articles

img

கார்ப்பரேட் வரியும் முதலாளித்துவ உலகமும் - ஆர்.எஸ்.செண்பகம்

அரசு பொது கட்டமைப்புகளில் ”மனிதக் கட்ட மைப்புகளின் முக்கியத்துவத்தை” (மருத்துவம், குழந்தைகள் பராமரிப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் உள்ளிட்டவை) ஒரு நுண் கிருமி உலகிற்கே உணர்த்தி யுள்ளது.  வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் நவீன தாராளவாதத்தின் அசுர தாண்டவத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் தருணம் இது.  உலகளவில் பொரு ளாதாரம் மூச்சுத் திணறி மூழ்கிக் கொண்டிருக்கையில், வெளியேறும் காப்பு வளையங்களில் பொது மனித கட்டமைப்புகளுக்கு முக்கிய பங்குள்ளது.   உதா ரணத்திற்கு, அமெரிக்க பொருளாதார மீட்சிக்கு முதற் கட்டமாக ஒதுக்கப்பட்ட தொகை 1.9 டிரில்லியன் டாலர்கள்.  தற்போது ஜனாதிபதி ஜோ பைடன் செலவிட உத்தேசித்திருப்பது 2.3 டிரில்லியன் டாலர்கள்.   இதற்கான நிதியினை கார்ப்பரேட் வரியின் மூலம் பெறுவதென்று பைடன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.  டொனால்டு டிரம்ப் ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் வரி யினை 35 சதவீதத்தில் இருந்து 21ஆகக் குறைத்தார்.  தற்போது பைடன் இதனை 28 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்கிறார். 

• கார்ப்பரேட் வரி எங்கு குறைவாக இருக்கிறதோ அந்த நாடுகளை நோக்கி மூலதனம் நகர்ந்துவிடும் என்றும், கார்ப்பரேட் கம்பெனிகள் தன்னுடைய முக்கிய செயல்பாட்டு தளத்தை விட்டு வரி செலுத்த வேண்டாத புகலிடங்களை நோக்கி நகரும் நிலைப்பாட்டினை எடுத்துவிடும் என்றும், இதற்கெதிராக விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  கடந்த 30 ஆண்டுகளாக, எந்த நாடு கார்ப்பரேட் வரி பட்டியலில் கீழே இருப்பது என்ற போட்டி நாடுகளுக்கிடையே நிலவிக் கொண்டி ருக்கையில்,  அமெரிக்க கருவூலச் செயலாளர் ஜெனட்  ஆலன் உலகம் முழுமைக்கும் ஒரு குறைந்தபட்ச கார்ப்ப ரேட் வரியினை (21சதவீதம்) தீர்மானிக்கலாம் என்கிறார்.

பொருளாதார மந்தநிலையும் சரிந்து வரும் வரி வருவாயும்

பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் நியாயமாக செலுத்த வேண்டிய வரிப் பங்கினை முறையாக செலுத்தச் செய்வதற்கே ஒரு அரசியல் உறு திப்பாடு நாடுகளுக்கு தேவைப்படுகிறது.  அரசின் வரு மானப் பற்றாக்குறையை ஈடு செய்ய இது தான் சாத்தியமான உத்தியாக இருக்க முடியும்.  இச்சூழ லில், இந்திய அரசாங்கம் கார்ப்பரேட்டுகளின் பெரும் இலாபங்களின் மீதான வரியை உயர்த்த வேண்டும். ஆனால், இன்று இந்தியாவில் புதிய கம்பெனிகளுக் கான வரி விகிதம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீத மாகக் குறைக்கப்பட்டுள்ளது.  ஜெனட் ஆலனின் முன் மொழிவினை இந்தியா அலட்சியப்படுத்துவதற்குக் காரணம், இந்த அரசாங்கத்திற்கு மக்கள் நலன் குறித்த அக்கறையில்லை, சமூக ஜனநாயக நிகழ்ச்சி நிரலில் விருப்பமில்லை, மாறாக, கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை  அளிக்கவே விரும்புகிறது. 

சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கார்ப்பரேட் வரியினை குறைப்பதன் மூலம் அதிக முதலீட்டினை ஈர்க்கலாம் என்று மூன்றாம் உலக நாடுகளுக்கு புத்தி மதி கூறுவதும் நடந்தது.  ஆனால், இந்நாடுகளுக்குள் வந்த அந்நிய நேரடி மூலதனத்திற்கும், மொத்த முத லீட்டிற்கும் கார்ப்பரேட் வரி குறைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை புள்ளி விவரங்கள் நிரூபித்துள்ளன.  இதனால் இந்நாடுகள் வரி வருமான வீழ்ச்சியினை சந்தித்தது தான் மிச்சம்.  குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுள்ள நாடுகளில் இந்த வருமான வீழ்ச்சி அதிகமாக இருந்தது.  காரணம் இந்த நாடுகளில் கார்ப்பரேட் வரி வருமானத்தின் பங்கு மொத்த வரி வரு மானத்தில் அதிகமாகும். 

தாளம் தப்பி ஜதி போடும்  வருமான பகிர்மானம்

வருமானத்தை உயர்த்த, மறைமுக வரியை உயர்த்துவது, கல்வி, சுகாதாரம், ஏழை மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை வெட்டுவது என்ற நடவடிக்கை களில் இந்நாடுகள் ஈடுபடுகின்றன.  இரண்டு முறைக ளிலுமே ஏழைகளிடமிருந்து செல்வந்தர்களுக்கு வரு மானம் உறிஞ்சி எடுக்கப்பட்டு மடைமாற்றம் செய்யப் படுகிறது.  மூன்றாம் உலக நாடுகளில் தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் எந்த அளவிற்கு முதலீடு செய்யும் என்பது அந்நாடுகளின் உள்நாட்டு சந்தைகளை பொறுத்தது.  அதன் கிராக்கியை பொறுத்தது.  கார்ப்ப ரேட் வரி குறைப்பு என்பதன் மூலம் கம்பெனியின் வரி  விதிப்பிற்கு பிந்தைய லாபம் மட்டும் கூடுமே தவிர, அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு மூல தனம் ஒரு நாட்டிற்குள் வராது.  உண்மையில் அரசின் கார்ப்பரேட் வரி குறைப்பு என்பது சிக்கன நடவடிக்கைக ளுக்கே இட்டுச் செல்லும்.  இதனால் பொருளாதாரம் மேலும் நசிவடையும்.  மூன்றாம் உலக நாடுகளின் சம்பள விகிதத்திற்கும் முன்னேறிய நாடுகளின் சம்பள விகிதத்திற்கும் உள்ள வித்தியாசம் பெரியது.  இது கார்ப்பரேட்டுகளின் முதலீட்டு தீர்மானத்தில் ஒரு  முக்கிய பங்கினை ஆற்றும் காரணியாக இருக்கும்.  அதே போல ஒரு நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், படித்த - பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளும் பெரு முதலாளிகளின் முதலீட்டு தீர்மானத்தில் முக்கிய பங்காற்றுபவையாக இருக்கும். 

2021-ஜுன் 4,5 தேதிகளில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்கும், 2021-ஜூலை 9,10 தேதிகளில் நடை பெற்ற ஜி 20 மாநாட்டிற்கும் பிறகு, 139 நாடுகளில் 130 நாடு கள் கார்ப்பரேட் வரி மறுசீரமைப்பிற்கு ஒத்துக் கொண்டுள்ளன.  பொதுவான உலகளாவிய குறைந்த பட்ச வரி 15 சதவீதம் என்பது தற்போதைய சராசரி கார்ப்ப ரேட் வரி விகிதமான 25 சதவீதத்தை விட மிகக் குறை வாகும்.  இது நேர்மையானதுமல்ல, நியாயமானது மல்ல, போதுமானதும் அல்ல. உண்மையில்  பல வளரும் நாடுகளின் கார்ப்பரேட் வரி விகிதம் 15 சத வீதத்தை விட அதிகமாகும்.  வளரும் நாடுகள் கோரியது 30 முதல் 50 சதவீதமாகும்.  அந்த முறையில் பார்த்தால் இந்த உலகளாவிய குறைந்தபட்ச வரி விகிதம் 15  சதவீதம் என்பது தேவையின் அடிப்படையிலும், சாத்தியமான அடிப்படையிலும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. 

