articles

முதலாளித்துவம் எனப்படும் கொலை பாதகம்! - இரா.சிந்தன்

உலகில் பட்டினிச் சாவுகளே இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பு ‘ஆக்ஸ்பாம் சர்வதேசம்’ ஆகும். இந்த அமைப்பினர் சமத்துவமற்ற நிலைமையை ஆய்வு செய்து அவ்வப் போது அறிக்கைகளாகவும் வெளியிடுகிறார்கள். சமீபத்தில் ‘சமத்துவமின்மை என்ற கொலைபாதகம்’ என்ற பொருள்படும் அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருந்தார்கள்.

வளங்கள் ஒருபக்கம்,  வறுமை மறுபக்கம்

கொரோனா காலத்தில், உலகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடீஸ்வரர் உருவாகியுள்ளார். பெரும் பணக்காரர்கள் 10 பேருடைய சொத்துக்கள் 100 %  அதிகரித்துள்ளன.  உலகில் வாழும் வெறும் 2755 பெரும் பணக்காரர்கள், கடந்த 14 ஆண்டுகளில் சம்பாதித்ததை விடவும் அதிகமான தொகையை கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேர்த்துள்ளார்கள். மறுபக்கத்தில் 16 கோடிப் பேர் புதிதாக அதீத வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2வது உலகப் போரில் மடிந்த எண்ணிக்கைக்கு நிகரான மரணங்கள் கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ளன.  அமேசான் நிறுவன முதலாளி ஜெப் பெசோஸ் இந்தக் காலத்தில் சேர்த்திருக்கும் சொத்துக்களின் மதிப்பை மட்டும் கணக்கிட்டால், அது உலக மக்கள்  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்து வதற்கு ஆகும் செலவிற்கு சமமான தொகை ஆகும்.  இப்படி சொத்துக் குவித்திருக்கும் உலகின் 10 பெரும் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை செலவு செய்யலாம் என முடிவு செய்தால், ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் செலவு செய்தாலும் கூட, அது தீர்ந்து போக 414 ஆண்டுகள் ஆகும். அவர்கள்  தங்களின் சொத்துக்களை அமெரிக்க டாலராக அடுக்கி அதன் மீது அமர்வது என்று முடிவு செய்தால் அந்த உயரம் பூமியில் இருந்து நிலாவிற்குச் செல்லும் தொலைவில் பாதியாக இருக்கும் என்கிறார்கள். 

கள்ளக் கூட்டில் குதூகலித்த அதானி

இந்தியாவில் கொரோனா காலம் தொழிலாளர் களை வேலையிழப்பில் தள்ளியிருக்கிறது. 2 கோடிக்கும் அதிகமானவர்கள் புதிதாக வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் இதே காலகட்டத்தில் அம்பானி, ஆசியாவின் பெரும் பணக்காரராக செல்வம் குவித்துள்ளார்.  ஆக்ஸ்பாம் அறிக்கை இன்னொரு ஆபத்தான போக்கினை எடுத்துக் காட்டுகிறது. பிரதமர் மோடியின் கூட்டுக் களவாணியான அதானியின் சொத்துக்கள், இந்த பெருந்தொற்று காலகட்டத்தில்  800% அதிகரித்துள்ளன. இவ்வாறு சொத்து உயர  காரணமாக இருந்தது நிலக்கரி மற்றும் துறைமுக வருவாய்கள்தான். ஆனால் பாருங்கள், இதே காலகட்டத்தில் நாட்டின் பல மாநிலங்கள் நிலக்கரி தட்டுப்பாட்டை எதிர்கொண்டன. மக்களின் தட்டுப்பாடும் நெருக்கடியும் இந்த முதலாளிக்கு வாய்ப்பாக மாறுகின்றன. 

