ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மே 30, 31 ஜூன் 1 ஆகிய மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டார்.
எத்தனையெத்தனை மனுக்கள்!
மக்கள் சந்திப்பு துவங்கிய தும்பைப்பட்டி முதல் நிறைவு பெற்ற எட்டிமங்கலம் வரை எவ்வளவு மனுக்கள். சாதாரணமாய் முதியோர் உதவித் தொகை துவங்கி உள்ளூரின் விவசாயம் காக்க தடுப்பணை கட்டு வது வரை மக்கள் கைகளில் மனுக்கள் சுழன்றன. மிகச் சாதாரணமான சில விசயங்கள் கூட அடித் தட்டு மக்களை சென்று சேர்வதற்கு ஆகும் இடை வெளியினை அருகில் நின்று உணர முடிந்தது. மூன்று நாள் ஆய்வின் சரிபாதி 100 நாள் வேலைத்திட்டத்தின் ஆய்வு தான். ஏனெனில் ஒரு புறம் இந்த திட்டத்தினை அடியோடி அழிக்கத் துடிக்கும் கொள்கை கொண்டதோர் ஒன்றிய அரசு, மற்றோர்புறம் ‘நிழலில் உட்கார்ந்து 200 ரூவா வாங்கும் பெண்கள்’ என நையாண்டி பேசி இத்திட்டத்திற்கு எதிரானதாய் உருவாக்கப்பட்டுள்ள பொதுமனநிலை. இரண்டு ஆண்டுகள் சுழன்றடித்த பெருந்தொற்றுக் காலத்தினால் ஏழை எளிய மக்கள் நேரடியாய் பாதிக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் கிராமப்புற ஏழைகளின் உயிரைக் காத்து நின்ற ஓர் கனவுத்திட்டம் இது என்பதை கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உணர முடிந்தது. சு.வெங்கடேசன் ஆய்வு செய்த பணித்தளங்களில் எத்தனை பெண்களின் கண்ணீர். எல்லாமே ஓரே குரல் தான். ‘‘சார் நீங்க எங்களுக்கு 100 நாள் வேலையை 100 நாளும் குடுக்கச் சொல்லுங்க உங்களுக்குப் பெரிய புண்ணியமாப் போகும்’’ என கைக்கூப்பிய தருணங்கள் நிழலாடிக்கொண்டே இருக்கின்றது. சமூக வலைதளங்களில் வைரலாகிய அழகி என்னும் மூதாட்டி சு.வெங்கடேசனோடு மகிழ்ந்து சிரிக்கும் புகைப்படம் துவங்கி அவரை ஆரத்தழுவிய நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் மூதாட்டிகளின் படங்கள் அனைத்துமே இக்கோரிக்கையின் உடன் வந்தவையே. 27 கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நூறு நாட்கள் வழங்கப்பட வேண்டிய வேலை வாய்ப்பு என்பது, 23 ஆயிரம் குடும்பங்களுக்கு சராசரியாக 42.71 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஒருநாள் கூலியாக 280 ரூபாய் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழங்கப்படக் கூடிய கூலி 170 ரூபாயில் துவங்கி சராசரியாக 228 ரூபாய் என்ற அளவில் மட்டுமே உள் ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான குடும்பங் களுக்கு கூலி இழப்பு ஏற்படுவது தெரியவந்தது.
கிட்டத்தட்ட எல்லா கிராமங்களிலுமே ‘தினசரி வேலை தாருங்கள்; வேலை பார்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று நாடாளுமன்ற உறுப்பினரிடம் எளிய மக்கள் வலிய கோரிக்கையை முன்வைத்தனர். 100 நாட்கள் வேலை தருவதை உறுதிப்படுத்த மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஊராட்சி யிலும் அழுத்தமாக கேட்டுக் கொண்டனர். ‘‘இடதுசாரிகளின் போராட்டத்தால் உருவாக்கப் பட்ட இச்சட்டத்தை உறுதியுடன் அமல்படுத்த கொட்டாம்பட்டி ஒன்றியத்தை தேர்வு செய்து விரிவான ஆய்வை நடத்தியுள்ளோம். இதனடிப்படையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுவில் பரிசீலனை செய்வோம். இத்திட்டத்தில் உள்ள குறைபாடு களை போக்க உரிய முயற்சிகள் மேற்கொள்வதோடு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்வதற்கான கூடுதல் கவனத்தை செலுத்துவதாகவும் சு.வெங்கடேசன் எம்.பி., உறுதியளித்தார்.
குடும்பங்களுக்கு புதிய அட்டை வழங்குவதில், வேலை நாட்கள் குறைவு, சம்பளக் குறைவு, சம்பளம் வழங்குவதில் உள்ள பாகுபாடு, வேலைத்தளத்தில் உள்ள அடிப்படை வசதிகள், தொடர்ச்சியாக வேலை தர வேண்டிய அவசியம், சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதம், வேலையின் கடினத்தன்மை, மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை மற்றும் அவர்களுக்கான அட்டை வழங்குவதில் உள்ள குறைபாடு என சட்ட அமுலாக்கத்தின் மீது விரிவான ஆய்வாக இது அமைந்திருந்தது. பிரதமர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் சார்ந்த திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டம் கல்விக் கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் அமலாக்கம் பற்றிய ஆய்வும் நடைபெற்றது.