பெரு நிறுவனங்களின்  வரி ஏய்ப்பு உத்திகள்

பெரு நிறுவனங்கள் தங்கள் இலாபங்களை வரி புகலிடங்களுக்கு மாற்றுவதன் காரணமாக, உலகெங்கி லும் உள்ள அரசாங்கங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் $240 பில்லியன் நிதி வருவாயை இழக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்க ளால் ஈட்டப்படும் வெளிநாட்டு லாபத்தில் 50 சதவீதம் வரி புகலிடங்களுக்கு மாற்றப்படுகிறது.  இந்த பற்றாக்குறை அமெரிக்காவை மட்டுமல்ல, உலக ளவில் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது.  பன்னாட்டு நிறுவனங்கள் வரிவிதிப்பைத் தவிர்ப்ப தற்காக, அவற்றின் அறிவிக்கப்பட்ட செலவுகள் மற்றும் வருவாயை துணை நிறுவனங்களுக்கு “பரிமாற்ற விலை நிர்ணயம்” மூலம் மாற்றி, தாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்கின்றன.  இவை “base erosion and profit shifting” (BEPS)” என விவரிக்கப்படும் நடைமுறைகள் ஆகும். டிஜிட்டல்  நிறுவனங்களில் விஷயங்கள் இன்னும் மோசமாகி விட்டன. அவற்றில் மிகப்பெரியவை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான டாலர்களை லாபம் ஈட்டு கின்றன. ஆனால் எங்கும் எந்த வரியும் செலுத்துவ தில்லை. இதனால் நாடுகளுக்கு ஆண்டுக்கு 500 பில்லி யன் டாலர் இழப்பு ஏற்படுகிறது என்று சர்வதேச நாணய நிதியம் 2019இல் மதிப்பிட்டுள்ளது. 

சர்வதேச கார்ப்பரேட் வரிவிதிப்பு சீர்திருத்தத்திற்கான பரிந்துரை

மகா தொற்றின் போது இ-வர்த்தகம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக வளர்ந்துள்ளது. மேலும் டிஜிட்டல் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் டிஜிட்டல் வணிகச் செயல்பாடுகளும் தங்களின் நியாயமான வரிகளை செலுத்துவது என்பது மிகவும் முக்கியமானது. எனவே டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் அல்லாத வணிகங்களுக்கு இடையே வேறுபாடு இல்லாமல், விரிவான வரிச் சீர் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய விதியானது, சமதள ஆடுகளத்தை நிறுவவும், வரித் தவிர்ப்பு மற்றும் ஏய்ப்பிற்கான வாய்ப்புகளை மட்டுப் படுத்தவும் உதவும். பன்னாட்டு நிறுவனங்களின் மீதான உலகளாவிய குறைந்தபட்ச வரி  மட்டுமே நாடுகளுக்கு இடையிலான வரிக் குறைப்பு போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.  மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இலாபங்க ளை வரி புகலிடங்களுக்கு மாற்றுவதை தடுக்கும்.

ஒரு பன்னாட்டு நிறுவனம் என்பது உண்மையில் ஒரே நிறுவனமாக செயல்படுவதால், அது வரி நோக் கங்களுக்காகவும் அவ்வாறே கருதப்பட வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மொத்த உலகளாவிய லாபம் கணக்கிடப்பட்டு, பின்னர் விற்பனை, வேலை வாய்ப்பு மற்றும் பயனர்கள் (டிஜிட்டல் நிறுவனங்களு க்கு) அடிப்படையில் சில சூத்திரங்களின்படி நாடுகள் முழுவதுக்குமாக பிரிக்கப்பட வேண்டும்.  இன்னும் தெளிவாக சொல்வதென்றால், குறைந்த வரி அதிகார வரம்புள்ள நாடுகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் இலாப விகிதத்தை மாற்றுவதைத் தடுக்க குறைந்த பட்ச கார்ப்பரேட் வரி சர்வதேச அளவில் ஒப்புக் கொள் ளப்பட வேண்டும் (ICRICTயின் பரிந்துரை 25%).