நாட்டின் அதிகார மையத்தோடு நெருக்கமான கூட்டு வைத்திருக்கும் அதானி, பொதுச் சொத்துக்களை வேகமாக கைப்பற்றியே தனது செல்வச் செழிப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். அப்பட்ட மான முதலாளித்துவ கொள்ளையையே மோடியின் கொள்கைகள் வேகப்படுத்தியுள்ளன.  அரசாங்கங்களிடம் பணம் இல்லையா?  தடுப்பூசி விநியோகத்திற்கு விலை நிர்ணயித்து, அதற்காக கண்டனங்களை எதிர்கொண்டார் பிரதமர் மோடி. அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதுதான் அதற்கான காரணமாக முன்வைக்கப்பட்டது.  உலகம் முழுவதுமே முதலாளித்துவ அரசாங்கங்கள், அவசியமான செலவுகளைச் செய்ய தங்களிடம் பணமே இல்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள். ஆனால் அது உண்மையே அல்ல. இந்த காலகட்டத்தில் அரசாங்கங்கள் 16 லட்சம்  கோடி டாலர்களை பெருந்தொற்று மேலாண்மை யின் பேரால் செலவு செய்துள்ளன. அப்படி பொருளா தாரத்தை ஊக்கப்படுத்துவதாக செலவிடப்பட்ட தொகையானது, பங்குச் சந்தைகளையே உயரச் செய்துள்ளது. இதனால்தான் கோடீஸ்வர கோமான்களின் சொத்துக்கள் பல்கிப் பெருகியுள்ளன. தடுப்பூசிக்காக செலவு செய்த தொகையின் மூலம் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் லாபம் குவித்திருக் கின்றன. பணத்திற்கு பஞ்சமில்லை, யாருக்காக செலவிடுகிறோம் என்பதுதான் கேள்வி.  

சலுகை மேல் சலுகை

முதலாளித்துவ நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. பெரும் பணக்காரர்கள் மீதான தனிநபர் வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தினை பயன்படுத்தி இந்தியாவில் 39%  புதிய பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். மொத்த எண்ணிக்கை 142. மோடி அரசாங்கம் கார்ப்பரேட் வரிகளை குறைப்ப தாக முடிவு செய்து 36 மணி நேரத்தில் அதைச் செய்தும் கொடுத்திருக்கிறது. இந்த முடிவின் காரணமாக நமது நிதிநிலை அறிக்கையில் 1.5 லட்சம் கோடி ரூபாய் சுமை ஏற்றப்பட்டுள்ளது. இந்திய கோடீஸ்வரர்களில் முதல் பத்து நபர்களுடைய சொத்துக்களை கணக்கிட்டால், நாட்டில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் 25 ஆண்டுகளுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்க ஆகும் செலவுக்கு ஈடான தொகையாக உள்ளது. 10  சதவீத பணக்காரர்கள் மீது 1 % கூடுதல் வரி விதித்தால் 17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க  முடியும். 98 கோடீஸ்வரர்கள் மீது மட்டும் 1 % வரி போட்டு வசூலித்தால் நாடு முழுவதும் உள்ள அனைத்து  குடும்பங்களுக்கும் 7 ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட முடியும். 3 பணக்காரர்களின் சொத்துக்கள் மீது 1 % வரி போட்டோம் என்றால் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்திவிட முடியும்.

உலகப் பெரும் பணக்காரர்களிடம் அதிகரித்த சொத்துக்கள் மீது மட்டும் வரி போட்டிருந்தால், உலக நாடுகளால் ரூ.60 லட்சம் கோடி திரட்டியிருக்க முடியும். அவ்வாறு வரி போட்டிருந்தாலும் கூட அந்த பணக்காரர்களின் சொத்துக்கள் அதிகரிக்கவே செய்திருக்கும் என்கிறது ஆக்ஸ்பாம் அறிக்கை. எந்த  முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் இதைச் செய்வதற்கான துணிவு இல்லை. மாறாக சலுகைகளை  அளித்திருக்கிறார்கள். மறுபக்கம் தொழிலாளர் களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு நிறுவனங் களுக்கும் எதிரான நிலைப்பாடுகளையே ஆட்சி யாளர்கள் எடுத்துவருகிறார்கள். 

பின் நோக்கிச் செல்கிறோம்

உண்மையில் இந்த போக்கு சமீபத்தில் தொடங்கி யது அல்ல. உலகமயமாக்கல்  தொடங்கிய பிறகு முதலாளித்துவ அநீதிகள் வேகமெடுத்தன. 1995 ஆம் ஆண்டில் இருந்து உலகில் உருவாக்கப்பட்ட மொத்த செல்வ வளங்களை ஏழைகள் அனுபவிக்கவில்லை. உலக மக்களில் 50% ஏழைகளுக்கு கிடைத்த சொத்துக் களை விட 20 மடங்கு அதிகமான சொத்துக்களை வெறும் 1% பணக்காரர்கள் தங்கள் வசம் சேர்த்துக்  கொண்டுள்ளார்கள். இப்போதும் அது தொடர்வ தனால் நாம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய சமத்துவமற்ற நிலைமைக்கு பின்னோக்கிச் சென்றிருக்கிறோம். 