கடனாளி ஆக்கும் திட்டம்
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற தொகையை வைத்துக்கொண்டு எந்த ஒரு குடும்பமும் தனக்கான இருப்பிடத்தை உருவாக்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே ஓரளவு வசதி வாய்ப்புள்ளவர்கள் மட்டுமே வீடு கட்டு வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இதனுடைய அமலாக்க நடைமுறையை பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்தையும் கடனாளி ஆக்கும் திட்டம் என்றே குறிப்பிட முடிகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் பயன் பெற விரும்புபவர்கள் கடனாளியாக மாற வேண்டிய நிலைமை உள்ளது. வீடு கட்டிய பின்னர் தான் அதற்கான தொகையை அரசு ஒதுக்கி வருகிறது. இத்திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை வைத்து வீடு கட்டுவதில் பல பிரச்சனைகள் உள்ளது.இதனால் பலர் வீடு கட்டாத நிலைமையை நேரில் பார்க்க முடிந்தது.
ஜல் ஜீவன் மிஷன்
அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் என்ற பெயரில் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் ரூபாய் 1000 கட்ட வேண்டும். இல்லை யெனில் 100 நாள் வேலை உத்தரவாதத் திட்டப் பணத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இத்தொகை பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழாய் இணைப்புக்கும் வருடம் 600 ரூபாய் குடிநீர் கட்டணமாக செலுத்த வேண்டியது அவசியமாகும். மோடி அரசாங்கம் மிகவும் விளம்பரப்படுத்தும் திட்டம் இது. ஆனால் குடிநீரை பணம் கொடுத்தால் தான் பெற முடியும் என்ற நிலைமையைத்தான் இது உருவாக்கியுள்ளது. மக்களுக்கான திட்டமாக இல்லாமல் மக்களைச் சுரண்டும் முறையிலேயே மோடி அரசின் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வின் போது களத்திலே இதைக் கண்டறிய முடிந்தது. இந்த ஆய்வின் போது பொது குழாய் களை காண முடியவில்லை என்பது முக்கியமான ஒன்றாகும்.
கைவிடப்படும் எளிய மக்கள்
முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டிய தூரம் இன்னும் ஏராளமாக உள்ளது. வலைசேரிப்பட்டி ஊராட்சியில் ஒரு மூதாட்டி சு.வெங்கடேசன் எம்.பி.யை சந்தித்து, முதியோர் ஓய்வூதியம் வழங்க கண் கலங்கிய வாறு கோரிக்கை முன்வைத்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட விஏஓவை அழைத்து மூதாட்டியின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். ரேஷன் கடை, குடிநீர் வசதி, சுடுகாட்டுப் பாதை, தெருவிளக்கு, சமுதாயக்கூடம், பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் என ஒவ்வொரு கிராமத்திலும் கோரிக்கைகள் ஏராளம். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் கூட கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் தன்னிறைவை அடையவில்லை. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக எளிய மக்கள் படுகின்ற துன்பத்தை உயரத்திற்கு துயரத்திற்கு அளவில்லை என்பதை ஆய்வுப் பயணம் உணர்த்தியது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை விரிவான முறையிலே கொண்டு செல்வதற்கு தொடர் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினரும் மேற்கொண்டுவருகின்றனர்.
எந்த எம்.பி.,யும் வரல!
எல்லாக் கிராமங்களிலும் மனு அளிப்பதற்கு கிராமத்தின் பெரியவர்கள் வருவார்கள், தனி மனுக் களை வழங்கிட பாதிப்பிற்குள்ளானோர் வருவார்கள் என்பதெல்லாம் இயற்கை தான். உள்ளூர் இளை ஞர்கள் காத்திருந்து மனு அளிப்பது அவர்களுக்கு அயற்சியைத் தரும் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால் ஒவ்வோர் கிராமத்திலும் மனு அளித்த இளைஞர்களிடம் ஏன் இவரிடம் இவ்வளவு ஆர்வமாக மனு அளிக்கிறீர்கள் எனக் கேட்டோம். அதற்கு குன்னாராம்பட்டியில் மனு அளித்த இளைஞர் பதில் இதுதான்! ‘‘உண்மையாக எங்க ஊருக்கெல்லாம் எந்த எம்பியும் இதுவரை வந்து மனு வாங்கியதே இல்லை. இது ரொம்ப புதுசா இருக்கு. எல்லாரும் இவருகிட்ட மனுகுடுத்தா கட்டாயம் பிரச்சனையை சரி செய்வாருனு சொன்னாங்க. நானும் அவரை தொடர்ந்து பேஸ்புக்ல பார்க்கிறேன். அதான் எவ்வளோ நேரமானா லும் நின்னு கொடுத்துட்டு போறேன்’’ என்றார். 27 ஊராட்சிகள், 60 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு, சுமார் பத்தாயிரம் மக்கள் சந்திப்பு என இச்சந்திப்பு சாத்தியப்படுத்தியவை ஏராளம். இன்னும் இன்னும் நீண்டு கிடக்கும் செல்லாத தடங்களிலும் நேசம் செய்வோம்.