மற்றொரு அம்சம், வரி விதிக்கக்கூடிய லாபத்தை விநியோகிக்க பயன்படுத்தப்படும் சூத்திரம் பற்றியது. OECD-யானது விற்பனை வருவாயை மட்டுமே அளவுகோலாக பரிந்துரைக்கிறது. அதற்கு பதிலாக, வளரும் நாடுகளின் ஜி24 குழு (ஜி-24, வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் நிலையை ஒருங்கிணைக்கும் அமைப்பு), விற்பனை/பயனர்கள் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

ஜி7 - கூஜா தூக்கிகள்

ஜி7 செய்துள்ள சமரச நடவடிக்கை பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு சிறிதளவே பயனளிக்கக் கூடியது. முன்பே, வளரும் நாடுகள் வரி விகிதாச்சார வருவாயில் அதிக இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. 24 பேர் கொண்ட  தேசிய அரசுகளுக்கிடையேயான குழு (ஜி-24, வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் நிலையை ஒருங்கிணைக்கும் அமைப்பு) முன்வைத்த முன்மொழிவு, பேச்சுவார்த்தையில் உரிய பரிசீலனை செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷய மாகும்.  மேலும், ஜி7 திட்டம் உண்மையான மாற்றத்தி ற்கு வழிவகுக்காது. இந்த முன்மொழிவு ICRICT இன் ஒற்றை வரிவிதிப்பு திட்டத்திலிருந்து வெகு தொலை வில் உள்ளது. 10 சதவீத வரம்பிற்கு மேல் உலகளாவிய லாபத்தை ஈட்டும் (அதிக லாபம் என்று இதனை வரை யறுக்கிறது) பன்னாட்டு நிறுவனம் மூலம் தங்கள் நாட்டில் ஈட்டப்படும் லாபத்தில் குறைந்தபட்சம் 20 சத வீதத்திற்கு மட்டுமே வரி விதிக்கும் உரிமையை அர சாங்கங்கள் பெற வேண்டும் என்று அது பரிந்துரைக்கி றது.  ‘அதிக லாபம்’ என்ற வரையறையின் விளைவு - தகு தியான நிறுவனங்களின் எண்ணிக்கையை 200க்கும் கீழாக குறைக்கிறது.   

எடுத்துக்காட்டாக, அமேசான், அதன் உலகளா விய லாபம் 10 சதவீத வரம்பிற்குக் கீழே இருப்பதால், விதிவிலக்கு அளிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக் கது. ஆப்பிள் மற்றும் பேஸ்புக் போன்ற பல டிஜிட்டல் ஜாம்பவான்கள் ஏற்கனவே இந்த திட்டத்தை வரவேற்ற தில் ஆச்சரியமில்லை. கூடுதலாக, சுரங்கம் மற்றும் நிதி  போன்ற சில துறைகளுக்கேற்றபடி சில செதுக்கல்களை  செய்வதற்கான கோரிக்கைகளும் ஏற்கனவே வந்துள் ளன.  எனவே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த  வடிவத்தில், கூடுதல் வரி வருவாயை பெறுவதென்ப தோ அல்லது அதன் மூலம் வளரும் நாடுகள் சிறிதளவே னும் லாபம் அடைவது என்பதோ சாத்தியமாகாது.  ஜி7 வரிவிதிப்பு முறையில் கொண்டு வந்த மாற்றமோ மிகக் குறைவு. ஆனால் அது எடுத்துள்ளது மிகப் பெரிய பொருளாதாரப் படியென்ற சித்தரிப்பும், அதற்கு பரந்த வரவேற்பினை உலக அளவில் ஏற்படுத்தியதென்ப தும் சந்தைப்படுத்தலின் வெற்றி. மீண்டும், ஜி7 உலகின் சக்தி வாய்ந்த சுயநலக் குழு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
 

;