4 நொடிக்கு ஒரு மரணம்

கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்று - பேரிடர் களில் முதலாளித்துவத்தின் அணுகுமுறைகளால், 4 நொடிக்கு ஒரு மரணம் நடக்கிறது. ஆம், சமத்துவ மற்ற நிலைமையால் ஒவ்வொரு நாளும் 21300 மரணங்கள் நடக்கின்றன. சரியான நேரத்தில் மருத்துவம் கிடைக்காததால் ஏழை நாடுகளில் வாழும்  மக்களில் 56 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் மரண மடைகிறார்கள். 2020 ஆம் ஆண்டில் பெண்களின் மரணம் 17 லட்சம் அதிகமாக நடந்துள்ளது. பெண் குழந்தைகள் கருக்கலைப்பு 15 லட்சம் அதிகமாக நடந்துள்ளது. கொடூரமான வன்முறைகளுக்கு ஆளாகி பெண்கள் மரணித்த எண்ணிக்கை 67000.  இதுமட்டுமல்லாமல், ஏழைகளின் சராசரி ஆயுள் குறைவாக உள்ளது. மற்றவர்களை விடவும் முன்னதாகவே மரணத்தை சந்திக்கிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் அடிமட்டத்திலும் அடிமட்டத்தில் வாழும் பட்டியலினப் பெண்களின் சராசரி ஆயுள், மேட்டுக்குடி சாதிகளில் வாழும் பெண் களின் ஆயுளை விட 15 ஆண்டுகள் குறைவாக உள்ளது. 

பூமியை வெப்பமாக்கும் முதலாளித்துவம்

உலகத்தையே பேரழிவில் தள்ளக்கூடிய மாபெரும் நெருக்கடியாக புவி வெப்பமாதல் பிரச்சனை  உள்ளது. அதற்கு காரணமான கரியமில வாயுக்கழிவு களை, ஏழைகள் உருவாக்குவதை விடவும் 8 ஆயிரம் மடங்கு அதிகமான அளவில் உருவாக்குவது வெறும் 20 பெரும் பணக்காரர்கள் மட்டுமே. மேலும், 92% கரியமில வாயுக்கழிவுகளை பணக்கார நாடுகளே வெளியிடுகின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றப் பிரச்சனைகளால் ஒவ்வொரு ஆண்டும் 2,31,000 பேர் மரணிப்பார்கள். 

உடனடியாகச் செயல்படுவோம்

முதலாளித்துவ நாடுகளின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் மனித குலத்தை பாதுகாத்திட முடியாது. கொரோனா பெருந்தொற்றாக இருந்தாலும், புவி வெப்பமயமாகும் பிரச்ச்சனையாக இருந்தாலும் லாபத்தை மட்டுமே தேடும் அணுகுமுறை தீர்வைத் தராது.  இந்த நிலைமைக்கு ஒரே மாற்று சோசலிசமே. அதுவே சோசலிசத்தின் அடிப்படை விதியாகும். சமத்துவமில்லாத நிலைமைகள் மரணத்தை மட்டும் ஏற்படுத்துவதில்லை, குற்றங்கள் அதிகரிக்கின்றன; மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் காட்டும் நம்பிக்கையையும் குறைக்கிறது. வன்முறைகள் அதிகரிக்கின்றன. சோசலிசம் மட்டும்தான் ‘தடுப்பூசி, பொதுச் சரக்கு’ என்ற முழக்கத்தை ஏற்கிறது. சோசலிச நாடுகள் அதீத வறுமையை ஒழித்துக்கட்டி முன்னேற்றத்தை தக்கவைத்துள்ளன.  எனவே, அனைவருக்கும் நலவாழ்வை உறுதி செய்கிற ஒரு அமைப்பிற்காக போராடுவோம். இயற்கையை பாதுகாத்து, சூழலை மேம்படுத்தி, மனித குலத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக இயங்கும் சமூக அமைப்பு முறையை ஏற்படுத்துவோம். அனை வருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, லாப வெறியை பின்னுக்குத்தள்ளி, அனைத்து மக்களின் மேம்பாட்டுக்கான திட்டமிடலை முன்நிறுத்துவோம்.




 

;